இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் விடுதலைப் புலிகள் செய்யும் அத்து மீறல்களையும், வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவில் புலிகள் வகித்த பங்கு குறித்தம் ஒப்புக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் மறுப்பது, நீடித்த அமைதியை உருவாக்க தடையாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போரின் இறுதி கட்டத்தில் வன்னிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோரை கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றோரை வன்முறையால் தடுத்தது, சிறார்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்தது போன்ற விடயங்களை புலிகள் செய்தாலும் புலம் பெயர் தமிழர்கள் பலர் இது பற்றி பேசத் தயங்கியதாக கூறப்பட்டுள்ளது.
ஈழம்
வன்னிப் போரில் இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது மக்களை காப்பாற்றுவதை விட தமிழ் ஈழம் என்ற அரசியல் கோட்பாட்டை காப்பாற்றவே புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் முன்னுரிமை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மாபியா கும்பல் போன்ற நடவடிக்கைகளை கைக் கொண்டு புலம் பெயர் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பாக வெளி நாடுகளில் செயல்பட்ட அமைப்பு தற்போது தனியார் வர்த்த அமைப்புக்கள் மூலம் இயங்குவதாகவும், சில கோயில் நிதிகளில் அது ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஐ நா கண்டறிந்துள்ளது.
பணம்
புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும், பிற வழிகளில் இருந்தும் விடுதலைப் புலிகள் பெற்ற பணம் இன்னமும் இருப்பதாகவும், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனுக்கு அது செலவிடப்பட வேணடும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும் - புலிகளின் அதிதீவிர தமிழ் தேசியத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமை இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை - அதாவது பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்த அறிக்கை இது சிங்கள தேசியத்தை பலப்படுத்தவும் வழி வகுத்ததாக கூறியுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினர் மட்டுமல்லாது - புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களும்- தமக்கு பொதுவான தாயகத்தில்- மற்றவர்களின் உரிமைகளை மதித்துப் போற்றி வாழ்வதில்தான் இலங்கைக்கு ஸ்திரமான எதிர்காலம் ஏற்படும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
நல்ல கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களால் இலங்கையின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கபூர்வ பங்களிப்பை வருங்காலத்தில் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
0 commentaires :
Post a Comment