ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளர்கள் சந்திப்பில் ஜனாதிபதி
உலகின் முன் வைக்கப்படும் பொய்களுக்கு பதிலளிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமே மேதினம்
உலகின் முன் வைக்கப்படும் பொய்களுக்கு பதிலளிப்பதற்கான சிறந்த சந்தர்ப்பமே மேதினம்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முடியாத வகையில் வடக்கு - கிழக்கில் முழுமையான அபிவிருத்தி
எமது மனிதாபிமான வெற்றியை குறைத்து மதிப்பிட்டு உலகத்தினர் முன்பாக முன்வைக்கப்படும் பொய்களுக்கு தகுந்த பதிலளிக்கும் வாய்ப்பாக மேதினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
உலகத்தின் முன்பாக எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அசாதாரண செயற்பாடுகளை எடுத்துக்காட்டுவதற்கு நாம் தயாராக வேண்டும். இதற்காக இம்முறை மேதினத்தை ஒரு சந்தர்ப்பமாக்கிக் கொள்வது அவசியம் என்றும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.
தமிழ் - சிங்கள புத்தாண்டின் நிமித்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நேற்று முன்தினம் அலரி மாளிகையில் சந்தித்தார். இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மட்டுமன்றி முழு நாட்டையும் பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுக்க எமக்கு கடந்த காலத்தில் முடிந்துள்ளது.
இருப்பினும் மேதினமொன்றில்தான் நாட்டின் தலைவராக இருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பயங்கரவாதிகளின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டார். இது போன்ற பல சம்பவங்களை நாம் அனுபவித்துள்ளோம்.
இவ்வாறான நிலையில்தான் நாம் இந்த நாட்டை சுதந்திர நாடாக்கினோம். நாட்டின் சுதந்திரத்தை இப்போது நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். இந்த சிங்கள-தமிழ் புதுவருடத்தில் நாம் சுதந்திரமாக எமது வேலைகளை செய்து வருவது எமக்கு நன்கு தெரிகிறது. கடந்த காலத்தில் நாம் மே தினத்தை அனுஷ்டிக்காத வருடங்கள் இருந்தன. அது பயங்கரவாதத்துக்கு பயந்திருந்ததனாலேயாகும்.
இப்போது நாம் சுதந்திரமாக மே தினத்தை அனுஷ்டிக்கலாம் உலக தொழிலாளர் தினத்தை உயர்ந்த மட்டத்தில் அனுஷ்டிக்கவேண்டும் என்ற நம்பிக்கை எமக்கு இப்போது இருக்கிறது.
பயங்கரவாதத்தை எமது தாய் நாட்டிலிருந்து விரட்டியடித்ததன் பிரதிபலன் முழு நாட்டுக்கும் மட்டுமல்ல. இன்று முழு உலகமும் நன்மை பெறுகிறது. உலகில் மிகவும் குரூரமான பயங்கரவாதிகள் புலிகள் இயக்கத்தினரே என்று உலகிலுள்ள பெரும்பாலான அமைப்புகள் தெளிவாக கூறியிருந்தன.
அதேவேளை இன்று உலக நாடுகள் எமக்கு விடுத்துள்ள அச்சுறுத்தல்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள், அதனை ஒரு பக்கத்தில் அமைப்பு ரீதியாக உலக நாடுகளின் முன்னால் சிலர் எடுத்துச் செல்கின்றனர் மற்றும் சிலர் அரசியலின் கீழ் மட்டத்தில் சிக்கி அரசியல் மற்றும் நாட்டைப் பற்றி எந்தவொரு விளக்கமும் இல்லாது தாய் நாட்டுக்கு உரிய கெளரவம் என்ன என்பதை அறியாது டொலர்களுக்கு அடிமையாகி அரசியல் கொள்கைகளுக்குள் சிக்கி தான் பிறந்த நாட்டுக்கு துரோகம் இழைத்து, உலகத்தினர் முன்னிலையில் தவறான அர்த்தத்தை வழங்குகின்றனர்.
இன்னும் சிலர் காணாமற்போனோரின் பட்டியலை தேடினர். அப்பாவிகளையும் சிவிலியன்களையும் நாம் கொலை செய்தோம் என்று எங்கள் மீது குற்றம் சுமத்தினர். நாம் ஆஸ்பத்திரிகள் மீது குண்டு வீசினோம் என்று கூறினர்.
அவ்வாறான கட்டுக்கதைகளை பரப்புவதற்கு தேவையான பின்னணியை அவர்கள் உருவாக்கினர்.எனினும் சிவிலியன்களுக்கு எந்த இன்னலும் ஏற்படாத வகையில் மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுக்குமாறே நாம் எமது படையினருக்கு தெளிவாக கூறியிருந்தோம்.
யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் பல்வேறு அறிக்கைகளை சமர்ப்பித்து அரசாங்கத்தை பிரச்சினையில் சிக்க வைப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்காக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். நாட்டில் மனித உரிமை இல்லை என்று கூறுகின்றனர். எமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்கின்றனர். பத்திரிகை சதந்திரம் இல்லையென்றும் வேறு பல குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன.
இது தொடர்பாக நாட்டின் தலைவரையும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களையும் போர்க் குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர். புலிகள் தோல்வியடைந்து வந்த போது சிலர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர். அவர்களுக்கு மீண்டும் இலங்கைக்கு வரவேண்டிய அவசியம் அல்லது தேவை இல்லை. ஆனால் இலங்கைக்கு திரும்பி வர வேண்டிய தேவை உள்ள ஒரு சிலரும் உள்ளனர்.
தமிழ் மக்கள் இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வருகின்றனர். அவர்களது மூன்றாவது பரம்பரைக்கு இது எதுவுமே தெரியாது. புலிகளினால் செய்யப்பட்ட கொள்கை விளக்கங்களை மட்டுமே அவர்கள் அறிவர். அவர்களை புலிகள் மூளைச் சலவை செய்துள்ளனர். அவர்களுக்கு படிப்பிக்கப்பட்டது. இலங்கையின் சரித்திரமல்ல.
ஈழச் சரித்திரம் மட்டுமே. இவர்கள் கொழும்புக்குக்கூட வந்ததில்லை. ஒரு சிலர் இலங்கைக்கே வந்ததில்லை. இவர்களுக்கு தமிழ் பாஷையில் பேச முடியாது. இவர்கள்தான் இன்று யுத்தத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். இங்கு வருவதற்கு விருப்பம் இல்லாத சிலரும் உள்ளனர். அவர்களுக்கு அங்கேயே இருக்க வேண்டியுள்ளது.
இறுதி நேரத்தில் எமக்கு சர்வதேச ரீதியில் ஒரு சில நிர்ப்பந்தங்கள் எழுந்தன. நாம் அவற்றுக்கு உரிய முறையில் முகம் கொடுத்தோம். அதனால் நாம் செய்வது சரி என்பது மட்டுமே எமக்கு தேவையாக இருந்தது. நாம் பயங்கரவாதத்துக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல. சொல்வதை நாம் தெளிவாகச் சொன்னோம். எம்முடன் இப்போது நிறையப்பேர் உள்ளனர். கடந்த தேர்தலின் போது வடக்கில் கிடைத்த வாக்குகளை பார்த்தால் அது நமக்கு நன்றாக விளங்குகிறது.
30 வருடங்களாக பயங்கரவாதிகளினால் மக்கள் மனங்கள் திசை மாற்றப்பட்டுள்ளன. மக்களை பகைவர்களைப் போலாக்கிய ஒரு குழுவினருடன்தான் நாம் இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் கிழக்கை அபிவிருத்தி செய்துள்ளோம். வடக்கு வசந்தத்துக்கு, கிழக்கு உதயத்திற்கு பாரிய செலவினை செய்துள்ளோம்.
30 வருட காலம் புலிகள் செய்த ஆட்டூழியங்கள் மீண்டும் ஒரு முறை ஏற்படாத வகையில் வடக்கை கட்டி எழுப்பவே தாம் முயற்சிக்கிறோம். பாடசாலைகள், வீதிகள், பாலங்கள், வைத்தியசாலைகள் ஆகிய அனைத்தையும் புலிகள் அழித்தொழித்தனர்.
இதுதான் அன்றிருந்த நிலை. இவ்வாறான வீழ்ச்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. 2 ஆயிரம் பில்லியனுக்கு மேற்பட்ட நிதியை நாம் வடக்குக்கு செலவிட்டுள்ளோம். அபிவிருத்தியை மேற்கொள்ளவே அதனைச் செய்தோம். எனினும் இடம்பெயர்ந்தோர் மற்றும் சிறுவர் போராளிகளை சிறைகளில் வைத்து பாரதூரமான சித்திரவதைகளை செய்கிறோம் என்ற பொய்க்கதைகளையே கேட்கவேண்டியுள்ளது.
இந்த நாட்டில் நீதியொன்று உள்ளது. பிரதமரில் இருந்து சாதாரண குடிமகன் வரை இந்த நீதி சமமாக செயற்படுகிறது. இந்த நீதி அனைவருக்கும் பொதுவானது இந்த நீதியை மீற எவருக்கும் முடியாது.
இன்று நாம் சிறுவர் போராளிகளை விடுதலை செய்துள்ளோம். அதேபோன்று சந்தேக நபர்களையும் பெருமளவில் விடுதலை செய்துள்ளோம். அவர்களை புனருத்தாரணம் செய்து சமூகத்துக்கு ஏற்ற பிரஜைகளாக மாற்றியுள்ளோம்.
நாம் பயங்கரவாதிகளை தோல்வியுறச் செய்ததால் பலர் எம்முடன் கோபமாக உள்ளனர். இந்த தாய் நாட்டுக்காக எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ள நான் தயார். அதனை சந்தோஷமாகவே ஏற்றக்கொள்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்கிறேன். எமது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட சேவையை குறைத்துச் சொல்ல எவருக்கும் முடியாது.
அதனால் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால், இம்முறை மேதினத்தை உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைக்காகவே என்பதைப்போல் நாம் பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடுவதால் உலகத்தினர் எதிரே எடுத்துச் செல்லப்படும் பொய் பிரசாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் வாய்ப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
எமது சக்தியை காட்டுவதுதான் நாம் செய்ய வேண்டியதாகும். இனிமேல் நாம் எமது சக்தியை காட்டவேண்டும். தொழிலாளர் தினம் அனுஷ்டிப்பதற்கு மட்டுமல்ல. உலகத்தின் முன்னால் எமது நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அசாதாரண செயற்பாடுகளை எடுத்துக் காட்டுவதற்கு நாம் இம்முறை மே தினத்தை ஒரு சந்தப்பமாக்கிக் கொள்ள தயாராக வேண்டுமென உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.
0 commentaires :
Post a Comment