5/28/2011

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை *

நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.
* பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.




வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற் றுகையில், உலகத்தில் மிகக்கொடூரமான பயங்கரவாதிகளைத் தோல்வியுறச் செய்து, தாய்நாட்டை ஐக்கியப்படுத்தியதன் பின்னர் இன்று பெருமிதத்துடன் எம்மால் தேசிய கொடியை ஏற்றிவைப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து இனங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்ற வெற்றிவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதேபோன்று பணயக் கைதிகளாக அடைபட்டுக்கிடந்த இலட்சக்கணக்கான வடபகுதி மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்த மாபெரும் வெற்றியாகும்.
அரசியலமைப்பில் மனித உரிமைகளைச் சேர்த்து அதை அங்கீகரித்து உலக மக்களுக்கு பறைசாற்றுவதன் மூலம் இந்த நாட்டில் மனித உரிமை மக்களுக்குக் கிடைத்துவிடமாட்டாது. வாழ்வதற்கு இருக்கும் உரிமையை எவரேனும் பறித்துக்கொள்வாராக இருந்தால் அதைத் தடுப்பதன்மூலமும், அதிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமும் மாத்திரமேதான் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அதனால் நாட்டு மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியதை முன்னிட்டே இந்த வெற்றிவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.
நாங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று கடந்துபோன இரண்டு ஆண்டுகளை நாம் திருப்தியுடனும், பெருமிதத்துடனும் திரும்பிப் பார்க்க முடியும்.
நாம் புதிய இலங்கை வரைபடமொன்றை உருவாக்கும் அளவுக்கு அபிவிருத்திப் புரட்சியொன்றை இந்நாட்டில் மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். படைவீரர்கள் விடுவித்த வடக்கும், கிழக்கும் கஸ்டமான வாழ்க்கைக்குப் பதிலாக ஆடம்பரவாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.
எல்லைக் கிராமங்களை இலங்கை வரைபடத்திலிருந்து எடுத்து எறிந்த நாம், இப்போது அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றி எமது அகராதிகளிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் யுகமாகும்.
இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்திருந்த மக்களை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்துத்தான் மீளக்குடியம ர்த்தியிருக்கிறோம். இவ்வாறு வடக்கு, கிழக்கை மீண்டும் கட்டியெழுப்பியமை வரலாற்றில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திப் பணியென்றுதான் நான் நம்புகின்றேன்.
சுதந்திரத்தின் ஒளிக்கீற்று படரத் தொடங்கியவுடன் அந்த ஒளிக்கீற்று வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் இவ்வாறு துரிதகதியில் கட்டியெழுப்புவதை பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்து என்பதை குறிப்பிடவேண்டும். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் கட்டியெழுப்புகின்றபோது வெளிநாடுகளிலிருந்து பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் என்னசெய்தார்கள் என்பதை உலக மக்கள் அறிவார்கள்.
முள்ளிவாய்க்காலில் கடைசிப் பயங்கரவாதத் தலைவன் இறந்ததையடுத்து மே மாதம் 19ஆம் திகதி இந்த நாடு ஐக்கியப்பட்ட நேரத்திலிருந்து வெளிநாடுகளிலிருக்கின்ற இவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். நன்கொ டைகளை சேகரிப்பதையும், கடத்தல் வேலைகளை செய்வதையும் பயங் கரவாதிகள் நிறுத்தவில்லை.
யுத்தம் நடைபெற்ற யுகத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு செலவுசெய்த பணம் அவர்களிடம் குவிந்து கிடந்தது. குவிந்து கிடந்த பணத்தைக்கொண்டு இலங்கைக்கு எதிராக பாரிய அளவில் பொய்ப் பிரசார இயக்கங்களை, சதி செயல்களை இன்னும் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைந்தாலும் வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்ற பயங்கரவாதிகளும், அவர்களுடைய நண்பர்களும் இன்னும் நமது நாட்டை அழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருக்கின்ற அவர்கள் அந்நாடுகளில் இருக்கின்ற ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தையும், கிடைத்துள்ள வாக்குரிமையையும் பயன்படுத்தி அந்நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல.
