“மனித இனமானது புகழ்மிக்க மேம்பாடுடைய வரலாற்றை படைத்திருக்கின்றது. அது மேலும் மேலும் வளர்ச்சிகொண்ட ஓர் மனித இனமாக தன்னை அடையாளப்படுத்தி முன்நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.ஆகவே மனிதனே வரலாற்றை படைக்கும் சக்திவாய்ந்தவன்“ என மனிதனின் வரலாற்றுச் (!!!) சாதனை குறித்து சந்தேகத்திற்கிடமின்றி அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் புகழ்மிக்க தத்துவாதியான தோழர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.
இவ்வாறான மேற்படி கார்ல் மார்க்ஸ் அவர்களின் கருத்தியல் சூத்திரத்திலிருந்தே (formula) ‘‘இயற்கை வரலாற்றை எவ்வாறு மானிட வரலாறு நிர்ணயிக்கும் ,அதேபோல் மானிடவரலாறு எவ்வாறு இயற்கை வரலாற்றை நிர்ணயிக்கும் (பிரபஞ்ச அதிர்வுகளை)‘‘ என்பதான கேள்வியும் எழுகின்றது. ‘மானிட மேம்பாடு‘ குறித்த மார்க்சிய கதையாடல் (story) என்பது வெறும் ஊகங்கள் தான் என்பதை இன்று எமது சர்வதேச அதிகார சக்திகள் நரூபித்துக்கொண்டிருக்கிறது.
மனித இருப்பானது இயற்கையாகவே கலாசார தன்மையுள்ளதாகவும் அதேநேரம் காலாசார ரீதியாகவே மனித இருப்பானது இயற்கை அம்சமாகவுமே நிலைபெற்று வருகின்றது. இவ்வாறிருக்க மானிட ‘அரசியல் அதிகார வரலாறானது‘ வேறு ஓர் திசையில் எம்மை அலைக்கழித்தவாறும், தமக்குள்ளேயே வேற்றுமைகளையும், பகமைகளையும், வஞ்சக உணர்வுகளையும் பேணியவாறும் நகர்ந்து செல்கின்றது.
இவ்வாறான நயவஞ்சகமான, அதிகார நலன்களையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஓர் நடவடிக்கையாகவே UN panel report என வெளிவந்துள்ள அறிக்கை குறித்த எமது அபிப்பிராயம் ஆகும்.
மேற்படி அறிக்கை குறித்து மேற்குலக நாடுகளின் தரவுகளையோ, அறிக்கையூடாக மேற்குலக ஆளுமைகள், அதனது ஏகாதிபத்திய நலன்கள், அதற்கான பின்னணிகள் என்ன என்பது குறித்தோ நாம் விரிவாக பேசப்போவதில்லை. அல்லது இலங்கை அரசின் சர்வதேச ஆதரவு நாடுகளும் அதனது எதிர்பார்ப்புகளும் என்ன என்பது போன்ற அறிவியல் தர்க்க முற்போக்கு நியாயங்களையும் நாம் பேசப்பேவதில்லை.
இந்த மேற்குலகத்திடம் யுத்தங்களினால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு நியாயம் கேட்பதென்பது ஓர் கேலிக்குரிய விடயம் என்பதாகவே நாம் கருதுகின்றோம்.
முதலாவது உலக யுத்தமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களையும்,பொருள் இழப்புக்களையும் கவனத்தில் கொண்ட ஓர் மனிதாபமான நடவடிக்கையாக தோற்றம் பெற்றது தான் UNO எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை என்பது. சேர்பிய மாணாக்கனான கேப்ரியல் பிரின்செப் என்பவன் ஆஸ்திரிய தேசத்து இளவரசனான பெர்டினாந் என்பவனை கொன்றதன் விளைவாகவே முதலாவது யுத்தம் ஆரம்பமானது என வரலாறு கூறப்பட்டது.
மேற்குலக நாடுகள் ஜேர்மனிக்குச் சொந்தமான குடியேற்ற நாடுகளை அபகரிப்பதற்கும் அவற்றை தமக்குள் பங்குபோட்டுக் கொள்வதற்குமாகவே முதலாவது உலக யுத்தம் நீடிக்கப்பட்டது. பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகள் ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளை தாம் அபகரிப்பதற்காக முதலாவது உலக யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள். அதன் பிற்பாடு யுத்த விசாரணை செய்வதற்காக “நியாயத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக் கொண்டு எல்லா நாடுகளிலும் ஒற்றுமை உணர்வுடன், மீண்டும் யுத்தம் வராமல் தடுக்க வேண்டும். இதில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துள்ள நாடுகள் ஒன்றுக் கொன்று விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும், பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் சமாதான முறையில் அவற்றிற்கு தீர்வு காண முயலவேண்டும். அதனையும் மீறி ஒரு நாடு பிற நாட்டுடன் யுத்தம் செய்ய முனையுமானால் மற்ற நாடுகள் யுத்தத்தை தொடங்கிய நாட்டிற்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.“ எனும் வரயறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை என்பது.
