5/14/2011

34 ஆண்டு இடதுசாரி ஆட்சி முடிவு மேற்கு வங்கத்தில் மம்தா பனர்ஜp அமோக வெற்றி



மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து வந்த இடதுசாரி கூட்டணி அரசை பதவியிலிருந்து அகற்றி உள்ளார் திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனர்ஜி அமோக வெற்றி பெற்றார். நேற்று மாலைவரை வெளிவந்த முடிவுகளின்படி மொத்தமுள்ள 294 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 215 தொகுதிகள் வரை முன்னணியில் உள்ளது அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆளும் இடதுசாரி கூட்டணி 70 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது.
இடதுசாரி கூட்டணி அரசை அகற்ற வேண்டும் என்று கடந்த 10 ஆண்டு காலத்திற்கும் மேலாகவே தீவிரமாக போராடி வருபவர் மம்தா.
அதிலும் சிங்கூரில் டாடா கார் தொழிற்சாலைக்காகவும், நந்திகிராமில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காகவும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு கிளம்பிய எதிர்ப்பை அடக்க புத்ததேவ் அரசு காவல்துறையை ஏவி விட்டு நடத்திய அராஜக போக்குதான் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி அரசுக்கு வீழ்ச்சியடைய காரணமாக அமைந்தது என கூறப்படுகிறது.
அதற்கு அடுத்தபடியாக 34 ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும் குறிப்பிடும்படியான வளர்ச்சி திட்டங்கள் எதையும் மேற்கொள்ளாதது மக்கள் கோபத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தேர்தலில் பெற்றுள்ள அபார வெற்றியை தொடர்ந்து மம்தா தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்குவங்க முதல்வர் பதவியை ஏற்க உள்ளார்.
இதேவேளை, சட்டசபை வெற்றியை கொண்டாடும் வகையில், பேரணி வேண்டாம் மது அருந்த கூடாது. வேட்பாளர்கள், சொந்த தொகுதியிலேயே இருக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பனர்ஜி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து வடக்கு 24 பர்கானாஸ், திரிணமுல் கட்சி தேர்தல் பார்வையாளர் ஜோதிபிரியோ முல்லிக் கூறுகையில்,
‘தேர்தல் வெற்றியை கொண்டாடுவது தொடர்பான கட்டளைகளை கட்சித் தலைவர் மம்தா பிறப்பித்துள்ளார்.
‘தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள், அமைதியாக செல்ல வேண்டும் என்பது, எங்களது விருப்பம். கடமைகளை கட்டுப்பாடுகளை கட்சித் தலைவர் எங்களுக்கு பிறப்பித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோல்கட்டாவில், காலிகட் பகுதியில் இருக்கும் மம்தாவின் வீட்டிற்கு அனுமதி பெறாமல் யாரும் செல்லக் கூடாது. தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளிக்கக் கூடாது. வேட்பாளர்கள் யாரும் வீட்டிற்கு செல்லக்கூடாது. கட்சித் தொண்டர்களுடன், அவர்களது தொகுதியில் இருக்க வேண்டும்.
இது கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொருந்தும். ஆர்வ கோளாறு காரணமாக ரவுடித்தனமான நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது. மது அருந்துவிட்டு எங்களது கட்சித் தொண்டர்கள் யாராவது வெற்றியை கொண்டாடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இது தொடர்பான கடிதம் கோல்கட்டாவில் உள்ள மம்தாவின் அலுவலத்தில் இருந்து கட்சியின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திரிணாமுல் கட்சிக்கு, முதல் நாளிலேயே கெட்ட பெயர் ஏற்படுத்த, இடது சாரியினர் முயற்சிக்கலாம் என்பதால், இதுபோன்ற கட்டளைகளை மம்தா பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

0 commentaires :

Post a Comment