5/08/2011

13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை: 14ம் தேதி கனிமொழி ஜாமின் மனு மீது உத்தரவு



கனிமொழிக்கு, "பாண்ட்' பத்திரம் மீது ஜாமின் வழங்குவதா அல்லது ரிமாண்ட் செய்துவிட்டு பிறகு ஜாமின் கோரப்பட்டு அதன்பிறகு விடுதலை செய்வதா என்பது குறித்து, வரும் 14ம் தேதி, தனது தீர்ப்பை அளிப்பதாக, சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார். அதுவரைக்கும், வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, கோர்ட்டுக்கு தினமும் வந்து, காலை முதல், மாலை வரை இருக்க வேண்டும் என்று கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், 13ம் தேதி வெளியாகின்றன. அதற்கு மறுநாள், 14ம் தேதி, கனிமொழியின் ஜாமின் மனு மீது உத்தரவு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி நேற்று முன்தினம் ஆஜரானார். அன்றைய தினம் காலையில், கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப்பும் வாதிட்டனர். பல்வா சகோதரர்களின் வக்கீல் அகர்வாலும் நீண்டநேரம் தனது வாதங்களை வைத்தார். இதனால், சி.பி.ஐ., வக்கீல் தனது வாதங்களை வைக்க நேரம் இல்லாமல் போனது. இதையடுத்து, அடுத்தநாளும் வழக்கு விசாரணை தொடரும் என, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இரண்டவாது நாளாக நேற்றும், கனிமொழி, கோர்ட்டுக்கு வந்தார். காலை 10 மணிக்கு நீதிபதி சைனி வந்தவுடனே, சி.பி.ஐ., வக்கீல் லலித் தனது வாதத்தை வைத்தார்.

அப்போது கூறியதாவது: "சுவான்' நிறுவனம் என்பது டெலிகாம் உரிமம் பெறுவதற்கு எந்த வகையிலும் தகுதியில்லாதது. அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. "டி.பி., ரியாலிட்டி' நிறுவனத்திலிருந்து, "சினியுக்' மற்றும் "குசேகான்' ஆகிய நிறுவனங்கள் மூலம், 2008, டிச., 23ம் முதல், 2009, ஆகஸ்ட் 11ம் தேதி வரை, பல கட்டங்களாக, கலைஞர் "டிவி'க்கு பணம் போய்ச் சேர்ந்துள்ளது. கலைஞர் "டிவி'யின் முதலீடு, வெறும், 10 கோடி ரூபாய் மட்டுமே. அதன் ஆண்டு வர்த்தகம், வெறும், 47 கோடி ரூபாய் மட்டுமே. அப்படியிருக்கையில், எந்த உத்தரவாதமும் இல்லாமல், 200 கோடி ரூபாய் வரை, கலைஞர் "டிவி'க்கு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் என்ன? தயாளுவுக்கும் கனிமொழிக்கும் சேர்த்து மொத்தம், 80 சதவீத பங்குகள் உள்ளன. கலைஞர் "டிவி'யின் மொத்த கட்டுப்பாடும் இவர்களது குடும்பம் வசம்தான் உள்ளது. கனிமொழி தான், இந்த, "டிவி'யின் மூளையாக இருந்துள்ளார். ராஜாவுடனான தனது தொடர்பை, கலைஞர் "டிவி'க்கு சாதகமாக ஆக்கியுள்ளார். வெறுமனே பெயரளவில் பேப்பரில் மட்டுமே சரத்குமார் ரெட்டி எம்.டி.,யாக இருக்கிறார்.

