4/21/2011

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம்


தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன.
அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் திகதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆணையத்தை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன.
இந்நிலையில், வெற்றியை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரதான கட்சிகளிடையே திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மே 13ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 16ம் திகதிக்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 17ம் திகதி சட்டசபையை கூட்ட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அத்திகதியுடன் சட்டசபை ஆயுட்கால வரையறை முடிகிறது.
இதுபோன்ற சூழலில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின், வெறும் நான்கு நாட்களே அவகாசம் இருப்பதால் இந்த குறுகிய காலத்திற்குள் ஆட்சி அமைக்க தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று, கட்சிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. வோ, அ. தி.மு.க வோ எந்தக் கட்சியாக இருந்தாலும், தனித்து ஆட்சி அமைக்க வேண்டுமெனில், 118 இடங்களில் வெற்றிபெற வேண்டும். 119 இடங்களில் போட்டியிட்டுள்ள தி.மு.க தனித்து ஆட்சி அமைப்பதில் சாத்தியமில்லை.
இதை கருணாநிதியும் உணர்ந்துள்ளார். அதனால் தான், ‘கூட்டணி ஆட்சி அமைக்க தி.மு.க விற்கு தயக்கம் எதுவும் இல்லை’ என ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். எனவே, கூட்டணிக் கட்சிகள் சேர்ந்து, ஆட்சி அமைப்பதற்கான இடங்களைப் பெற்றாலும், யார் யாருக்கு அமைச்சர் பதவி, யார் யாருக்கு எந்தெந்த துறை என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
இதையெல்லாம் ஆலோசித்து முடிவு எடுக்க கால அவகாசம் இல்லை. முதலில் முதல்வர், மற்ற இரு அமைச்சர்கள் பதவி ஏற்பு என்றாலும், அதைப்பேசி முடிவு செய்வதற்கு கால அவகாசம் தேவை.
எப்படியிருந்தாலும் எந்தக் கூட்டணி அதிக இடங்களை பெறுகிறதோ, அந்தக் கூட்டணி பெரும்பான்மையை காட்டும் வகையில் கட்சி எம். எல். எ. க்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் அளிக்க வேண்டும்.
அவர் திருப்தியடைந்தால், அந்த கூட்டணியின் தலைமையை ஆட்சி அமைக்க அழைப்பார். ஆனால், ஆதரவு கடிதம் தருவதில் சிக்கல் ஏற்பட்டால், எந்தக் கட்சி தனித்து அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளதோ அக்கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதுடன், குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்ட சபையில் நிரூபிக்க வேண்டுமென கெடு விதிப்பார்.
அதைவிட தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 13ம் திகதியே தெரிந்த போதும், வெற்றி பெறும் வேட்பாளர், தேர்தல் அதிகாரியின் சான்றிதழை அதே நாளில் பெற்றாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
தேர்தல் முடிவுகளை ஆணையம் அறிவித்து, சட்டசபையை கூட்டுவதற்கான அறிவிப்பு தொடர வேண்டும். அதற்குப் பின் இடைக்கால சபாநாயகர் தேர்வு என்று ஏராளமான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால், இத்தடவை தமிழகத்தில் முற்றிலும் வித்தியாசமான தேர்தல் மட்டுமல்ல, காத்திருப்புக்குப் பின் அரசு அமைவதும் பெரிய விவாதப் பொருளாகியிருக்கிறது.

0 commentaires :

Post a Comment