5/16/2011

தனிமனித சுகந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அதிர்ச்சியும், கவலையும் தெரிவிக்கின்றது.
இன்று பி.ப4.00 மணியளவில் கிழக்கு மாகாணசபையின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்டர்) கொழும்பிலிருந்து வருகை தந்த இரகசிய பொலிசாரினால் திடீரென மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி கைதிற்கான காரணமோ அல்லது நீதிமன்றத்தின் பிடிஆணையோ இல்லாமல் குறித்த மாகாணசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது கண்டனத்தையும், அதிர்ச்சியையும் தெரிவிக்கின்றது. இக் கைது சம்பவம் இடம் பெற்ற போது சம்பவ இடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் செயலாளர், கட்சியின் முக்கியஸ்த்தர்கள், குடும்ப உறுப்பினர்கள் குறித்த கைதிற்கான காரணத்தை தெரிவிக்கும்படி கோரிய போதும் அதனை கவனத்தில் கொள்ளாது மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரை கைது செய்திருப்பதானது தனிமனித சுகந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தல் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசுடன் தோழமைக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்த்தரும் கிழக்கு  மாகாணசபை உறுப்பினருமான எட்வின் சில்வா கிருஸ்னாந்தராஜா கைது செய்யப்பட்டமை குறித்தும், குறித்த கைது நடவடிக்கையின் போது பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு குறித்தும் கட்சியின் உயர்பீடம் அரசின் உயர்மட்டத்திடம் தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

0 commentaires :

Post a Comment