பொருள் இழப்புகளுக்காக ஜேர்மனியிடமிருந்து நஸ்ட ஈடாக பல கோடிகளை அபகரித்துப் பங்குபோட்டவர்கள் இந்த சர்வதேச மனிதாபிமானிகள். ஆனால் யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன செய்தது இந்த சர்வதேச மனிதாபிமானம்? அதன்பிற்பாடும் என்ன நடந்தது? ஐக்கியநாடுகளின் அங்கத்துவ நாடுகள் அனைத்துமே எந்த நாட்டில் யுத்தம் நிகழ்ந்தாலும் அதை தூண்டி விடுவதிலும் அதனூடாக தமது நலன்களை பேணுவதுமாகவே செயல்பட்டு வந்துள்ளன. யுத்தத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு 1927இல் ஸ்தாபிக்கப்பட்ட ‘சற்றம் இல்ல விதிமுறை‘ (chatham house rule)யின் கதியும் அதே நிலைதான். எனவே இதுபோன்ற மேற்குலக நாடுகளின் மனிதாபிமானச் செயல்பாடுகள், மனிதாபிமான நியாயங்கள் அனைத்தையும் விளிம்பின் ஓரத்திற்கு ஒதுக்கிவிட்டு , UN panel report குறித்து தமிழ் தரப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நியாயங்களை கிளறுவதும், அவ் அறிக்கை குறித்த எமது பார்வை என்ன என்பதுவுமே இக்கட்டுரையின் நோக்கம்.
UN panel report யை ஆதரித்தும், அதன்படி இலங்கை அரசிற்கு தண்டனை வழங்கவேண்டும் என அபிப்பிராயங்களும் கட்டுரைகளும் எழுதிவரும் தமிழ் தரப்பினரை பல வகையில் பிரித்து ‘மேயலாம்.‘ புலிகள் தோற்றுவிட்டனரே என்ற அவமானத்தாலும், அதனூடாக தமது சொந்த-சமூக-பொருளாதார ஆளுமைகள் சிதைந்து போனதன் இயலாமையினாலும் இவ்வறிக்கையை பலமாக ஆதரிக்கும் ஒருவகையினர் உள்ளனர்.
இவர்களே முன்பு தொடர்ந்து யுத்தத்தை ஆதரிப்பவர்களாகவும், யுத்தத்தால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை, இழப்பில்லாமல் சுதந்திரம் பெறமுடியாதென்றும் இறுதிவரை கூறிக்கொண்டு யுத்தத்தை தூண்டிவிடுபவர்களாக இருந்தவர்கள்.
அடுத்ததாக தொடர்ந்து புலியையும் எதிர்த்து, தொடர்ந்து அரசையும் எதிர்த்து வருபவர்கள். இவர்களில் பல வகையுண்டு. அதில் ஒருவகையினர் புலி அரசியல் எதிர்ப்புடன் ‘மக்கள் நலனுடன்‘ கூடிய தமிழ்த் தேசிய இன விடுதலை குறித்துப் பேசியும் வருபவர்கள் . இவர்கள் என்றுமே மாற்றத்திற்கு உள்ளாகாத ஓர் சிந்தனையின் வெளிச்சத்தின் ஊடாக அனைத்தையும் பார்ப்பவர்கள். அதனூடாக மானிட இருப்புகளின் அனைத்து செயல்பாடுகளுக்குமான தீர்வுகளை முன்கூட்டியே அறிந்து கொண்ட ‘ஞானிகள்.‘
இவ்வாறாக தமிழ் புத்திஜீவிகள் எனப்படுவோர் UN panel report யை ஆதரிப்பவர்களாகவும், இலங்கை அரசை சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதிலும் மிக ஆர்வமாக இருந்து வருகின்றார்கள்.
“ஒரு சமூக பாதுகாப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிர்வாகம் என்பது எவ்வளவோ அநீதிகளை செய்து வருகின்றபோதும் எமது வீட்டில் களவு போனால் நாம் பொலிசிடம் சென்றுதான் முறைப்பாடு செய்யவேண்டியுள்ளது அதேபோன்று சர்வதேசம் என்னதான் மோசமாக இருந்தாலும் அதனிடம் தான் நீதி கேட்கவேண்டியுள்ளது.“என ஒரு நியாயம் கூறப்பட்டு, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படைக்கவும் அலோசனைகள் வழங்கப்படுகின்றது.
முன்பொருகாலத்தில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களின் உரிமை மறுக்கப்படடதெனக் கூறி உரிமை தர மறுத்த அரசிடம் நியாயம் கேட்டது தமிழ்த் தேசியத் தலைமை. அது தரவில்லை. எனவே தமிழ்த் தேசியம் சர்வதேசத்திடம் நியாம் கேட்டது. அந்த சர்வதேசமோ ஆயுதத்தை தந்து போராடு என தள்ளிவிட்டது. தமிழ்த் தேசியமும் போராடியது, கொன்றது, சுட்டது, சுட்டவனைச் சுட்டது, சுடக்கண்டவனைச் சுட்டது, சும்மா இருந்தவனை சுட்டது, அது, இது என நியாயம்கூறி கண்டமேனிக்கும் சுட்டுத்தள்ளியது. இறுதியில் மிஞ்சியதுதான் என்ன? என்ன கிடைத்தது எமக்கு! கிடைத்தது நியாயமா? தோல்வியா…? அல்லது கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல அனுபவமா?
எம்மை யுத்தம் செய்ய தூண்டியவர்களே இன்று யுத்தக் குற்றத்தை விசாரிக்கும் நீதிபதிகளாக எமக்கு காட்சி தருகின்றார்கள். அதைவேறு நாம் நியாயப்படுத்தி பேசுகின்றோம். “பத்து நாட்கள் யுத்தம் செய்வதைவிட, பத்து வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” என்பது உண்மையில் மனிதநேயம் கமளும் வார்த்தைகள் தான். கேட்கவே வாய் ஊறுகின்றது. சமாதானத்திற்காகவும்,யுத்தங்களை தவிர்ப்பதற்காகவும் தொடர்ந்து பேசுவதென்பது ஆரோக்கியமானதே. ஆனால் மேலாதிக்க நலன்களும் ஆதிக்க-அதிகார பலமும் இவற்றை அலட்சியப்படுத்தியே தமக்கான நியாயங்களை கற்பித்து வருகின்றது. இதற்கான போதுமான ஆதாரங்கள் எம்மிடம் இல்லையா?புலிகளுடன் பேசுவதற்கு நாம் எத்தனை வருடங்கள் காத்திருக்க முடியும்? அதற்கான எந்த நம்பிக்கையை புலிகள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்? புலிகளும் அனுமதித்ததில்லையே பேசுவதற்கு. அவர்களுக்கு தெரிந்த மொழி என்பது கொல்வதுதானே. புலிகளின் பாசிசப் பரிமாணத்தின் எல்லைகள் குறித்து சர்வதேசமே வியப்பில் ஆழ்ந்து, புருவங்களை உயர்த்தியதே! 25 வருடத்திற்கு மேலாக பேசுவதற்கே அனுமதி மறுத்த புலிகளை எந்த வகையில் எம்மால் வெற்றி கொள்ள முடிந்திருக்கும்.
இலங்கை அரசால் புலிகள் அழிக்கப்பட்டபோது நாம் அதை பகிரங்கமாக வரவேற்றோம். அதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு தலித் சமூகம் சார்ந்த நன்றியையும் தெரிவித்தோம். எம்மால் செய்ய வேண்டிய காரியமானது செய்யமுடியாதபோது அக்காரியம் பிறர்ஊடாக நிறைவேற்றப்படும் பட்சத்தில் அதற்காக நாம் நன்றி சொல்வதில்லையா? அதுதானே உயர்ந்த மனிதப் பண்பு. அவ்வாறானா ஓர் மனிதநேயப் பண்பாகத்தான் புலிகள் அழிக்கப்பட்டபோது நாம் இலங்கை அரசிற்கு கொடுத்த மதிப்பும், ஆதரவென்பதும். அப்படியானால் அரசாங்கம் மக்களை கொல்லவில்லையா என எங்களைப் பார்த்து கேட்பவர்களுக்கு நாம் ஓர் விடயத்தை கூறிக்கொள்கின்றோம்.
தற்போதைய இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அங்கத்தவர்களாகிய நாம் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தும், புலிகள் மாற்று இயக்கத்தை கொலை செய்ய முற்பட்ட காலத்திலிருந்தும், ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தும் தொடர்ச்சியாக யுத்தத்தை எதிர்த்தும் கொலைகளை கண்டித்தும் வந்தவர்கள். யுத்தத்திற்கு எதிராகவும்,மக்களின் மரணங்களுக்கு எதிராகவும் 2009 ஆண்டு மே மாதத்திலிருந்து குரல் கொடுத்தவர்களல்ல நாம். அல்லது புலிகளின் தமிழ் மக்கள் மீதான கொலைகளை மட்டும் விமர்சித்துக்கொண்டு புலிகளால் இரணுவம் கொல்லப்படும்போது மனதிற்குள் குதூகலித்த முற்போக்கு மார்க்சிய இடதுசாரிகளும் அல்ல நாம்.
இலங்கையில் உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் மேம்பாட்டில் (கோட்பாட்டளவேனும்) அக்கறையுடைய அரசியல் கட்சியாக செயல்பட்டுவந்த அரசியல் கட்சி எதுவாக இருந்ததென்பதையும், மேற்குலக ஏகாதிபத்திய நலன்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இலங்கையின் அரசியல் கட்சிகள் எதுவாக இருந்ததென்பதையும் தொடர்ச்சியான இலங்கை அரசியல் வரலாறு அறிந்தவர்களால் இனங்காணக்கூடியதாக இருக்கும்.
மேற்படி இரண்டு பிரிவான அரசியல் கட்சிகளைவிட ‘பேசப்படும் தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனைகளை’ தீர்ப்பதற்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது கட்சிகள் எமது புலனுக்கு தென்படுகின்றதா? அப்படி தென்படுமாயின் அது எது? அல்லது காலங் காலமாக இலங்கையில் ஆட்சிசெய்து வந்த மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு கட்சிகளில் எக்கட்சி ஓரளவிற்கேனும் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருக்கின்றது?
“பத்து நாட்கள் யுத்தம் செய்வதைவிட, பத்து வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” என்ற தீர்மானத்திற்கு நாம் வந்து விட்டோம். அகவே எந்தக்கட்சியுடன் நாம் பேசுவது? எந்தக்கட்சியில் நம்பிக்கை கொள்வதென்பதே எம்முன்னால் எழும் கேள்வியாகும். இலங்கையில் வாழும் இனங்கள் தமது தேவைகளையும், தமக்கு மறுக்குப்பட்ட உரிமைகளையும் பெற்றுக்கொள்வது எவ்வாறு? மீண்டும் ஆயுதப்போராட்டமா? அல்லது ஜனநாயகப் போராட்ட வழிமுறைகள் ஊடாகவா? எது சாத்தியமானது?
புலிகளை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்புக்கள் என்பது எதனாலும் ஈடுசெய்யமுடியாத இழப்புகளாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளின் துன்பங்களையும் துயரங்களையும், அவர்களின் மறுவாழ்விற்கான அனைத்து தேவைகளையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்துதான் நாம் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஏன் புலிகளை ‘தீனி‘ போட்டு வளர்த்து அதனை ஒரு பாசிச இயக்கமாக நடமாடவிட்ட அனைவருக்கும், குறிப்பாக பெரும்பான்மையான தமிழ் சமூகத்திற்கு யுத்தத்தின் விளைவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய எந்தப் பொறுப்பும் இல்லையா? ஆனால் அதையெல்லாம் மூடிமறைத்துக் கொண்டும், கள்ள மெளனம் சாதித்தவாறும் இலங்கை அரசுதான் யுத்தக்கொலைகளுக்கு பிரதான காரணம் எனக் கூறிக்கொண்டு சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி விசாரணை செய்ய துடிக்கிறது தமிழ் முற்போக்கு முகம் காட்டும் ஒரு கூட்டம்.
உலகத்திலே நிகழ்ந்த யுத்த வரலாறுகளை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். யுத்தங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சர்வதேசம் செய்த பரிகாரங்களை எவராலும் பட்டியலிட முடியுமா? எந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாம் கிடைத்திருக்கின்றது.
புலிகளிடம் இருந்தோ,புலிகளின் கோடீஸ்வரப் பினாமிகளிடமிருந்தோ யுத்தக் கொலைகளுக்கான நியாயங்கள் கிடைக்கப்போவதில்லை. நாம் அரசாங்கத்திடம் தான் நியாயத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் அரசாங்கத்திடமிருந்துதான் நாம் பெறவேண்டியுள்ளது. மிக முக்கியமாக அதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டியவர்கள் இலங்கையில் செயல்பட்டுவரும் அரசியல் சக்திகளும், இலங்கை வாழ் மக்களுமேயாகும்.
