3/18/2011

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐ.ம.சு.மு. அமோக வெற்றி

  234 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 3036 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட வாக்களிப்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை தம்வசப்படுத்தி அமோக வெற்றியீட்டியுள்ளது.

இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவை சந்தித்து இம்முறை 09 உள்ளுராட்சி மன்றங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட இலங்கை தமிழரசு கட்சி 12 மன்றங்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு மன்றங்களையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் கைப்பற்றிக்கொண்டன.

நுவரெலிய பிரதேச சபைக்கான தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணி அந்த சபையைக் கைப்பற்றிக் கொண்டது. இத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நீண்ட காலமாக தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்த திஸ்ஸமஹாராம பிரதேச சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிக் கொண்டது.

அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள திஸ்ஸமஹாராம பிரதேச சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 ஆயிரத்து 523 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களுடன் வெற்றியீட்டியது. இதில் மக்கள் விடுதலை முன்னணி 7ஆயிரத்து 767 வாக்குகளை மட்டும் பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டது. ஐக்கிய தேசியக்கட்சி 8ஆயிரத்து 344 வாக்குகளுடன் 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டது.

நாடு முழுவதிலும் 335 உள்ளுராட்சி மன்றங்கள் இருக்கின்ற போதிலும் 234 மன்றங்களுக்கான வாக்களிப்பே 7ஆயிரத்து 402 வாக்களிப்பு நிலையங்களில் வியாழனன்று இடம்பெற்றது. இவ்வாக்களிப்பில் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்

0 commentaires :

Post a Comment