தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் பயங்கரவாதிகளினால் இலங்கை அரசாங்கத்திற்கும், மக்கள்ரீதியான அடிப்படையில் சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள் போன்றவர்களுக்கும் ஏற்பட்ட அழிவுகளையும், உயிரிழப்புக்களையும்விட கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு எற்பட்ட அழிவுகளும் உயிரிழப்புக்களும் பல நூறு மடங்கு அதிகமானதாகும். இந்நிலையிலேயே புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை முற்றாக இலங்கை மண்ணிலிருந்து அகற்றவேண்டுமென்னும் பொதுவான குறிக்கோளுடனும், எமது மக்களின் உயிரிழப்புக்களையும், பொருள் சேதங்களையும் தடுத்துநிறுத்தி முழு இலங்கைக்குமான பாதுகாப்பினை ஏற்படுத்துவதன்மூலம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், சகோதரத்துவ உணர்வுடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுமென நாம் கருதிய நிலையிலேயே அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த நாட்டில் நாம் வாழ்ந்தபோதும் பூரண ஆதரவினை வழங்கினோம்.
அதற்கமைய விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை அழித்தொழிப்பதற்கான அரசின் போராட்டம் கிழக்கிலிருந்தே ஆரம்பமாகியது. கிழக்கில் அரசாங்கம் பரீட்சார்த்தமாக மேற்கொண்ட புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றியளித்தமையே தொடர்ந்து வட மாகாணத்திலிருந்தும் புலிகளை அழித்தொழிப்பதற்கான தன்னம்பிக்கை அரசாங்கத்திற்கு உருவானது. மேற்படி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக செயற்பட்டவர்கள் இன்றைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என அழைக்கப்படும் அன்றைய பிள்ளையானின் தலைமையிலான ஆயுததாரிகளே என்பதனை அரசாங்கம் மறுக்கமுடியாது.
பயங்கரவாதத்திற்கு எதிரான அரசின் போராட்டத்தில் இலங்கையின் எந்தவொரு பாகத்திலிருந்தும் வேறு எந்தவொரு அமைப்பினரும் அரசுக்கு உறுதுணையாக ஆயுதமேந்தி கிழக்கிலிருந்து செயற்பட்டதாக கூறமுடியாது. இவர்களின் புலிகளுக்கு எதிரான போராட்டம் எதற்காக முன்னெடுக்கப்பட்டது என்பது இன்று கேள்விக்குரியதாக மாற்றமடைந்துள்ளது. அரசாங்கத்தினை பலமடைய செய்யவேண்டுமென்னும் நோக்கத்திற்காக மேற்குறிப்பிட்டவர்கள் ஆயுதமேந்தவில்லை. நாங்களும் அதற்கு உறுதுணையாக செயற்படவில்லை. மாறாக எமது பிரதேசத்தில் வாழும் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் நிறைவுசெய்வதற்காகவே அவர்கள் ஆயுதமேந்தினார்கள். நாங்கள் மேற்குலக நாடுகளில் அரசியல்ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
இன்று பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசு தமது பங்காளிகளான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்மீது ஜனநாயக மரபுகளுக்கு முரணான முறையில் அதிகாரத்தினை பிரயோகிப்பதற்கு முனைவதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மேற்படி மாகாண சபை உறுப்பினரின் கைது தொடர்பில் அரச இயத்திரத்தின் குற்றவியல் பிரிவினர் நடந்துகொண்ட முறைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்தின் இரட்டை வேடத்தினை அம்பலப்படுத்தியுள்ளது. மேற்படி விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக தீர்வுகாணத் தவறும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு வழங்கும் எமது ஆதரவினை நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தி அதிலிருந்து ஒதுங்கிக்கொள்வதா இல்லையா என்னும் முடிவினை விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்.
0 commentaires :
Post a Comment