ஒரு நாட்டில் முதலில் சத்தியத்தை சுட்டுக்கொன்றுவிட்டுத்தான் பயங்கரவாதம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் பின்னரும் புலிகள் சத்தியத்தை சுட்டுக்கொல்லத் தொடங்கினர். அதன் விளைவாக எமது படைவீரர்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை எழுதுவதற்கு தேவையான சதி செயல்களை ஆரம்பித்தனர்.
எமது படையினர் ஒரு கையில் படைக்கலங்களையும் மற்றக்கையில் மனித உரிமை சாசனத்தையும், தோளில் நிர்க்கதியானவர்களுக்குக் கொடுக்கின்ற உணவுப் பக்கற்றையும், இதயத்தில் பிள்ளைப் பாசத்தையும் சுமந்துகொண்டு போராடினார்கள்.
பயங்கரவாதத் தலைவன் முள்ளிவாய்க்காலில் இறந்ததன் பின்னர் அவருடைய தாயும் தந்தையும் தொடர்ச்சியாக எங்களுடைய பாதுகாப்பைப் பெற்றனர். அவர்களை துப்பாக்கித் தோட்டக்களிலிருந்து காப்பாற்றி தூக்கிக்கொண்டுவரும் அளவுக்கு படைவீரர்களது இதயம் இழகியிருந்தது என்பதை நாம் அறிவோம். இன்னும் கூட எங்களிடம் சரணடைந்து இருக்கின்ற பயங்கரவாத தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எமது பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
எங்களுக்கு எதிராகப் போராடிய பயங்கரவாதிகளுக்கும் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்புக்கொண்டு போராடிய ஒரே இனம், ஒரே நாடு நாம்தான். வேறுநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் தன்மையைப் பார்க்கின்றபோது நமது மனிதாபிமான நடவடிக்கையிலிருந்து ஆழமான மனித நேயத்தை எண்ணி பெருமை கொள்கின்றோம்.
படைவீரர்களே! போர்க்களத்தில் உங்களுடன் எங்கள் இதயங்கள் இருந்தன. முழு நாடுமே உங்களோடு இருந்தது. இன்றும் அப்படித்தான். உலகத்தின் முன்னால் உங்களைக் காட்டிக்கொடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தவேண்டும். மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் உங்களை பாசறைக்குள் வரையறுத்து வைக்கவில்லை. எமது நாட்டை கட்டியெழுப்புகின்ற பாரிய பணியில் உங்களையும் பங்காளிகளாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
வெளிவிவகார சேவையிலிருந்து கொழும்பை அழகான நகரமாகக் கட்டியெழுப்பும் பணிவரைக்கும் பல விடயங்களில் படைவீரர்கள் பங்களிப்புச் செய்தனர் என்பதை நாம் அறிவோம். அன்று யுத்த களத்திலே இரத்தம் சிந்திய நீங்கள் இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்தளத்திலே வியர்வை சிந்துகிaர்கள். அதுமாத்திரமல்ல உங்களிடம் இருக்கின்ற ஒழுக்கம் அர்ப்பணிப்பு, துணிச்சல் என்பவற்றையும் தாய்நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கேட்கின்றனர்.
நாம் உலகத்துக்குக் காட்டவேண்டிய உண்மை இருக்கின்றது. நாம் உருவாக்கியிருப்பது நாடுகளை முற்றுகையிடுகின்ற முப்படையல்ல, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற ஒரு முப்படையாகும்.
நண்பர்ளே! தாய்நாட்டின் சுதந்திரத்தில் பாதம் பதிக்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த மாபெரும் வீரர்கள் இம்மண்ணில் உறங்குகின்றனர் என்பதை நாங்கள் கெளரவாக நினைவுகூரவேண்டும். கண்களை, உடலின் பாகங்களை, இரத்தத்தை நாட்டுக்காகத் தியாகம்செய்த வீரர்கள் நம்மத்தியில் இருக்கின்றனர் என்பதை கெளரவமாக நினைவுகூருகின்றோம். படைவீரர்களே நீங்கள் செய்த உன்னதமான தியாகத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் தேசிய ஒற்றுமையுடன் உன்னதமான எதிர்காலத்தை இவ்வனைத்து மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
நாம் வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மனிதாபிமான உரிமைகளை உறுதிப்படுத்தி ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு பெற்றுக் கொடுத்த இடைக்கால பரிந்துரைகளை ஏற்கனவே நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதன் இறுதி அறிக்கை தொடர்பாக இந்நாட்டு மக்களும் எமது அரசாங்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.
ஆனால் பிரிவினைவாதிகள் அல்லது இனவாத குழுக்கள் கேட்கின்றவற்றை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. இந்நாட்டு மக்களுடைய அங்கீகாரம் இல்லாததால் வெளிநாடுகளைக் கொண்டு நிர்ப்பந்தித்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் குறி பார்க்கின்றனர் என்பது இரகசியம் அல்ல.
