3/11/2011

இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி’ இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

அண்மையில் தலைநகர் கொழும்பில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடொன்றை நடாத்தி வெற்றி கண்டு தமிழ்த் தாய்க்கு பெருமை சேர்க்கும் வண்ணம் விழா எடுத்து தமிழ் இலக்கியவாதிகளின் தாகம் தீர்த்த பின்பு ‘இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி’ எனும் இனிப்பான ஈரடிப்பாவுக்குள் இணைந்து இருப்பிடமாக்கி இஸ்லாமிய இதயங்களுக்கும் இலக்கியவிருந்து படைக்க முன்வந்து முகங்கொடுக்கும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மலேசிய மாநாடு அகங்கொள்ளத் தக்க அரியதொரு அம்சமாகும்.
வெறுமனே இஸ்லாமிய இலக்கிய மாநாடு என்றில்லாமல் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு என்ற கருத்துக் கணிப்பை இனங்கண்டு இருத்தி இஸ்லாமிய இலக்கியப் பூக்களை நிறம்மாறாத பூக்களாகப் புஸ்பிக்கச் செய்வதற்கு மாநாட்டில் இடம்பெறவுள்ள இலக்கிய வடிவங்கள் ஒரு விடியலின் விலாசங்களாகும்.
‘இலக்கியம் என்பது ஒரு கலை. அது அறிவியல் சார்ந்தது அல்ல. கலை என்பது ஒரு மனிதனின் அறிவை ஒதுக்கித் தள்ளி விட்டு வசியப்படுத்தி விடக் கூடியது. அதனால்தான் இஸ்லாம் கலைகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. ஆனால் முற்று முழுதாகத் தடை செய்யவில்லை.
15 ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் – முஸ்லிம் இலக்கியங்கள் படைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் நமது முன்னோர்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வந்துள்ளனர். ஒரு முஸ்லிம் எழுதுவதால் அது இஸ்லாமிய இலக்கியமாகிவிடாது. இஸ்லாமிய இலக்கியத்தைப் படைக்கும் ஒருவர் இஸ்லாத்தையும் தமிழையும் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
இஸ்லாத்தையும் தமிழையும் நன்கு அறிந்திருந்ததால் தான் உமறுப் புலவரால் தனது பணியை கச்சிதமாகச் செய்யமுடிந்தது’ என்று இஸ்லாமிய இலக்கியத் தமிழ் மாநாடு தொடர்பாக மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்த உங்கள் குரல் மாத இதழின் ஆசிரியரும் பிரபல கவிஞருமான சீனி நெய்னா முஹம்மத் மாநாட்டின் இலங்கை ஒருங்கிணைப்புக் குழு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது குறிப்பிட்டமை இஸ்லாமிய இலக்கியத்தின் பேறையும் இன்பத்தமிழின் பெருமையையும் எடுத்துக் கூறியிருப்பது ஒரு காத்திரமான செய்தியாகும்.
இஸ்லாம் மார்க்கமே தவிர மதமல்ல. இது வாழ்வின் ஒவ்வொரு கோணத்தையும் உற்று நோக்கி மார்க்க எல்லைக்குள் மனிதனைக் கொண்டுவர முனைகிறது. இதன்வழி இறைவேதம் இஸ்லாமிய நெறிமுறைகள், அண்ணல் நபிகளாரின் அகமியங்கள் அனைத்தும் கற்றுத்தரும் கல்விப் பாடத்தை இஸ்லாமிய இலக்கியங்களின் வாயிலாக அன்று தொடடு இன்றுவரை முஸ்லிம் இலக்கியவாதிகளால் முன்வைக்கப்பட்ட மூத்த பங்களிப்பு என்பது மனங்களில் சுமந்து பார்க்கும் மறக்க முடியாத பக்கங்களாகும்.
இம்மாநாடு இஸ்லாமிய இலக்கியத் தமிழ் மாநாடு என்பதால் இஸ்லாமிய இலக்கியத்தோடு இனிய தமிழையும் இணைத்துப் பார்த்ததுடன் மாநாட்டை அழகுபடுத்திஅணி செய்யும் அரங்கப் பங்களிப்பையும் பார்ப்பது அவசியமாகும்.
‘இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்’ எனும் தலைப்பை கருப்பொருளாகக் கொண்டு உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மலேசியா மாநாடு 2011 எதிர்வரும் மே மாதம் 20, 21, 22ம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
இம் மாநாட்டில் மொத்தம் 11 அரங்குகள் நடைபெறவுள்ளன. இவற்றுள் ஒரு பொது அரங்கு, இரண்டு சிறப்பரங்குகள் போக எஞ்சிய எட்டு அரங்குகள் ஆய்வரங்குகளாக அமையவிருக்கின்றன.
மாநாட்டில் இருபது ஆய்வுக் கட்டுரைகள் படைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அவற்றுள் இலங்கை இஸ்லாமிய இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) இலங்கை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு,
(2) இலங்கையின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வடிவங்கள்.
இம் மாநாட்டுக் கவியரங்குக்கான பொதுத் தலைப்பு :-
‘அண்ணல் நபிகளாரின் அழகிய பண்புகள்’ என்பதாகும். எழுத வேண்டிய உப தலைப்புகள் எளிமை. பொறுமை, என்பனவாகும். மேற்கூறிய தலைப்புகளில் எழுதப்படும் அதிசிறந்த இரு கட்டுரைகளும் கவிதைகளும் தெரிவு செய்யப்பட்டு ஆய்வரங்கில் எழுதியவர்களால் வாசிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய கட்டுரைகள் கவிதைகள் தகுதி கண்டு மாநாட்டு மலரில் பிரசுரமாகவிருக்கின்றன.
ஆய்வுக்கான கட்டுரை கவியரங்கிற்கான கவிதைகள் அனைத்துப் பிரதிகளும் மார்ச் 20ம் திகதிகளுக்குள் அச்சுப் பிரதிகளுடன் அவற்றின் இறுவட்டு விளி ம் கட்டாயம் தபால் மூலமாகவோ நேரிலோ கையளிக்கலாம் என்று மாநாடு பற்றிய சுற்று நிருபம் கூறுகிறது.
முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் தமிழுக்கு தகுதி சேர்த்த இலக்கியச் செல்வங்களின் ஆளுமையையும், அடையாளத்தையும் அறிமுகப்படுத்து முகமாகவும், இப்புலவர்கள் தங்களின் படைப்புகளை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் பழைய, புதிய இலக்கிய வடிவங்கள் எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்பதையும் இக்கால முஸ்லிம் தலைமுறையினர் மற்றும் பிற மத இலக்கியவாதிகளும் ஆய்வாளர்களும் அறிந்துகொள்ளு முகமாக மூன்று தலைப்பில் ஆராயப்படவுள்ளன.
முதலாவது முஸ்லிம் தமிழ்ப்புலவர்கள் கையாண்ட பழைய இலக்கிய வடிவங்கள்
1. காப்பியம்
2. சிறு காப்பியம்
3. திருப்புகழ்
4. கலம்பகம்
5. சதகம்
6. அந்தாதி
7. பிள்ளைத்தமிழ்
8. கோவை
9. மாலை
10. குறவஞ்சி
11. ஆற்றுப்படை
12. நாடகம்
13. தளிப்பாடல்கள்
14. கடிதச் செய்யுள்
இரண்டாவது தலைப்பு : முஸ்லிம் புலவர்கள் கண்ட புதிய வடிவங்கள்
1. படைப்போர்
2. முனாஜாத்து
3. கிஸ்ஸா
4. மசாலா
5. நாமா
மூன்றாவவது தலைப்பு இசை சார்ந்த வடிவங்கள்
1. கீர்த்தனம்
2. நொண்டி நாடகம்
3. கும்மி
4. சிந்து
5. தாலாட்டு
6. பள்ளு
7. அம்மானை
8. ஏசல்
போன்ற மொத்தம் 27 வடிவங்களாகும்.
மேலும் தமிழ் இலக்கியத்தின் இருண்ட காலத்தில் ஒளிபரப்பிய இஸ்லாமிய இலக்கியங்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் இறைவாழ்த்து - காதல் – மரபுகள் திருமண நடைமுறை - உவமைத் தனிச்சிறப்பு – புதிய சொல் தொடர் ஆக்கங்கள் – சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா, சேகனாப் புலவரின் இலக்கியப் பணிகளும் பன்முக ஆளுமையும் 20ம் 21ம் நூற்றாண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் போன்ற உப தலைப்புகள் ‘முஸ்லிம் தமிழ்ப்புலவர்களின் தமிழ் மரவு வழுவாப் பிற மொழிச் சொல்லாட்சி’ என்ற தலையான தலைப்பின் கீழ் இக்கட்டுரைகள் ஒவ்வொன்றும் தலைப்புக் கேற்றவாறு இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு சிறப்புகளைச் சேர்த்த சீர்வரிசைகளை உள்ளடக்கியதாக இவ்வாய்வரங்குக் கட்டுரைகள் பேசப்படவிருக்கின்றன.
இம்மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிவதற்கும் இங்கிருந்து பயணிக்கவிருக்கும் ஆய்வரங்கர்கள் , பேராளர்கள், நலன் கருதி இலங்கையின் சார்பாக 11 பேர் அடங்கிய ஏற்பாட்டுக் குழுவொன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர் எஸ். எச். எம். ஜெமீல், செயலாளர் தாஸிம் அஹமத், இணைப்பாளர், பயண ஏற்பாடுகள் கெளரவ ஹஸன் அலி, நாடாளுமன்ற உறுப்பினர், இணைப்பாளர், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் பயண ஏற்பாட்டுக் குழு புரவலர் ஹாஸிம் உமர், உறுப்பினர் தமிழ்மணி மானா மக்கீன், உறுப்பினர் றமீஸ் அப்துல்லாஹ், ஊடகக் குழு என். எம். அமீன், ஜனாபா புர்கான் பீ. இப்திகார், என். எம். நிலாம், இலக்கியத்தில் பட்டறிவும் பரீச்சயமும் கொண்டவர்கள் இக்குழுவில் உள்ளார்கள்.

0 commentaires :

Post a Comment