4/14/2011

தமிழக தேர்தல் - உச்சகட்ட வாக்குப்பதிவு

அஇஅதிமுக தலைவி ஜெயலலிதா- ஆவணப்படம்முதல்வர் கருணாநிதி
தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் இன்று புதன்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடந்துமுடிந்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வன்முறைச் சம்பவங்கள் எங்குமே நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
மாநிலத்தில் 75லிருந்து 80 சதம் வரை வாக்குக்கள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
முதல்வர் கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 80 சத்த்திற்கும் அதிகமாக வாக்குபதிவு என்றும், அ இஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீரங்கத்தில் 73 சதம் எனவும் தெரிகிறது.
இரண்டு தரப்புமே நம்பிக்கை
தொடக்கத்திலிருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்ததாகக் கூறப்பட்டது. இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
முதல்வர் கருணாநிதி- ஆவணப்படம்
சென்னை கோபாலபுரம் வாக்குச் சாவடியில் வாக்களித்த முதல்வர் கருணாநிதி, திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறினார். மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதிமாறனும் கருணாநிதி மீண்டும் முதல்வராவது உறுதியென்றார்.
கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி மிக அமைதியாக தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதை சுட்டிக்காட்டினார்.
அஇஅதிமுக தலைவி ஜெயலலிதா- ஆவணப்படம்
வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய அ இஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் தனது கட்சி வெற்றி பெறும் என்று நம்புவதாகத் தெரிவித்தார். சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை அ இஅதிமுகவிற்குக் கிடைக்கும் என்றார் அவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா. பாண்டியன் முறைகேடுகள் அதிகம் நிகழாமல் இயன்றவரை நேர்மையாக தேர்தல்களை தேர்தல ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது எனப் பாராட்டினார்.
கேரள மாநிலத்தில் 74 சதத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அதிகபட்சமாக 83.21 சத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த மதிப்பீடு சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் முதல் முறையாக, கேரள மாநிலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்களித்திருப்பதாகவும் துணைத் தேர்தல் ஆணையர் ஜே.பி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 

0 commentaires :

Post a Comment