3/22/2011

லிபியா மீது மேற்கு நாடுகள் தொடர்ந்தும் மிலேச்சத்தனம்

தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் போராட்டங்கள்
கொழும்பில் தொழிற்சங்கங்கள் தீர்மானம்





அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து லிபியா மீது மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
லிபியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்த தொழிற் சங்க தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிராகத் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.
லிபியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் கூட்டாகத் தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றுக் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவரும் மேல் மாகாண ஆளுநருமான அலவி மெளலானா, பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ஏ. எச். எம். அஸ்வர் உட்பட தொழிற்சங்கப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; லிபியா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதலானது ஒரு இனத்திற்கான பிரச்சினையல்ல. இது உலகளாவிய பொது பிரச்சினையாகும். ஒரு நாட்டு பிரஜைகளின் உரிமைகளில் தலையிட எவருக்கும் அதிகாரம் கிடையாது.
லிபியாவில் தலைமைத்துவ மாற்றம் தேவையென்றால் அந்நாட்டு மக்கள் அதனைத் தீர்மானிப்பர். அந்நாட்டு மக்களின் சுதந்திரத்தில் தலையிட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எவ்வித உரிமையுமில்லை.
ஈராக்கில் ஆரம்பித்த இந்த ஏகாதிபத்தியத் தாக்குதல் 48 நாடுகளில் தொடர்கிறது. எதிர்காலத்தில் லெபனான், யெமன் மற்றும் சகல அரபு நாடுகளுக்கும் இது பரவலாம் என்ற அச்சுறுத்தல் நிலவுகிறது.
எரிபொருள் உற்பத்தி நாடுகளைக் குறிவைத்து நடாத்தப்படும் இத்தாக்குதல் எரிபொருளை இலக்காக வைத்து நடாத்தப்படும் தாக்குதல்களே என்பது வெளிப்படை.
பலஸ்தீன தாக்குதலில் மூன்று மாத காலத்தில் 3000 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தற்போது லிபியாவில் தினமும் சிறுவர், முதியவர், குழந்தைகள் என எண்ணிக்கையின்றி கொல்லப்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலஸ்தீன யுத்தத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் குரல் கொடுத்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு அடுத்தபடியாக பலஸ்தீன மக்களுக்காகக் குரல் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே.
மனித உரிமை பற்றி சர்வதேச நாடு களில் பேசும் ஐக்கிய தேசியக் கட் சியினர் லிபியா மீதான தாக்குதலுக்கு எதிராக எந்த விதத்திலும் குரலெழுப்ப வில்லை.
வெள்ளைக் கொடி விவகாரத்தை வெளிநாடுகளில் பிரசாரம் செய்த அவர்கள் தேர்தலில் தாம் தோற்றுப்போவது உறுதி என்பதை தெரிந்துகொண்டே சரத் பொன்சேகாவை முன்னால் அனுப் பினர். இம்முறை தேர்தலிலும் அது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் தமது குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி யுத்தக் குற்றம் பற்றி ஆராய நடவடிக்கை எடுத்து வருகின்றபோதும் அதற்கெதிராகக் குரலெழுப்பத் திராணியின்றி இன்று எதிர்க் கட்சி உள்ளது.
தலதா மாளிகை மீது தாக்குதல் நடத்தி இந்த நாட்டுத் தலைவர்கள் பலரைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தம் செய்தார். இது குற்றம் எனக் கூறுபவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ஆதரவாக நிற்கின்றார். நாடு பற்றிய உணர்வில்லாத இத்தகைய தலைவர் இந்த தசாப்தத்திலேயே இருந்ததில்லை.
எதிர்க் கட்சியின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் நாம் குரலெழுப்ப வேண்டும் எனவும் ஆளுநர் அலவி மெளலானா மேலும் தெரிவித்தார். 


கடாபி குடியிருப்புப் பகுதியில் அமெ. ஆதரவுப்படை தாக்குதல்

கட்டளைப் பணியகம் சேதம்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் குடியிருப்பு பகுதியில் அமெரிக்க ஆதரவுப் படையினால் அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் முஅம்மர் கடாபியின் நான்கு அடுக்கு இராணுவ கட்டளையிடும் தளம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடாபி அரசின் நம்பகமான அரச தகவல்கள் இதனை உறுதி செய்ததாக சி. என். என்., பி.பி.சி தொலைக்காட்சி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பலியானோர் விபரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
திரிபோலியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவும் அமெரிக்க ஆதரவுப் படை தொடர்ந்து தாக்குதல் நடத்தின. இதில் திரிபோலியின் பல இடங்களிலும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் திரிபோலியில் கடாபி குடியிருக்கும் பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கடாபி இராணுவ கட்டளைகளை மேற்கொள்ளும் முக்கிய கட்டிடம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாகும். அந்த கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் கடாபியை குறிவைத்து தாக்குதல் நடத்தவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமெரிக்க விமானப் படை வைஸ் அட்மிரல் வில்லியம் ஈ கொட்னி இதனைத் தெரிவித்தார்.
லிபிய ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி இருக்கும் இராணுவப் படைகளை கட்டுப்படுத்துவதற்காக மட்டுமே ஜனாதிபதி மாளிகை அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக கொட்னி இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி அரச தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, அமெரிக்காவுக்கு எதிரான மிக நீண்டபோரை லிபியா ஆரம்பித்து விட்டது. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் நாடுகள் காலனி மனப்பான்மை கொண்டவை. அவை மீண்டும் சிலுவைப் போரை ஆரம்பித்துள்ளன. எமது மண்ணின் கடைசி நிலபரப்புக்காகவும் நாம் போராடுவோம் என்றார்.
இதனிடையே லிபியா மீதான இராணுவ நடவடிக்கையின் கட்டுப்பாட்டை அமெரிக்கா விரைவில் கையேற்கும் என பென்டகன் அறிவித்துள்ளது. இந்த இராணுவ நடவடிக்கைக்கு பிரான்ஸ், பிரிட்டனுடன் மேலும் 7 நாடுகள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன. இதில் முதல் அரபு நாடாக கட்டாரும் தனது செயற்பாட்டை முடுக்கிவிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்காக கட்டார் அரசு யுத்த விமானங்களை தயார் செய்துள்ளது.
இது தவிர பெல்ஜியம், கனடா, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இராணுவ செயற்பாட்டில் பங்கேற்றுள்ளன. அமெரிக்க ஆதரவுப் படையின் தக்குதலுக்கு ஈராக் அரசு ஆதரவு தெரிவித்துள்ளதோடு அரபு லீக் அமைப்பின் செயலாளர் நாயகம் அம்ர் முல்லாவும் தனது ஆதரவை நேற்று வெளியிட்டார்.
இதனிடையே லிபியா மீதான தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் போர் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லிபியா மீதான பன்னாட்டு இராணுவ நடவடிக்கை குறித்து சீனா வருந்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
லிபியா மீதான இராணுவ நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ‘அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளது.
வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அளித்த பேட்டியில் ‘அமெரிக்கக் கூட்டணி லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இந்தத் தாக்குதலை துவக்கியுள்ளது’ என்ற சாடியுள்ளார்.
ஆபிரிக்க யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபிய பிரச்சினைக்கு ஆபிரிக்காவில் தான் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக இராணுவக் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லிபியா மீதான அமெரிக்க ஆதரவுப் படையின் இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒபரேசன் ஒடிசி டன்’ என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment