இது ஏற்றுக்கொள்ள முடியாத தவறான அறிக்கை என்று இலங்கை திட்டவட்டமாக அறிவிப்பு
*குழுவுக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை
*அதிகார எல்லையை மீறி ஐ.நா செயற்படுகிறது
ஐ. நா. செயலாளர் நாயகம் பான்கிமூனின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடவோ அதிலுள்ள சிபார்சுகளை செயற்படுத்தவோ கூடாது என இலங்கை அரசாங்கம் ஐ. நா. செயலாளரை கோரியுள்ளது. நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறானது எனவும் அதன் மூலம் இலங்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐ. நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க மாத்திரமே நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டது. இதற்கு விசாரணை நடத்தவோ சிபார்சுகளை செயற்படுத்தவோ அதிகாரம் கிடையாது. இந்தக் குழு ஐ. நா. குழுவோ உத்தியோகபூர்வ அதிகாரமுள்ள குழுவோ அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஐ. நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:-
ஐ. நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 12 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள எமது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. இது ஐ. நா. வினால் நியமிக்கப்பட்ட குழுவாக குறிப்பிடுவது தவறாகும். தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக ஐ. நா. செயலாளர் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது. குற்றச் சாட்டுகள் குறித்து விசாரிக்கவோ இதன் உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வரவோ நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தமது அதிகார எல்லையை மீறி இந்தக் குழு செயற்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் கசப்பான யுகத்திற்கு முடிவு காணப்பட்டது. பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் சகல இனத்தவரையும் ஒன்றுபடுத்தவும் நாம் முயற்சி செய்து வருகிறோம். இந்த நிலையில் பிளவு ஏற்படுத்துவது உகந்ததல்ல. சகல மக்களையும் இணைப்பதே காலத்தின் தேவையாகும்.
ஆலோசனை குழுவின் அறிக்கை மூலம் எத்தகைய பலன் ஏற்படும் என்பதை ஐ. நா. ஆழமாக சிந்திக்க வேண்டும். குழுவின் அறிக்கை மூலம் நாம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமா அல்லது அதனால் தடங்கல் ஏற்படுமா என்பதை கவனிக்க வேண்டும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பலவும் பாராட்டுத் தெரிவித்தன.
ஆனால், ஆணைக்குழுவின் பணிகள் முடிவடைந்து அதன் அறிக்கை வெளியாக முன்னரே ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் காலம் மே 15 ஆம் திகதியே முடிவடைகிறது. அதன் அறிக்கையை நாம் எதிர்பார்த்துள்ளோம்.
அதன் இடைக்கால அறிக்கையை செயற்படுத்த சட்டமா அதிபர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட முன் அது தொடர்பில் கருத்துத் கூற முடியாது. இலங்கையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட்டது முற்றிலும் தவறாகும்.
உள்நாட்டு செயற்பாட்டை நிராகரித்து அதற்கு சர்வதேச மட்டத்தில் தீர்வு காண முயல்வது தவறானதாகும். நிபுணர் குழுவின் அறிக்கை இந்த வாரம் வெளியிடப்படும் என ஐ. நா. பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிடுவது முற்றிலும் தவறானதாகும். அதனால் எமது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும். இது சட்டபூர்வமானதல்ல. அது அநீதியான செயலாகும்.
நாம் எழுச்சி பெறுகையில் அதற்கு வேண்டுமென்றே தடங்கல் செய்யப்படுகிறது. இலங்கை ஐ. நா. அங்கத்துவநாடாகும். எமது நாட்டையும்
ஐ. நா. கெளரவமாக நடக்க வேண்டும். இலங்கைக்கு நன்மை செய்ய ஐ. நா.வும் சர்வதேச சமூகமும் முன்வர வேண்டும். நாம் நியமித்துள்ள ஆணைக் குழுவை மதிக்க வேண்டும்.
ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவை நாம் ஒரு போதும் ஏற்கவில்லை. அதற்கு அந்தக் குழுவுக்கு வரையறை உள்ளது. அதனை மீறிச் செயற்பட முடியாது. நிபுணர் குழுவின் அறிக்கை எமது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்ட போது எமது ஆட்சேபனையை முன்வைத்தோம். அதனை பிரசுரிக்கவோ வெளியிடவோ செயற்படுத்தவோ கூடாது என ஐ. நா. செயலாளருக்கு அறிவித்துள்ளோம்.
நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவது ஐ. நா. நடைமுறைமைக்கு முற்றிலும் தவறாகும்.
இந்த அறிக்கை 200 பக்கங்களைக் கொண்டதாகும். அதன் உள்ளடக்கம் குறித்து எமது நிலைப்பாடை வெளியிட முடியாது. ஏனென்றால், அந்த அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. அறிக்கை வெளியிடப்பட்டால் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள சில விடயங்கள் ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளன. இலங்கை அரசாங்கமே அதனை வெளியிட்டுள்ளதாக ஐ. நா. பேச்சாளர் கூறியுள்ளதை நிராகரிக்கிறோம். நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள நாம் ஏன் அதனை வெளியிட வேண்டும்.
ஐ. நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்ட குழுவால் எப்படி அதனை வெளியிட முடியும். ஐ. நா. வுக்கென்று சில கடப்பாடுகள் உள்ளன. எனவே அது உறுப்பு நாடுகளை மதிக்க வேண்டும்.
தூதுவர்களிடம் விளக்கம்
ஐ. நா. செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து சகல வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்தித்து எமது நிலைப்பாட்டை தெரிவித்தோம். உலக சமூகம் எமது கருத்தை ஏற்கும் என்று நம்புகிறோம். நீதி எமது பக்கமே உள்ளது.
நிபுணர் குழுவின் அறிக்கை ஐ. நா. பாதுகாப்பு சபைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் செய்தி முற்றிலும் தவறானதாகும். நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாமென நாம் ஐ.நாவைக் கோரியுள்ளோம்.
காஸாவில் இடம்பெற்ற கொலைகள் குறித்து விசாரணை செய்ய ஐ. நா. குழுவொன்றை நியமித்தது. ஆனால் இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இதனை எதிர்த்தன. இந்த நிலையில் அதன் தலைவர் தனது அறிக்கை தவறானது என்று கூறினார். அத்தகைய நிலை இலங்கை தொடர்பிலும் ஏற்படுவதை ஏற்க முடியாது.
நாட்டுக்கு எதிராக இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி சகலரும் பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும் என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment