தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின உரை அக் கட்சியின் தலைவர் சி. சந்திரகாந்தன் அவர்களால் ஆற்றப்பட்டது. அதனை வாசகர்களுக்கு முழுமையாகத் தருகின்றோம்.
இன்றைய இச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின் கதாநாயகர்களை ஈன்றெடுத்த தாய்தந்தையர்கள், சகோதர சகோதரிகள்,எமது அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைத்து அழைப்பு அதிதிகள் மற்றும் எமது கட்சியின் முக்கியஸ்த்தர்கள், உறுப்பினர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
இன்றைய நாள் கிழக்கு மக்களின் விடிவுக்காய் வித்திட்ட வீரமறவர்களை நினைவு கூறும் ஒரு சோக நாள். இத்தினத்தில் எம் சமூகத்தின் மறு மலர்ச்சிக்கும் அரசியல் ரீதியான தனித்துவத்திற்கும் களம் அமைத்து, தம்மை வித்தாக்கி அதில் சமூகத்தின் எழுச்சியை விருட்சமாக்கிய எம் உன்னத மாவீரர்களை நினைவு கூறும் ஒரு புனித நாள். இத்தருணத்தில் அவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காகவும் அவர்களினது எண்ணக்கிடக்கைகள் நிறைவேறவும் ஆத்மாத்தமாக பிரார்த்திக்கின்றேன்.
உண்மையில் இத்தினமானது கிழக்கு மாகாணத்தில் பிறந்த ஒவ்வொருவரும் நேசிக்கும் ஒரு நாளாகும். அதுமாத்திரமல்லாது தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும் குறிப்பாக கிழக்குச்சார்ந்த அரசியல் ரீதியில் தூரநோக்குடன் சிந்திக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஓர் தினமாகும். ஏனெனில் இற்றைக்கு 7 வருடங்களுக்கு முன்னர் இதே தினத்தில், இதே இடத்தில் அரங்கேறிய கொடூரமான சகோதரப்படுகொலைதான், எமது சமூகம் தனித்துவம் சார்ந்த அரசியல் ரீதியான பாரிய மறுமலர்ச்சிக்கான வித்தாக அமைந்தது.
ஒடுக்கப்பட்ட ஓர் சமூகத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அச்சமூகத்தின் விடிவிற்காக, உரிமைக்காக, நல்வாழ்வுக்காக எங்களையே அர்ப்பணித்து விடுதலைப்போரில் ஐக்கியமானோம். எங்களைப்போன்று தாய் மண்ணின் மீதும், பற்றுக் கொண்ட சமூகத்தின் உரிமைமீதும், தீராத தாகம் கொண்ட பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தங்களையே அர்ப்பணித்து விடுதலை பெற முன்வந்தார்கள். ஆனால் எங்களைப்போன்ற அவ் இளைஞர் யுவதிகளின் தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் ஓர் வறையறைக்கும் அப்பால் வீணாகிப் போய்விட்டது. பாரிய உயிரிழப்புக்கள், உடமை இழப்புக்கள், உட்கட்டமைப்பு சீர்குலைவு, நாளுக்கு நாள் இடம் பெயர்வு, அகதி வாழ்க்கை என்பன பன்மடங்காக பல்கிப்பெருகினவே தவிர, போராட்டத்தினால் குறைவடையவில்லை. இவற்றுக்கெல்லாம்; காரணமென்ன என்று தேடிய போதுதான், இரானுவரீதியில் பெறப்பட்ட அனைத்து வெற்றிகளும் அரசியல் மயமாக்கப்படவில்லை என்ற உண்மை காலங்கடந்து புலனாகியது.
அதுமாத்திரமன்றி, கிழக்கு மாகாணம் போராட்டத்தில் தனது சக்திக்கும் அப்பால் மனிதவளங்களையும், ஏனைய வளங்களையும் வாரிக்ககொடுத்த போதும், களங்களில் அதற்கிருந்த பெறுமதியானது குறிப்பிடும் அளவிற்கு எதுவுமே இல்லை. கிழக்கு மாகாணம் மனித வளங்களை உற்பத்தி செய்யும் ஓர் இயந்திரமாகவே பார்க்கப்பட்டதே தவிர, மாகாணத்தின் இருப்பு அதன் தனித்துவம், அப்போராளிகள், மக்களின் உணர்வுகள், எண்ணக்கிடக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பது வேதனை.
எனவேதான் தொடர்ந்து எமது மாகாணத்தின் மனித வலுவை, குறிப்பாக உயிர்த்துடிப்புள்ள இளைஞர் யுவதிகளை இழந்து, அதிலும் எமது சுயமரியாதையை கருத்திற் கொள்ளாத, எமது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத ‘வக்கிர மேலாதிக்கம்’ கொண்ட ஓர் கூட்டத்துடன் இணைந்து இரத்தம் சிந்துவதில் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பதை நன்கு உணர்ந்தோம். அவ்வாறு உணர்ந்துதான் வரலாற்று ரீதியான ஓர் மிகப்பெரிய தீர்க்கமான முடிவு 7 வருடங்களுக்கு முன் எய்தப்பட்டது. நாம் பிரிந்து போக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத்தினாலும் வக்கிர மேலாதிக்கம் கொண்டவர்களினாலும் எம்மீது திணிக்கப்பட்டதே தவிர, எங்களால் விரும்பி எடுக்கப்பட்ட ஓர் முடிவு அல்ல என்பதனை வரலாறு நினைவு கூறும்.
நாங்கள் போராட்டத்திலிருந்து தனித்துவமாக பிரிந்து போதல் என்பது, மற்றவர்களை காட்டிக் கொடுப்பதற்கோ அல்லது களங்கப்படுத்துவதற்கோ என்ற கருத்துப்படாது. எமது சமூகத்திற்கு தேவையான தனித்துவத்தையும் அவர்கள் எதிர் கொள்ளும் இன்னல்களையும் கருத்தில் கொண்டு, தவறான ஓர் பாதையிலிருந்து மீண்டெழுந்து, சரியான பாதையில் செல்வதற்கான முதல் அடி. ஆனால் அன்று அது எவ்வாறு பார்க்கப்பட்டது என பார்க்கும் போது, நெஞ்சு பதபதக்கிறது. போராட்ட வக்கிர மேலாதிக்கம் கொண்டவர்களாலும், அவர்களை வாஞ்சி வளர்த்தவர்களாலும், அவர்களை துதிபாடி வளர்த்த ஊடகங்களாலும் ஒரே இரவில் நாங்கள் துரோகிகளாக்கப்பட்டோம். கடந்த கால எமது இளைஞர் யுவதிகளின் தியாகங்கள், உயிரிழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள் அனைத்துமே அர்த்தமற்றுப் போயின.
எமது முடிவில் முரண்பாடு இருந்திருந்தால், அது எவ்வாறு தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்? படித்தவர்கள், பண்பாளர்கள், அரசியலில் மாமேதைகள் எனக் கூறிக் கொள்பவர்களும் அன்றைய மேலாதிக்கம் சார்ந்த ஊடகங்களும் எவ்வாறான வழியை காட்டின? ஓர் அந்நியன் மீது ஓர் மாற்றான்; மீது மேற்கொள்ளப்படும் கொடூரமான மனிதாபிமானமற்ற ஆக்கிரமிப்புக் குறித்தபடையெடுப்பு என இவர்கள் அலவலாவினர். அது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், பக்கம் பக்கமாகவும் எழுதப்பட்டன. இவர்கள் யாரும் அன்று எமது அபிலாசைகள் குறித்தோ, உள்ளக்கிடக்கைகள்; குறித்தோ, எமது உணர்வுகள் குறித்தோ, போராட்டத்தில் எமது பங்களிப்பு குறித்தோ, இதன் பின்னர் ஏற்படப்போகும் பாரிய அழிவுகள் குறித்தோ சிறிதளவேனும் யாரும் சிந்திக்கவில்லை. நியாயபூர்வமான எமது அபிலாசைகள், உள்ளக்கிடக்கைகள் போராட்டத்தலைமைகளால் சுமுகமாக தீர்க்கப்படும் என்ற அவாவில் இருந்த எமக்கு, எம்மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்பு என்றும் மறக்கமுடியாத மன்னிக்கமுடியாத பேரிடியாக அமைந்தது.
இதோ இந்த வெருகல் ஆற்றங்கரையில் எமது சமூகத்தின் விடுதலைக்காய் தங்களையே அர்ப்பணித்து போராட முன்வந்த எம்மவர்கள் நயவஞ்சகமாய் கொல்லப்பட்டார்கள். அதுமாத்திரமன்றி சமூகத்தின் விடிவிற்காய் தன்னுயிரை துச்சமென நினைத்து ஆண்களுக்கு சமமாய் களமாடிய எமது சகோதரிகளும் களங்கப்படுத்தப்பட்டு காட்டு மிராண்டிக் தனமாய் அழிக்கப்பட்டார்கள். இவை மேற்கொள்ளப்பட்டதும் இதற்கான உத்தரவு மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதும் வேற்றானால் அல்ல. எமது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாலேயேதான் இப்பாரிய கொடுமை எம்மீது ஏவப்பட்டது. இதற்கு முன்பும் பல போராட்டங்களில் பிளவுகளும் பிரிவுகளும் ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் பேச்சு வார்த்தைகள் மூலமும் அவை பயனற்றபோதுதான், பலப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதையும் நாம் காண்கின்றோம். இவை எல்லாம் யாழ்ப்பாணத்திலும் வன்னிக்காடுகளிலும் நடந்தவைகள். ஆனால் நாங்கள் கிழக்கு மாகாணத்தவர்கள் என்பதனாலேயேதான் எதையும் செய்துவிட்டு நியாயம் கற்பிக்கலாம் என நினைத்தார்கள். அதனாலேயேதான் சமரசத்திற்கான எந்தவொரு முன் முயற்சியும் மேற்கொள்ளப்படாமல் எம்மை துப்பாக்கியால் குறிவைத்து குதறியது.
தேசிய ஒற்றுமை குறித்து பேசுகின்றவர்கள், தமிழரின் தாயகம் குறித்து வாதிடுகின்றவர்கள்;, விளக்க உரையாற்றுகின்ற அரசியல் மேதைகள் என தங்களை இனங்காட்டுவோர், அதே போன்று துதிபாடும் ஊடகங்கள் ஏன் எம்மவர்மீதான சகோரப்படுகொலையை கண்டிக்கவில்லை. கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை. அப்படுகொலைகளைபாராட்டி, பட்டம் கொடுத்து, மென்மேலும் எம் கிழக்கு மாகாண புத்திஜீவிகள,; குழந்தைகள், இளைஞர் யுவதிகளையும் கொல்வதற்கு வழி வகுத்தது ஏன்? அதற்கான நியாயங்களை வரலாற்றில் என்றாவது சமர்ப்பிக்க முடியுமா? நிச்சயமாக இல்லை.
இவ் வெருகல் ஆற்றங்கரையில் ஆரம்பித்த எமக்கெதிரான சகோர மனிதப் படுகொலைகள் எமது கிழக்குமண்; தாண்டியும் எம்மவர்க்கு எதிராக தொடர்ந்தன. கொழும்பு கொட்டாவையில் எமது மூத்த போராளிகளுக்கெதிராகவும் இதே போன்ற சகோதரமனிதப் படுகொலைகள் அரங்கேறின. எமது கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த போராளிகளுக்கு மாத்திரம் அல்லாமல், எம்மை ஆதரித்தார்கள்;, ஊக்கப்படுத்தினார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் சகோதரசகோதரிகள், தாய்தந்தையர்கள், உற்றார் உறவினர்களுக்கு எதிராகவும் படுகொலைக் களம், விரிந்து கொண்டே சென்றது. மறுபுறம் தமிழ் மேலாதிக்க வக்கிரம் கொண்ட ஊடகங்கள் துரோகிகளாக, நயவஞ்சகர்களாக மிகக் கீழ்த்தரமான முறையில் எம்மை தூற்றின. அத்தோடு உண்மைகளை மறைத்து அநியாயங்களுக்கு நியாயம் கற்பிக்க விளைந்தார்கள். தொடர்ந்துகொண்டிருந்த எம் மக்களுக்கெதிரான மனிதாபிமானமற்ற படுகொலைகளுக்கு மத்தியிலும், இழந்த எமது மாவீரர்களின் தியாக விதைகளை, ஜனநாயகப் பாதையில் அரசியல் விருட்சமாக்க நாம் முயன்றோம்.
அதனடிப்படையில் பாரியஇழப்புக்கள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் எமது மக்களின் அடிப்படை உரிமைகள், அரசியல் அபிலாசைகள், பொருளாதார தேவைகள் என்பவற்றைக் கருத்திற் கொண்டு ஜனநாயகப் பாதையில் அவற்றை எய்துவதற்கான முதல் அடியினை எடுத்து வைத்தோம். அதுதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி. எங்களது இவ் அரசியல் பிரவேசமானது, ஏனையவர்களைப் போன்று சாமரம் வீசப்பட்ட சொகுசுகள் நிறைந்த உல்லாச புரி அல்ல. மாறாக எமது போராளிகளின் சகோதரர்களின் தாய்தந்தையர்களின் குருதியாலும் கண்ணீராலும் தியாகத்தாலும் வளர்க்கப்பட்ட ஓர் கட்சியாகும். மிகப் பாரிய தியாகத்தினாலும் அர்ப்பணிப்புக்களினாலும் அடியெடுத்து வைக்கப்பட்ட அரசியல் பயணத்தினால்தான் முதல் தடவையிலே எம்மால் மிகப் பாரிய அரசியல் இலக்குகளை எய்த முடிந்தது. தமிழ் பேசும் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வாக இன்று எழுத்துருவில் நடைமுறையிலிருக்கின்ற மாகாண சபையை ஆளும் பிரதிநிதித்துவத்தை நாம் பெற்றுள்ளோம். எமது போராட்டத்தில் எம்மோடு தம்மையே இணைத்துக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் இன்று எம்வசமே உள்ளன.
எம் தியாகத்திலும், எம் அர்ப்பணிப்பிலும், உருவான அரசியல் அடைவுகளை, நாம் தொடர்ந்தும் பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவைகளின் ஊடாகவே எம்மக்களின் அரசியல் அபிலாசைகள், அடிப்படைத் தேவைகளை நாம் பூர்த்தி செய்ய முடியும். இதுவே எம்மவரின் தியாகத்துக்கான வெகுமதியும் கூட. எனவே தான் காலத்தின் தேவை உணர்ந்து, அரசியல் ரீதியிலான எமது இலக்குகளை அடைந்;து கொள்ள, எமது மாவீரர்களின் தியாகத்திற்கு பெறுமதி சேர்க்க, காலத்தின் தேவை உணர்ந்து ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பங்காளியானோம்.
இன்று நாங்கள் தனித்துவமாக எம்மக்களின் உரிமைகளுக்காய், அபிவிருத்திக்காய் சோரம் போகாமல் பேரம் பேசும் சக்தியை பெற்று இருக்கின்றோம். நாம் அரசோடு சங்கமமாகவில்லை. சரியானவைகளை சரி என்றும், பிழையானவைகளை பிழை என்றும் நெஞ்சை நிமிர்த்தி விமர்சனம் செய்யும் எம்மக்கள் சார்ந்த தனிக்கட்சியாக உள்ளோம். இது எமது அரசியல் வாழ்வில் மிகப் பெரிய அடைவே ஆகும்.
இக்கட்சியை கட்டிக்காத்து அதன் ஊடாக எமது பேரம் பேசும் சக்தியை அதிகரித்து, எமது மக்களின் தேவைகள், அபிவிருத்திகளை பேரம் பேசி பெற்றுக்கொள்ளும் நடைமுறைசார் வியூகத்தை கடைப்பிடிப்பதே எமது மாவீரர்களின் தியாகத்துக்கு நாம் செலுத்தும் காணிக்கை ஆகும். இவ் அரசியல் இலக்கானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இலக்கு மாத்திரமின்றி இம் மண்னை நேசிக்கின்ற எமது தனித்துவத்தில் பற்றுறுதி கொண்ட அனைவரினனதும்; அரசியல் இலக்காக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய அரசியல் காலஓட்டத்தில் அரசியல் அமைப்பில் எழுதப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை வலுப்படுத்தி அதற்கான முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொண்டு அதனூடாக அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே சாலச் சிறந்த வழியாகும். இந்த அரசியல் வியூகத்தை வலியுறுத்துகின்ற அதற்காக இழப்புகளையும் தியாகங்களையும் செய்த ஒரே கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்றி வேறொன்றும் இல்லை. எனவே இவ் யதார்த்தபூர்வமான நடைமுறைச்சாத்தியமான அரசியல் இலக்கை எய்தி, எமது சுபீட்சமான சகோதரத்துடன் கூடிய, உறுதியான அரசியல் தலைமைத்துவத்தை கொண்ட, இழப்புக்கள், அழிவுகள் இல்லா ஓர் புதுமையான சமூகத்தை கட்டியெழுப்ப, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பலப்படுத்துவது காலத்தின் கட்டாய கடமையாகும்.
எம்மவர் மீதான சகோதரப் படுகொலை தமிழர் வரலாற்றிலே அறுதியும் இறுதியுமாக அமைய வேண்டும். எம் மாவீரச் செல்வங்களின் தியாகங்களின் விளைவால் பெறப்பட்ட ஜனநாயகச் சூழல் கிழக்கில் தொடர்ந்தும் வலுப் பெற நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதோடு, ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் தீர்வு விடயங்களிலும் அவர்களினது அரசியல் அபிலாசைகள் விடங்களிலும் ஒருமித்த கருத்தோடு ஒற்றுமையாய் பயணிக்க என்றும் நாம் தயார் என்ற செய்தியையும் சொல்லி வைக்க விரும்புகின்றேன். எனவே ஒற்றுமை உரிமை தனித்துவத்திற்காய் ஒன்றிணைய வாருங்கள் என்று, அன்பார்ந்த எம் உறவுகளே! உங்களை உரிமையோடு அழைக்கின்றேன்.
நன்றி! வணக்கம்!
நன்றி! வணக்கம்!
ஓற்றுமை! உரிமை! தனித்துவம்.!
0 commentaires :
Post a Comment