சர்வதேச அதிகார சக்திகளிடம் நியாயம் கேட்கும் தமிழ் முற்போக்கு நியாயவாதிகளின் செயல்பாடுகளானது தம்மை நடுநிலையாளர்கள், புத்திஜீவிகள், சிந்தனை மேதைகள் என வெளிப்படுத்தவதற்கு மட்டுமே தகுதியுடையதாக அமையும். எமது சமூகத்தை குறிப்பாக தமிழ்பேசும் சமூகத்தை ஜனநாகபூர்வமான அரசியில் செயல்பாட்டின் தன்மைகளையும், அதனது அவசியத்தை பேணும் ஓர் சமூகமாக மாற்றுவதற்கும் தடையாக இந்த Un panel report ஆதரவாளர்கள் செயல்படுகின்றார்கள் என்பதுதான் உண்மை. மேலும் மேலும் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையே பிரிவனைகளையும் நம்பிக்கையீனங்களையும் தக்கவைக்கும் செயல்பாடுகளாகவே இது அமையும்.
யாழ்மேலாதிக்க மனநிலையும் தமிழ்த் தேசியக் கருத்தியலும் கைகோர்த்து புலிகளையும், மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச்சென்று கொல்லக்குடுத்த சம்பவம் எம் கண்முன்னால் நிகழ்ந்தது. இதற்கு நிகரான ஒரு செயல்பாடாகவே UN panel report யை வரவேற்கும் தமிழ்த் தரப்பினரின் செயலையும் நாம் அவதானிக்கின்றோம். தமது அறிவியல் திமிர் நிலையில் இருந்துதான் இவர்களது சமூகம் குறித்த பார்வையும், மக்கள் குறித்த அக்கறை என்பதும். எமது சமூகமானது அரசியல் என்பதன் அர்த்தம் தெரியாதவர்களாகவும், அரசியலின் பலம், பலவீனங்களை புரியாதவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்ததன் பிற்பாடும் தமிழ் அரசியல் வாதிகளாலும்,தமிழ் ஊடகங்களாலும் பிரிவினைவாதமும், இனவாதமுமே போதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் புத்திஜீவிகள் எனப்படுபவர்களும் அதே காரியத்தைத்தான் செய்து வருகின்றார்கள். தமது அறிவியல் திமிர் நிலையில் இருந்து அனைத்தையும் தீர்மானிக்கும் இவர்களது செயல்பாடு மிக ஆபத்தானது. பல்வேறு வேற்றுமைகளோடும், மாறுபட்ட சிந்தனைகளோடும் வாழும் மக்கள் மீதான உறவு என்பது இவர்களுக்கு சாத்தியமே இல்லை. சமூகத்தின் நிலையிலிருந்து சிந்திக்கவும், பார்க்கவும் ஒருபோதும் வழி விடாது இவர்களது அறிவியல் செருக்கு
சர்வதேசத்திடம் எந்தவகையில் மனித உரிமை நியாயம் கேட்கின்றார்கள் இவர்கள்.சர்வதேச விசாரணையூடாக ராஜபக்சவை தூக்கில ஏற்றுவதாலும், அல்லது கைது செய்து ‘சுட்டுப்போட்டு கடலில்‘ எறிந்துவிடுவதாலும் மட்டும் அவை மனித உரிமை நியாயங்களாகிவிடுமா? இவ்வாறுதானே இந்த சர்வதே அதிகார மையங்கள் பிறநாட்டு விவகாரங்களில் தலையிட்டு நியாயம் வழங்கி வருகின்றது. பிறநாட்டு விவகாரங்களில் தலையிட்டு இவ்வாறான தீர்ப்புகளை வழங்குவதும், வளர்ச்சியடைந்து வரும் நாட்டு மக்களும் அவ்வாறான தீர்ப்புகளையே ஆதரித்தும் வருவதானது சுயமான அரசியல் சிந்தனை ஆளுமைக்கு தடையாகவே இருக்கும். இவ்வாறான அணுகுமுறையானது அதிகார மையங்களை நோக்கி உண்மையை பேசுவதற்கு மாறாக, அதிகார மையங்கள் முன்னால் தலை கவிழ்ந்து நிற்கும் நிலைக்கு ஒப்பானதாகும். தொடர்ந்தும் ஜனநாயக நடைமுறைகளுக்கும், அதைப்பயன்படுத்தும் வழிகளுக்கும் இடையூறாகவே அமையும்.
