இலங்கையில் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பு சுமத்தும் வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து ஆலோசனைகளை வழங்க , நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழு ஐநா மன்ற தலைமைச் செயலரிடம் அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
வல்லுநர்கள் குழு உறுப்பினர்களை ஐ.நா மன்ற தலைமைச் செயலர் இன்று புதன்கிழமை நியுயார்க்கில் சந்தித்த போதே இந்த
அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது
ஐநா குழுவுக்கு எதிராக கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டங்கள்
.
தலைமைச்செயலர் இந்த குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வேலையை செய்து முடித்ததற்காக இதன்போது தனது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
அவர் இந்த அறிக்கையை கவனமாகப் படித்து, அடுத்து அவர் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை இனி வரும் நாட்களில் முடிவு செய்வார்.
இந்த அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட முன்னர், அவர் அறிக்கையின் பிரதியை நாகரிகம் கருதி இலங்கை அரசுடனும் பகிர்ந்துகொள்வார் என ஐநா மன்றத் தலைமைச் செயலருக்காக பேசவல்ல அதிகாரியான ஃபஃர்ஹான் ஹக் நியுயார்க்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஐ.நா மன்ற தலைமைச்செயலரின் அலுவலகத் தலைமை அதிகாரியான விஜய் நம்பியார் ஈடுபட்டிருந்தார் என்பதால் , குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும், அவர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது .
இந்த நிலையில் ஐ.நா மன்ற தலைமைச்செயலர் இந்த அறிக்கையின் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விஷயத்தில் , நம்பியாரின் பங்கு இருக்குமா அல்லது அவர் இந்த விஷயத்திலிருந்து விலக்கிவைக்கப்படுவாரா என்று இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
‘அது சட்டரீதியாக ஒரு சரியானது போல தோன்றும் தவறான கேள்வி. நீங்களே சொன்னது போல அவர் ஒரு இலக்கு என்ற வகையில் பெயர் குறிப்பிடப்படவில்லை’ என்று பதிலளித்தார் ஹக்.
இலங்கை அரசு நிராகரித்தது
இதனிடையே, இலங்கை அரசு இந்த அறிக்கையை நிராகரித்திருக்கிறது.
மேலும், இந்த அறிக்கை தெளிவாகவே பாரபட்சமான மற்றும், சரிபார்க்கப்படாத விஷயங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் அது கூறியது.
இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு பான் கி மூன் இந்த வல்லுநர் குழுவை நியமித்ததிலிருந்தே இந்த நியமனத்துக்கு அடிப்படையான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்திருக்கிறது.
அந்தக் குழு உறுப்பினர்களை இலங்கைக்குள் வந்து ஆய்வு செய்ய அனுமதி தரவும் இலங்கை அரசு மறுத்தது.
இந்தோனிஷிய முன்னாள் தலைமை அரசு வழக்குரைஞர், மார்சுக்கி டாருஸ்மன் தலைமையிலான இந்த மூன்று பேர் கொண்ட வல்லுநர் குழு,இலங்கையில் நடந்த போரில் நடந்த சம்பவங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் பொறுப்பு சுமத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தது.
இந்த பொறுப்பு சுமத்தும் பணி என்பது, போரில் அரசும் , விடுதலைப்புலிகளும் செய்திருந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளைக் குறிக்கிறது என்று ஐ.நாமன்ற அதிகாரிகள் கூறுகிறார்கள்.
0 commentaires :
Post a Comment