இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம்தான் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற முடியுமென்று அமெரிக்கா கூறியுள்ளது.
வெள்ளை மாளிகையில் செய்தித் தொடர்பாளர் ஜே. கார்னே இது குறித்து கூறியதாவது, கடாபி ஜனாதிபதி பதவியில் தொடரக் கூடாது என்றுதான் அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அவர் அழைப்பு விடுக்கும் போர் நிறுத்தத்திலும் சமாதானப் பேச்சிலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை.
கடாபி லிபிய ஜனாதிபதியாக தொடரக் கூடாது. தங்களை யார் ஆள வேண்டுமென்பதை லிபிய மக்கள்தான் முடிவு செய்ய வேண்டுமென்பதே ஜனாதிபதி ஒபாமாவின் நிலைப்பாடு. லிபியாவில் ஜனநாயகம் ஏற்பட வேண்டும். நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்கே நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.
அவரிடம் உள்ள சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
கடாபியின் கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடாபி இப்போது மூழ்கி வரும் கப்பலின் நிலையில் இருக்கிறார். இதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என்றார் அவர்.
இந்நிலையில் லிபியாவில் கடாபி ஆதரவு படையினருக்கு எதிராக அமெரிக்க கூட்டுப் படை இராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. நேட்டோ தலைமையிலான விமானப் படை கடாபியின் இராணுவத்தை குறிவைத்து குண்டுகளை வீசி வருகிறது. லிபிய தலைநகர் திரிபோலியின் தென்மேற்குப் பகுதியில் இப்போது தாக்குதல் தீவிரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்கள் இப்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன. கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் கடாபியின் இராணுவம் பீரங்கிகள் மூலமும், ராக்கெட் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் அமைதிப் பேச்சுக்கு முன்வந்து அதைத் தொடர்ந்து நிராகரித்து வருவதாக இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஏற்க முடியாத பல கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றினால்தான் போர் நிறுத்தம் என்று கிளார்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் நாங்கள்தான் ஆட்சியாளர்கள் அவர்கள் கிளர்ச்சியாளர்கள் எனவே நாங்கள் கூறியபடி நடந்து கொண்டால்தான் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
0 commentaires :
Post a Comment