4/16/2011

லிபியா மீதான தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்பு


லிபியா மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பு மாநாடு சீனாவின் சான்யா நகரில் நடந்தது. இதில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சீன ஜனாதிபதி ஹ¥ ஜிண்டாவ், பிரேசில் ஜனாதிபதி தில்மா ரெளசெப், ரஷ்யா ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜெகப் சுமா ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் போது லிபியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. மாநாட்டுக்குப் பின்னர் அனைத்துத் தலைவர்களும் வியாழக்கிழமை கூட்டறிக்கை வெளியிட்டனர். கூட்டுச் செயல் திட்டத்தையும் அறிவித்தனர்.
அதில் லிபியா மீது நேட்டோ படைகள் தலைமையில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா. நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இராணுவத்தைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்கிற கொள்கையை நாம் கொண்டிருக்கிறோம் என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேட்டோ படைகளின் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று கோரப்படவில்லை.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள 5 நாடுகளும் இப்போதைய ஐ.நா. பாதுகாப்பு அவையில் உறுப்பினர்களாக உள்ளன. இதில் சீனாவும், ரஷ்யாவும் நிரந்தர உறுப்பினர்கள். இந்தியா, பிரேசில், தென்னாபிரிக்கா ஆகியவை தற்காலிக உறுப்பினர்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஐ.நா.வில் ஒருங்கிணைந்து பணியாற்றுவது என பிரிக்ஸ் நாடுகள் தீர்மானித்திருக்கின்றன. வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் குறித்து பிரிக்ஸ் நாடுகள் மாநாட்டில் கவலை தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் உணவுக்கு உத்தரவாதம், எரிசக்தி போன்றவற்றில் ஒருங்கிணைந்து செயற்படுவது, நிதி, வேளாண்மை, விளையாட்டு போன்றவற்றில் ஒத்துழைப்பு என பல்வேறு அம்சங்கள் கூட்டுச் செயல்திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

0 commentaires :

Post a Comment