3/23/2011

வங்கி, கூட்டுத்தாபனம், தனியார்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு சகலதுறையினருக்கும் ஓய்வ+தியம் வழங்கும் சட்டமூலம் அடுத்தமாதம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த நேற்று அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு மட்டுமே உரித்தாக இருக்கும் ஓய்வூதியத் திட்டம் வங்கி, கூட்டுத்தாபன, தனியார் துறையினர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களுக்கும் உரித்தாகும் விதத்திலான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2011 வரவு - செலவுத் திட்டத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி தேசிய வருவாய்க்கு உரம் சேர்க்கும் விதத்தில் பங்களிப்பை செய்யும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், கலைஞர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள், போன்ற சகலருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் விதத்தி லான சட்ட மூலம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரி வித்தார். நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதில் எதிர்க் கட்சியின் சார்பில் ஹர்ஷ டி. சில்வா எம்.பி. உரையாற்றிக்கொண்டிருந்த வேளையில் பிற்பகல் 4.15 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபைக்குள் வந்தார். முன்வரிசையின் ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்ததுடன் எதிர்க்கட்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த ஹர்ஷ டி. சில்வாவின் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
அவரது உரை யையடுத்து ஜனாதிபதி உரையாற்றினார். நாட்டில் ஊழல், மோசடி, குற்றச் செயல்கள் நடப்பதாக இல்லாத ஒன்றை வெளி உலகுக்கு சுட்டிக்காட்டி நாட்டின் நற்பெயருக்கு ஏற்படும் களங்கும் தொடர்பாக பொறுப்புடன் எதிர்க்கட்சிகள் சற்று கண்திறந்து பார்க்க வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ பத்திரிகைகளில் வெளியாகும் சில செய்திகளினால் நாட்டுக்கு பாரிய அபகீர்த்தி ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபடுவதற்கு நாம் அனைவரும் பக்குவமடைய வேண்டும்.
கடந்த டிசெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுடன் தொடர்புடைய வரி சட்டத்துடன் தொடர்புடைய விவாதம் இடம்பெறும் வேளையில் கலந்துகொள்ள கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
கடந்த குறுகிய காலத்தினுள் பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டு நிறைவேற்று அதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே பரந்த அளவிலான உறவினை கட்டியெழுப்பக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் எனக்கும் இடையேயான சகோதரத்துவத்தைப் போன்ற நெருக்கமான சகோதரத்துவமொன்றினை பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையே உருவாக்குவதன் மூலம் எமது நாட்டின் ஜனநாயகத்திற்கு மேலும் வலுவூட்ட முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
கடும் அர்ப்பணிப்புக்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட சமாதானத்தின் ஊடாக துரித அபிவிருத்தி ஒன்றினை எமது நாட்டிலே ஏற்படுத்துவதற்காக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் அதற்கு வெளியிலும் பரந்த அளவிலான ஒத்துழைப்பினை நாம் கட்டியெழுப்புதல் வேண்டும்.
சுமார் 10 நாட்களுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமி என்பன காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். எனவே அவர்களுக்காக எமது அரசு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதியுதவியும், அவர்களது பயன்பாட்டிற்கென தேயிலை மற்றும் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பாதுகாப்பு சேவைகள் என்பவற்றினை பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வந்தது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புச் செய்துள்ளது. 2004ஆம் ஆண்டு எமது நாடு சுனாமி அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த போது எமது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் பாரிய பங்களிப்பினைப் பெற்றுத்தந்தது. பயங்கரவாதத்தை ஒழித்து சமாதானத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஜப்பான் பெற்றுத்தந்த ஒத்துழைப்பானது அளப்பரியதாகும்.
எனவே பாரிய அனர்த்தத்திற்கு அந்நாடு முகம் கொடுத்துள்ள இவ்வேளையில் நாம் அவர்களது துன்பத்தில் பங்கேற்பதுடன் விபத்திற்குள்ளான மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
மிக விரைவில் அந்நாட்டிலே இயல்பு நிலை உருவாவதற்கு எமது நாட்டு மக்கள் சார்பாகவும் அரசாங்கம் சார்பாகவும் இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை செய்ய விரும்புகிறேன்.
அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை காரணமாக தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை சுமார் 115 அமெரிக்க டொலர் வரையில் அதிகரித்துள்ளது.
எரிபொருள் பயன்பாட்டிற்காக பெற்றோலிய இறக்குமதி மீது தங்கியுள்ள ஒரு நாடாக பெற்றோலிய இறக்குமதிக்காக அதிக நிதியினை செலவிட வேண்டி எமக்கு ஏற்பட்டுள்ளது. மாற்று வலு தொடர்பாக எமது அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை மற்றும் அனல்மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணித்துள்ளமை என்பன காரணமாக இந்த சந்தர்ப்பத்திலே எமது நாட்டிற்கு பாரிய நிவாரணம் கிட்டியுள்ளது.
உலக சந்தையில் உரத்தின் விலை 4,000 ரூபாவாக காணப்படுகின்ற போதிலும் பயிர் செய்கைக்காக 1,200 ரூபாவிற்கு எமது அரசாங்கம் உரத்தை மானிய விலையில் வழங்கி வருகின்றது.
இதன் பயனாக எந்த இடத்திலும் நிவாரண விலையில் உரத்தினை கொள்வனவு செய்ய முடியும். உரத்தை பங்கீடு செய்யும் உத்தியோகத்தர்களை இதன் மூலம் வேறு பணிகளில் ஈடுபடுத்துவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதுடன், விவசாயிகள் உரத்தை பெற்றுக் கொள்வதற்கு வீணாக செலவிடும் காலமும் இதன் மூலம் மீதப்படுத்தப் பட்டுள்ளது.
கிராமப்புற பிரதேசங்கள் மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் நாம் பத்து இலட்சம் வீட்டு பொருளாதார அலகுகளை உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராமசேவை உத்தியோகத்தர் அலுவலகங்களுடன் அரச நிறுவனங்களும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன.
பொருட்களின் விலையை நிலையாக பேணி வருவதற்காக ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு அறவிடப்பட்ட 125 ரூபா வரியானது தற்போது 0 (பூச்சியமாக) குறைக்கப்பட்டுள்ளது. பால்மா மீது அறவிடப்படும் வரியும் தற்போது 125 ரூபாவிலிருந்து 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதும் ஒரு லீற்றரிற்கு 2.50 சதம் பெறுமதியான வரியே தற்போது அறவிடப்படுகின்றது.
அதேபோன்று ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் 20 ரூபா நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் உலக சந்தையில் எரிபொருளின் விலையில் ஸ்திரத்தன்மை காணப்பட்டால் மாத்திரமே வரியினை குறைத்து எரிபொருள் மீது நிவாரணம் வழங்க முடியும்.
தற்போது மாகாண சபைகள் மற்றும் தேசிய மட்டத்திலான வரி முறைமைகளை ஒன்றிணைத்து இலகு வரி முறைமையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வரிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல்வேறு அதிகாரிகள் பலதரப்பட்ட வரைவிலக்கணங்களை முன்வைப்பதனை தவிர்க்கும் முகமாக வருமான ஆணையாளர்களை உள்ளடக்கிய வரைவிலக்கண குழுவொன்றினை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட வரி பிணக்குகளை தீர்ப்பதற் காக எடுக்கும் காலத்தைக் குறைத்தல், துரித தீர்மானங்களை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றிற்காக சுயாதீன வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவொன்றினை உருவாக்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தயாரிக்கப்படுகின்றன.
இற்றைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கண்ணி வெடிகளால் சூழ்ந்து காணப்பட்ட வடக்கு பிரதேசங்களிலிருந்து அவை அகற்றப்பட்டு இன்று அங்கு மக்கள் குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அப் பிரதேசங்களில் விவசாயம், கடற்றொழில், கால்நடை வளர்ப்பு, சுற்றுலா போன்ற துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன. வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த அனைத்து வீதிகளும் 2011 ஆம் ஆண்டிலே புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

0 commentaires :

Post a Comment