4/29/2011

13 தடவைகள் என் மீது புலிகள் தற்கொலை முயற்சி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பியினர் புலிகளால் கொலை தருஸ்மனின் அறிக்கையில் புலிகளின் கொடூரம் காட்டப்படாதது ஏன்?

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையினை எழுதியிருப்பவர்கள் ஐ.நா வின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர்.
இவர்கள் இலங்கையையும் இலங்கையின் படை வீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் செயலாளர் நாயகத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் என்ற இணையத்தளத் துக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்தோனேசி யாவைச் சேர்ந்த மர்சூக்கி தருஸ்மன், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யெஸ்மின் சூக்கா, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட நிபுணர் குழுவினை நியமித்ததன் மூலம் ஐ. நா. வின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார்.
ஐ. நா. செயலாளர் நாயகம், தொடர்ந்தும் தமது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சுய இலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் விதத்தில் இலங்கை ஜனாதிபதிக்கும் இராணுவ தலைவர்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் இந்த எழுத்தாளர்களை நியமித்துள்ளார்.
எமது மக்களுக்கான உரிமை களைப் பெற்றுக்கொடுப்பத ற்காக நான் 15 வருடங்களாக இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்தி மோதல்களை முன்னெடுத்தவன். பின்னர் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டேன். ஆனால், தற்போது தருஸ்மன் அறிக்கையின்படி, எனது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. இலங்கைத் தமிழர்கள் சார்பாக பேசுவதற்கு எனக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த தமிழர்களே என்னை அவர்களது பிரதிநிதியாக 1994 ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்து வருகின்றனர்.
எல். ரீ. ரீ. ஈ. தலைவர் பிரபாகரனின் தவறான அரசியலினால் இந்த நாடு ஆயிரக்கணக்கான அப்பாவி சிவிலியன்களை இழந்துள்ளது. உண்மையில், கடந்த 30 வருடங்களாக வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பிரபாகரனே பொறுப்பானவராவார்.
தோல்வியுற்ற தலைவர் பிரபாகரனும் அவருடன் சேர்ந்த ஏனையோரும் துடைத்தெறியப்பட்ட பின்னரும் மேற்குலகில் எல்.ரீ.ரீ.ஈயினரின் ஒரு பகுதியினர் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிக்கின்றனர்.
இவர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. செயலகத்திற்கு உள்ளும் புறமும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா. செயலகத்திற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் வெளிப்படையாக பழகுவதன் மூலமும் இலங்கை அரசாங்கத்தினை குற்றஞ் சுமத்தியிருக்கும் அறிக்கையினை வெளியிடச் செய்வதற்கான தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு அங்கிருந்து தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன.
துரதிஷ்டவசமாக அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.
எல்.ரீ.ரீ.ஈ யினருடன் இறுதி மோதல் இடம்பெற்ற காலப் பகுதியான 2008 செப்டம்பர் இலிருந்து மே 2009 வரையான காலப் பகுதிக்குள்ளேயே இந்த தருஸ்மன் அறிக்கை எழுதிய குழுவினர் சுய விருப்பின் பேரில் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் காரணமாகத்தான் இக்காலப் பகுதியினுள் வந்துள்ளனர். மோதலின் இறுதித் தறுவாயில், எல்.ரீ.ரீ.ஈ யினரை தமது காலடிக்கு கொண்டு வருவதற்காக படையினர் ஈடுபட்டிருந்த வேளை எல்.ரீ.ரீ.ஈ யினர் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுப்பதாக சித்தரித்துக் காட்டியுள்ளனர்.
அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர். நான் ஒரு தமிழ் அமைச்சர் என்ற போதிலும் பிரபாகரன் என்னைக் கொலை செய்வதற்காக 13 தடவைகளுக்கும் மேலாக தற்கொலைப் போராளிகளை என் மீது ஏவியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் எல். ரீ.ரீ.ஈ யினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை குறித்த விடயங்கள் தருஸ்மன் அறிக்கையில் தவறவிடப்பட்டுள்ளன ஏன்?
பிரபாகரனினாலும் அவரது ஆட்களினாலும் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் நாசகரமான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவும் நிலையான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காகவும் எமது ஈ.பி.டி.பி இயக்கம் 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
நான் ஒரு தமிழன். இலங்கைத் தமிழன். என்னை தமிழ் மக்களே வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். அப்படியிருக்க, எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்புள்ள முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையினை நான் நிராகரிக்கிறேன்.
இதன்போது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்ட ஈடுகளை வழங்க முன்வரவேண்டும். பிரபாகரனும் அவரது ஆட்களினது ஏவப்பட்ட பயங்கரவாத யுத்தத்தினால் கடந்த 30 வருடகாலமாக எனது மக்கள் துன்புற்றிருக்கிறார்கள்.
தால்விகளும் ஏமாற்றங்களும் நிறைந்த 60 வருடகால பயங்கரமான கதைதான் இந்த தமிழர் பிரச்சினை. 1987 இல் செய்யப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம், ஒரு சோகக்கதை, ஏமாற்றத்தி லேயே முடிவடைந்தது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றினூடாகவும் பிரச்சினைக்கான நிலையான தீர்வினைப் பெறமுடியாமல் போனது.

0 commentaires :

Post a Comment