கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு பாதுகாப்பு சீருடை அணிந்தவர்கள் அத்துமீறி நுழைந்ததை அடுத்து முதலமைச்சர் ஆத்திரமுற்ற நிலையில் தனது பதவியினை இராஜினாமா செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இவ் வேளையில் வாக்களித்த மக்களையும், கிழக்கு மாகாணத்தில் தோன்றியுள்ள ஜனநாயக நிலைமையினையும் பேணிப் பாதுகாக்க வேண்டியதையும், யுத்த வடுக்களைச் சுமந்து அநாதரவான நிலையில் எதிர்கால பயணம் எவ்வாறு அமையும் என்ற ஏக்கத்துடன் இருக்கின்ற கிழக்கு மாகாண சமூகத்தின் நிலையுணர்ந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மத்திய குழுவின் உருக்கமான வேண்டுகோளின் அடிப்படையிலும், ஆளும் அரசின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச , பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பொதுஜன ஐக்கிய முன்னனியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடனான நட்புறவின் அடிப்படையிலுமே பதவி விலக இருந்த முதலமைச்சரை தடுத்து நிறுத்தினோம்.
யுத்த சூழ்நிலையிலிருந்து கிழக்கு மாகாண மக்களை மீட்பதற்காக உயிர் தியாகங்களைச் செய்து ஜனநாயக வழியினை விதைத்து சுயகௌரவத்துடனான அபிவிருத்திப் பாதையை நோக்கியே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அரசியல் பயணத்தை மேற்கொண்டது. சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் இலங்கையில் எழுத்து மூலமாக இருக்கின்ற மாகாணசபை முறையினை பலப்படுத்துவன் ஊடாக கிழக்கு மக்களின் இருப்புக்களை நிலைப்படுத்துவதே அரசியல் தலைமைகளின் பொறுப்பு. மாறாக, கோவணைத்தையும் கலைந்து கேவலமாக சலுகைகளுக்காக சோரம் போகும் அரசியலை வெறுத்து ஆயுத வன்முறைகளையும் களைந்தெறிந்து நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை நம்பி இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்ற முன்வந்த கிழக்கின் முதல் குடிமகனான முதலமைச்சர் மீதானதும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் கிருஷ்ணானந்தராஜா, ஏனைய உறுப்பினர்கள் மீதானதுமான அத்துமீறல்களும், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளும், அரசிற்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையேயான இடைவெளிகளை ஏற்படுத்த குறிப்பிட்ட சிலர் மேற்கொள்ளும் சதியாகவோ அல்லது ஜனநாயகம் மீதான நம்பிக்கை வைத்துள்ள மக்களை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தும் முயற்சியாகவோ, குறிப்பிட்ட சிலர் திட்டமிட்டு மேற்கொள்கின்றார்களா என்ற சந்தேகம் பரவலாக மக்களிடம் ஐயம் கொண்டுள்ளது. இந்த ஐயத்தினை நீக்க வேண்டிய பாரிய பொறுப்பு மாகாணசபைக்கும், அரசிற்கும் உண்டு என கிழக்கு சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் கருத்துத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலம் முன்னறிவித்தலின்றி சுற்றிவளைக்கப்பட்டதனையும், மாகாண சபை உறுப்பினர் கிருஷ்ணானந்தராஜா அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டதனையும் கண்டித்து கிழக்கு மாகாணசபையின் மாகாணசபை உறுப்பினர் புஸ்பராஜாவினால் கொண்டு வரப்பட்ட கண்டன பிரேரனை தொடர்பான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கண்டன பிரேரணை தொடர்பாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று நடைபெற்ற அமர்வினை வெளிநடப்புச் செய்ததுடன் கைது செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர் கிருஷ்ணானந்தராஜா சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், முதலமைச்சரின் வாசஸ்தலத்தின் மீதான அத்துமீறல் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தே இன்று மாகாணசபை அமர்வினை வெளிநடப்புச் செய்தனர்
0 commentaires :
Post a Comment