3/19/2011

லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை

லிபியா வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தடை விதித்துள்ளது. அத்துடன் பொது மக்களை பாதுகாப்பதற்காக தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எந்த எதிர்ப்பும் இன்றி லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது. இதன் போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 10-0 என்ற கணக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் இந்த வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி லிபிய வான் பரப்பில் உதவி விமானங்கள் பறப்பதற்குக் கூட தடை விதிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பெங்காசி பகுதியில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றதோடு ஐ.நாவின் தீர்மாத்திற்கு கிளர்ச்சிப் படையினர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
எனினும் இந்த தீர்மானத்திற்கு லிபிய அரசு கடும் அதிருப்தியை வெளியிட்டது. லிபிய பிரதி வெளியுறவு அமைச்சர் காலித் காய்மி கூறும் போது லிபிய மக்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்துகொள்வதற்கு இந்த தீர்மானம் வழி வகுக்கிறது என்றார்.
இதேவேளை, ஐ.நா சபையின் தீர்மானத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தலைவர்களுக்கு விசேட அழைப்பு விடுத்துள்ளார். விபியாவில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைக்காகவே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இந்நிலையில் லிபியாவில் தொடர்ந்நதும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஐ.நாவின் தீர்மானத்திற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்னர் கூட கடாபி ஆதரவுப் படை விமானம் ஒன்று பெங்காசியில் தாக்குதல் நடத்தியது.
இதனிடையே ஐ.நா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு சில மணி நேரத்தில் முஆம்மர் கடாபி பெங்காசி மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் பெங்காசியை விட்டு வெளியேறும்படியும் ஒரு சில மணி நேரத்தில் பெங்காசிக்கு இராணுவம் நுழைந்து மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

0 commentaires :

Post a Comment