5/20/2011

பதவி விலகும் ஒப்பந்தத்தில் யெமன் ஜனாதிபதி கைச்சாத்து இழுபறி முடிகிறது


 யெமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயும் (65) எதிர்க்கட்சியினரும், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜி. சி. சி.) முன்வைத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி இன்னும் 30 நாட்களில் ஜனாதிபதி சலே பதவி விலகுவார். இதன் பிரதிபலனாக அவர் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது.
டுனீசியா, எகிப்து புரட்சியையடுத்து யெமனில் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரிக் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நான்கு மாதங்களாக யெமனில் நடந்த போராட்டத்தில் 180 பேர் பலியாயினர் யெமனில் அரசியல் நெருக்கடி நீக்கும் பட்சத்தில் அது அல்கொய்தாவுக்கு இரையாகிவிடும் என்றும், அதனால் அந்த பிராந்தியம் மற்றும் ஒட்டுமொத்த உலக பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படும் என்றும் அமெரிக்காவும் யெமனின் அண்டை நாடான சவூதி அரேபியாவும் கவலையில் இருந்தன. அதனால் யெமன் பிரச்சினையைத் தீர்க்க இரு நாடுகளும் பெரும் முயற்சியில் ஈடுபட்டன. அதன் ஒரு பகுதியாக, வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜி. சி. சி) ஒரு பரிந்துரையை முன்வைத்தது.
ஜனாதிபதி சலே தனது பதவியை துணை ஜனாதிபதி அப்துல் ரபு மன்சூர் ஹாடியிடம் ஒப்படைக்க வேண்டும் அதில் இருந்து இரு மாதங்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்கு பிரதிபலனாக ஜனாதிபதி சலே மற்றும் அவரது குடும்பத்தார் மீது எவ்வித விசாரணையும் நடத்தப்பட மாட்டாது. அவர்களுக்கு வழக்கில் இருந்து முழு பாதுகாப்பு அளிக்கப்படும். முதலில் இதற்கு ஒப்புக் கொண்ட சலே பின்னர் தயங்கி பின்வாங்கினார். எதிர்க் கட்சிகள் முதலில் இதை ஒப்புக்கொண்ட நிலையில் சலேவுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடாது. அவரை விசாரித்து தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் எதிர்த்து கொந்தளித்தனர்.
இந்நிலையில் இப்பிரச்சினையில் ஒருமித்த கருத்து உருவாகாததால் கட்டார் நாடு இதிலிருந்து விலகியது. தொடர்ந்து ஜி. சி. சி. பிரதிநிதிகள் இரு தரப்பிடமும் பேசி வந்தனர். நேற்று முன்தினம் ஜி. சி. சி. யின் பொதுச் செயலர் அப்துல் லத்தீப் ஜயானி, தலைநகர் சனாவில் ஜனாதிபதி சலேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பலனாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஜனாதிபதி ஒப்புக்கொண்டதாக யெமன் அரசின் அதிகாரி ஒருவர் நேற்று அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் முக்கிய பிரமுகரான யாஹ்யா அபு அஸ்பாவும் இதை உறுதிப்படுத்தினார். இதையடுத்து நேற்று முன்தினம் சனாவில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சியினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தப்படி இன்னும் 30 நாட்களில் சலே தனது ஜனாதிபதி பொறுப்பை துணை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பார் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், இதை வரவேற்றுள்ளன.

0 commentaires :

Post a Comment