4/07/2011

சர்வாதிகாரிகளை உருவாக்கியதே அமெரிக்காதான் ஈரான் ஜனாதிபதி காட்டம்

உலக அளவில் சர்வாதிகாரிகளை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்று ஈரான் ஜனாதிபதி அகமதி நெஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வளைகுடாவில் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த நாடுகளில் எல்லாம் சர்வாதிகார ஆட்சி தான் நடக்கிறது. இந்த நாடுகளில் எல்லாம் கிளர்ச்சியை தூண்டிவிடுவதே ஈரான் தான் என்று கூறப்படுகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மாநாடு நடத்தி ஈரானை கண்டித்தன.
அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் இந்த மாநாடு சவூதி அரேபியாவில் நடந்தது. இதில் கிளர்ச்சியை ஈரான் தான் தூண்டிவிடுவதாகவும், பிற நாடுகளின் உள்விவகாரத்தில் தலையிட்டு குழப்பம் விளைவிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி அகமதி நெஜாத் ஒரு சீன நிருபருக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் அமெரிக்காவை கடுமையாக தாக்கி இருந்தார். அது வருமாறு:-
அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் பைகளை நிரப்பிக்கொள்வதிலேயே கவனமாக இருக்கும். இந்த நாடுகள் யாருக்கும் வணக்கம் கூட சொல்ல மாட்டாது. அந்த நாடுகள் உங்களை பார்த்து ஹலோ என்று சொன்னால் அவர்கள் அதற்கான வட்டியை 100 மடங்கு வசூலித்து விடுவார்கள். உங்கள் பைகள் காலியானால் தான் உங்களை விடுவார்கள்.
இப்போது சர்வாதிகாரிகளாக இருப்பவர்கள் எல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவாலும் இங்கிலாந்தாலும் சர்வாதிகாரிகளாக உருவாக்கப்பட்டவர்கள் தான். அந்த நாடுகள் தான் சர்வாதிகாரிகளை தொடர்ந்து ஆதரித்து வருகின்றன. அந்த நாடுகளால் ஆதரிக்கப்படாத ஒரு சர்வாதிகாரியை கூட நாம் பார்க்கமுடியாது.
எங்கேயாவது புரட்சி நடந்தால் எங்கேயாவது கொடுங்கோல் சர்வாதிகாரி ஆட்சி நடத்தினால் அந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் ஆதரவு நாடுகளாக தான் இருக்கும்.
இன்று அவர்கள் திடீர் என்று மக்களின் ஆதரவாளர்களாகி விட்டார்கள். ஆனால் 4 அல்லது 5 மணி நேரத்தில் அவர்கள் சமரசத்திட்டத்துடன் வருவார்கள். அதன் பின்னர் அவர்களது ஏவுகணைகளை வைத்து படை எடுப்பார்கள், அவர்களின் விமானங்கள் குண்டுகளை மக்கள் மீது வீசும். இவ்வாறு ஈரான் ஜனாதிபதி கூறினார்.

0 commentaires :

Post a Comment