இயற்கையாகவே இந்துத்துவ பண்பாட்டை பேணுகின்ற எமது சமூகமானது சாதியப் பாகுபாடுகளுடன் கூடிய பாசிச உணர்வுகளோடும் ஊடாடும் ஓர் சமூகம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இலங்கையில் ஜனநாயக அரசியல் நடைமுறைகளை பேணவும், விரும்பாத ஆட்சியை தேர்தல் ஜனநாயகப் பலத்தால் மாற்றும் வல்லமை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கான செயல்பாடுகளாக எமது செயல்பாடுகள் அமையவேண்டும்.
ஜனநாயகம் என்பது கூட கேள்விக்குரிய ஒன்றாக இருப்பினும். தேர்தல் ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் ஓர் சாதனமாகவே உள்ளது. அது குறித்து நாம் அதிக விளக்கம் சொல்லத்தேவையில்லை. குடும்ப அரசியலுக்கும், அதிகார மமதைக்கும், பொருளாதார சூறையாடலுக்கும் எதிராக தமிழ் நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு எவ்வாறு அமைந்ததென்பதை நாம் கண்டிருக்கின்றோம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புலிகளை இல்லாதொழித்த இலங்கை அரசிற்கு ‘பேசப்படும் இலங்கை இனப்பிரச்சனைக்கு’ இதுவரை தீர்வு முன்வைப்பதற்கு தடையாக உள்ளதென்ன? அது மட்டுமல்ல புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய சிங்கள புத்திஜீவிகள் மட்டுமல்லாது, நியாயமாக விமர்சனங்களை முன்வைத்த இடதுசாரி சிந்தனைகொண்ட பல சிங்கள பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் இலங்கை அரசினால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது. குடும்ப அரசியல் தலையீடு எல்லைமீறிப் போகின்றது. இவ்வாறான குறைபாடுகளையும், விமர்சனங்களையும் கொண்ட அரசாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது.
இவ்வாறு ராஜபக்ச அரசு தொடர்ந்து செயல்படுமானால் தேர்தல் ஜனநாயக சக்தியூடாக அவ்வரசை அம்மக்கள் நிராகரிப்பதற்கான வேலைகளை நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும். ஓர் நாட்டில் குறைந்தபட்சமான தேர்தல் ஜனநாக உரிமை உள்ளபோது சர்வதேசத் தலையீடுகள் அவசியமற்றவை. இந்த சர்வதேச அதிகாரமானது யுத்தங்களை தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை.
சர்வதேசப்படைகள் லிபிய நாட்டின் மீது மேற்கொள்ளும் யுத்தத்திற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? கடாபிக்கெதிரான லிபிய நாட்டுப் போராளிகளுக்கு இராணுவ உதவி செய்வது மிக அத்தியாவசியமான செயல்பாடா என லண்டன் பிரதமர் ஜேம்ஸ் கமரோனிடம் கேட்கப்பட்டபோது. அது தவிர்க்க முடியாதது. இதுவரையில் போராளிகளுக்கான எமது உதவிகள் என்பது ஐ நா சபையினால் 1973இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது. அது மக்களை பாதுகாப்பதையே நோக்கமாககொண்டது. : (“I wouldn’t rule that out, but what we have done so far is we’ve helped the rebels, in line with the UN resolution 1973, to protect civilian life by giving them better communications equipment.” ) என லண்டன் பிரதமர் கூறுகின்றார். இந்த சர்வதேச ‘மனிதாபிமானிகளுக்கு‘ அங்கு யுத்தத்தை தவிர்த்து பேசித்தீர்ப்பதற்கு தடையாக இருப்பதென்ன? (லண்டன் பிரதமரின் உபதேசத்தை மேலதிகமாக தெரிந்துகொள்ள ) இந்த மேலாதிக்க அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப் பேசுவதற்காகவே இவர்களது அறிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே UN panel report ஆதரவு நிலைப்பாடும் அவற்றை அங்கீகரிக்கும் போக்கானது எமது நாட்டு மக்களின் ஜனநாயக அரசியல் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள தடையாகவும், தேர்தல் ஜனநாயகத்தின் பலத்தை மதிப்பிடவும் தடையாக அமையும் என்பது எமது தெளிவான முடிவாக உள்ளது.
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)
0 commentaires :
Post a Comment