பாண்டு பத்திரத்தின் அடிப்படையில் ஜாமின் வேண்டுமென கனிமொழி கேட்கிறார். சட்டத்தின்படி பார்த்தால் பாண்ட் பத்திரம் என்பது செல்லுபடி ஆகாது. ஜாமின் என்பதற்கு பாண்ட் பத்திரம் நிகரான ஒன்று அல்ல. ஜாமினின் இடத்தை, பாண்டு பத்திரம் சட்டப்படி நிரப்பிவிடாது. கனிமொழி, ஒன்று ரிமாண்ட் செய்வதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையனில், நீதிபதியை தனது உண்மையான வாதங்கள் வாயிலாக திருப்தி ஏற்படுத்திவிட்டு பிறகு ஜாமின் கேட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை தவிர, வேறு எந்த வழியிலும் ஜாமின் கேட்க வழியில்லை. கனிமொழிக்கு சம்மன் அனுப்பியதில் இருந்தே, அவர் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார் என்று அர்த்தம். கிரிமினல் சட்டத்தின்படி, பாண்ட் பத்திரம் மூலம் ஜாமினில் விடுதலை ஆவது ஏற்க முடியாது. பாண்டு பத்திரம் என்பதற்கு என சில விதிமுறைகள் உள்ளன. ஊழல் குற்றச்சாட்டு வழக்கிற்கெல்லாம் அது பொருந்தாது. தவிர, பெண் என்பதாலேயே ஜாமின் வழங்கவும் கூடாது. பெண் என்ற சலுகை எல்லா வழக்குகளிலும் தந்துவிட முடியாது.

இவ்வாறு லலித் கூறியபோது, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப் குறுக்கிட்டு வாதிட்டதாவது: கைது வாரன்ட் பிறப்பித்து இருந்தால் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருக்கலாம். அதையும் எங்களால் செய்ய முடியாத நிலை உள்ளது. சி.பி.ஐ., இந்த நடவடிக்கை எங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. ஆவணங்களை அழித்துவிடும் அபாயம் இருப்பதாக சி.பி.ஐ., கூறுவதையும் ஏற்க முடியாது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களுமே அழிக்க முடியாது. வரவு -செலவு அறிக்கை, வங்கி கணக்கு , வருமான வரி கணக்கு என, கலைஞர் "டிவி'யின் அனைத்துமே ஆவணங்களாக உள்ளன. இதை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அல்தாப் கூறியதை அடுத்து, சி.பி.ஐ., வக்கீல் லலித் தொடர்ந்து வாதிட்டதாவது: இந்த வழக்கில் வேண்டுமென்றே போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர். குற்றச்சாட்டு கிளம்பிய பின், கணக்கு வழக்குகளை சரியாக காட்டுவதற்காக உருவாக்கியுள்ளனர். இதனால், ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளது, என்றார். பின்னர் இறுதியாக பேசிய நீதிபதி ஓ.பி.சைனி, "கனிமொழிக்கு பாண்ட் பத்திரம் மீது ஜாமின் வழங்குவதா அல்லது ரிமாண்ட் செய்துவிட்டு பிறகு ஜாமின் கோரப்பட்டு அதன்பிறகு அவரை விடுதலை செய்வதா என்பது குறித்து, வரும் 14ம் தேதி தீர்ப்பை அளிக்கிறேன்' என கூறி ஒத்திவைத்தார். "அதுவரைக்கும் வழக்கு விசாரணை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, கோர்ட்டுக்கு தினமும் வந்து, காலை முதல், மாலை வரை, கோர்ட்டில் இருக்க வேண்டும்' என, தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

கோர்ட்டில் ராஜாத்தி: கனிமொழியின் தாயார் ராஜாத்தியும், நேற்று கோர்ட்டிற்கு வந்தார். முதல் வரிசையில் அவர் அமர்ந்திருந்தார். அவருடன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க., எம்.பி.,க்கள் பலரும், நண்பகல் வரை இருந்தனர். மதியம், கோர்ட்டிற்கு ராஜாத்தி வரவில்லை. பெரும்பாலான எம்.பி.,க்களும் வரவில்லை. கோர்ட் நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்க வேண்டுமென நீதிபதி கூறியிருந்ததை அடுத்து, கனிமொழியும் சரத்குமாரும் மாலை வரை, கோர்ட்டில் அமர்ந்திருந்தனர்.

0 commentaires :

Post a Comment