5/04/2011

* யுத்தத்தின் பின் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி * நல்லிணக்க முன்னெடுப்பு ஐ.நா.செயலாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானம்

யுத்தத்தின் பின்னர் அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இனங்களுக் கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டங்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. வழமையான சபை நடவடிக்கைகளின் பின்னர் தருஸ்மன் அறிக்கை தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை விளக்கும் நோக்குடன் அமைச்சர் பீரிஸ் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளாமலேயே இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை பட்டியல் இட்டு தருஸ்மன் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுக்கு அமைய அதனை கருத்திற்கொண்டு இலங்கை அரசுக்கு எதிராக குரோத மனப்பான்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இவற்றுக்கு உடன்படவும் முடியாது. இந்த அறிக்கையின் ஊடாக எமது நல்லிணக்க செயற்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவே இருக்கிறது.
எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியா செல்லும் நான் அங்கு இந்திய தலைவர்களுடன் முக்கிய பேச்சுக்களில் ஈடுபடுவதுடன் சீனாவின் பீஜிங் நகரிலும், இந்தோனேசியா, மாலைதீவு போன்ற நாடுகளிலும் வெளிநாட்டு அமைச்சர்களைச் சந்தித்து பேசவுள்ளேன் என்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அரசின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ந்தும் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: கடந்த கால காயங்கள் ஆறிக்கொண்டிருக்கின்றன. மென்மேலும் கசப்புணர்வுகளை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை இருக்கிறது. எமது நல்லிணக்க செயற்பாட்டை குழப்புவதாக இருப்பதுடன், ஆறிக்கொண்டிருக்கும் காயத்தில் வேல் பாய்ச்சுவதாக அமைக்கிறது.
அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கிறார்கள். எதுவிதமான விசாரணைகளுமின்றி விசாரணைகளுமின்றி இவர்கள் எவ்வாறு இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பார்கள்.
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையல்ல. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் தனிப்பட்ட நடவடிக்கையின் காரணமாக ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையில் அரசைக் குற்றஞ்சாட்டுவதுடன் புலிகளை மேன்மைப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.
யுத்தம் ஒரு துன்பியலாக முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இது எங்களுக்குத் துன்பியல் சம்பவமாகும். பான்கீ மூனின் இந்தக் குழுவினர் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அப்பால் சென்றிருக்கிறார்கள்.
இந்த அறிக்கை தொடர்பாக நான் தொலைபேசி மூலம் ஐ.நா. செயலாளருடன் பேசினேன். இலங்கை அரசு வேண்டுகோள் விடுக்கும்வரை நான் எதனையும் செய்யமாட்டேன். அத்துடன் ஐ.நா. உறுப்பு நாடுகள் வேண்டுகோள் விடுக்கும்வரை என்னால் எதனையும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.
இலங்கையின் அபிவிருத்தி பற்றிப் பார்க்கும் போது நாம் இரண்டு வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தியைச் செய்திருக்கின்றோம்.
சிறுவர் போராளிகளாக இருந்தவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டதுடன், நல்வாழ்வளித்துள்ளோம். அவர்கள் க.பொ.த. பரீட்சைக்கும் தோற்றி திறமை சித்திகள் பெற்றிருக்கிறார்கள். 13 பில்லியன் ரூபா வங்கிகளின் ஊடாக சுய தொழில் முயற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்திருந்தனர். இப்போது 10 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். இவர்களும் விரைவில் வீடு திரும்புவார்கள். வடக்கு கிழக்கில் மக்கள் சுதந்திரமாக நடமாட மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஜப்பான், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் மீன்பிடித்துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் தமிழ் கட்சிகளுடனும் பேச்சுநடத்தி வருகிறோம். ஐந்து சுற்றுப் பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த பேச்சுவார்த்தை 12ஆம் திகதி நடைபெறும்.
அரசினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை காத்திருக்கவும் வேண்டும். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்னவாக இருக்கும் என்பதுபற்றி இப்போது எமக்கு கூறமுடியாது.
இலங்கையின் நிலைப்பாடு கருத்துக்கள் தொடர்பாக உலகின் மத்தியில் கொண்டு செல்வதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
அத்துடன் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப் பட்டுள்ள குற்றச்சாட்டக்களை முறிய டிக்க கட்சி, இன, மத, மொழி பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். 

0 commentaires :

Post a Comment