ஆயினும் எந்தவொரு அதிகாரமுடையவருக்கும் இந்நாட்டு மக்களின் சம்மதமும் அங்கீகாரமும் இன்று எதையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நான் தெரிவிக்கின்றேன். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை மற்றவர்கள் தீர்க்க முடியாது. எம்மால் அதை செய்ய முடியும் என்பதை உலகத்திற்கு நாம் காட்டி இருக்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்களுக்கு கிடைத்த நிவாரணம் என்ன என்று கேட்கின்றவர்களுக்கு வடக்கைப் போன்று முழு நாட்டையும் கை நீட்டி சுட்டிக்காட்ட முடியும். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 6.8 வீதமாகும். ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 8 வீதமாகும். வடக்கில் அபிவிருத்தி வேகம் நூற்றுக்கு 14.2 வீதமாகும். அதே போன்று தொழில் இல்லா தன்மையையும் குறைத்துக் கொள்ள முடிந்தது. டொலரின் பெறுமதியை நிலையாக வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
எமது எதிர்கால சவாலை வெற்றிக் கொள்வதற்கு இருக்கின்ற சிறந்த வழி நாட்டில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும். எமது நாட்டு மக்களிடையே உன்னதமான தேசிய ஒற்றுமை இருக்கின்றது. இனங்களுக்கிடையே மோதிக் கொள்கின்ற தன்மை தற்பொழுது எந்த இடத்திலும் இல்லை. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாபெரும் வெற்றிவிழா எந்த இனத்திற்கும் மன வேதனையை ஏற்படுத்தாத விதத்தில் கொண்டாடப்பட்டது.
ஆடிவேல் விழா நடைபெறுகின்ற போது சிங்கள மக்கள் பெரும் விருப்பத்துடன் அதில் கலந்து கொண்டனர். சிங்கள பெளத்த மக்கள் சம்புத்த ஜயந்தியை கொண்டாடுகின்ற போது வடக்கு வாழ் மக்களும் அதில் கலந்து கொள்கின்றனர். அனைத்து இன மக்களும் வாழ்கின்ற கொழும்பில் வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்ற போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி அதில் கலந்து கொண்டனர்.
மக்கள் அந்தந்த இனங்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த பிணைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும்.
அப்படியின்றி பழைய புண்ணைக் கிளறிக்கொண்டு, கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் தோண்டிக் கிளறி இனங்களுக்கிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதனால் எந்தப் பயனும் கிட்டாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் தெரிவிக்கின்றேன். வாழ்கின்றபோது இனங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற அந்த உன்னதமான பிணைப்பை பாதுகாப்பது நாட்டின் சுதந்திரத்தையும் இந்த மாபெரும் வெற்றியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.
படைவீரர்களே மாலை நேரங்களில் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் சென்று மரங்களுக்கடியில் மரணபயத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று தங்களுடைய சொந்த வீட்டில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்க்கும்போது எம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.
தற்கொலை, கடற்புலி படகுகள் சென்ற சமுத்திரத்தில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கின்றபோது நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கின்றபோது பயங்கரவாதிகள் அழித்த பாலங்கள், மதகுகள், புகையிரதப் பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றை மீளக்கட்டியெழுப்புகின்றபோது கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், வாவிகள், அணைகள் என்பவை கட்டியெழுப்பப்படுகின்றபோது விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் கட்டப்பட்டு கீதங்கள், தேவாரங்கள், பிரார்த்தனை ஒலிகள் காதுகளுக்குக் கேட்கின்றபோது உங்களுடைய தியாகம் வீணாகவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
சயனைட் வில்லையை கழுத்தில் கட்டிக்கொண்டு ரி-56 ரகத் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு இருந்த பிள்ளைகள் வெள்ளைச் சீருடையணிந்து பாடசாலைகளுக்குச் செல்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது நீங்கள் செய்த தியாகம் வீணாகவில்லையென்பதை உங்களுடைய இதயத்திலிருந்து வருகின்ற வெற்றி உணர்வுகளினால் நிறைவடையும்.
தாய் நாட்டை சுதந்திரத்தின் மகிழ்ச்சியில் உயர்த்திவைப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைவருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவருடைய பாராட்டும் உரித்தாகும். உங்களுடைய அர்ப்பணிப்பை எந்த சந்ததியும் இதய பூர்வமாக மறந்துவிடாது என்பதையும், நீங்கள் என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பீர்கள் என்பதையும் நான் ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

0 commentaires :

Post a Comment