கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாதுள்ள வவுனியா நகரசபையில் ஓர் உறுப்பினராக தொடர்ந்தும் இருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதனை கருத்திற் கொண்டு நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து கொள்கிறேன் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு நெளுக்குளம்
பிரதேசசபை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த திரு.ஜி.ரி.லிங்கநாதன், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கென மக்கள் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். அவர்கள் மக்களின் தேவையை உணர்ந்து செயற்பட வேண்டும். அந்த வகையில் வவுனியா நகரசபை கடந்த ஒன்றரை வருடங்களாக செயற்படாது போய்விட்டது. மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நகரசபை தவறிவிட்டது. இதனால் மக்களின் கோபத்திற்கு உறுப்பினராக இருக்கும் நாமும் காரணமாகி விட முடியாது என்பதனைக் கருத்திற் கொண்டும், நகரசபை ஆளும் நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பில் நாமும் வீணாக சம்பந்தப்பட்டுள்ளமையாலும் மக்களுக்கு பயன்படாத நகரசபையில் இருந்து இராஜினாமா செய்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் பிரதேச சபை தலைவர், உப தலைவர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment