3/16/2011

ஜப்பான் அணு உலையில் வெடிப்பு: கதிர்வீச்சுத் தாக்கம் இலங்கைக்கு இல்லை

ஜப்பானின் புகுஷிமா டைய்ச்சி அணுமின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென அணு சக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். எனினும், முற்கூட்டிய பாதுகாப்புத் தொடர்பில் இன்று முதல் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் வளிமண்டல
பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்; அமிலமழை பெய்யும் என்பது வதந்தி

இலங்கைக்கு உடனடியாக எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான் அணு உலைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புத் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் அணு சக்தி அதிகாரசபை அலுவலகத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர், ஜப்பானின் புகுஷிமா அணு மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புக்களால் அணுக் கசிவுகள் எதுவும் ஏற்படவில்லையென சர்வதேச அணு சக்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
அணு மின்நிலையங்களிலுள்ள குளிரூட்டிகளின் தடுப்புச் சுவர்களே அதிக வெப்பம் காரணமாக வெடித்துள்ளன. அணுக் கதிர்கள் பரவுவதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.
அவ்வாறு அணுக் கசிவு ஏற்பட்டாலும் வளிமண்டலத்தில் கலந்துகொள்ளும் அணுக் கதிர்கள் இலங்கையை வந்தடைவதற்கு 3 வாரங்கள் அல்லது ஒரு மாதம் செல்லும். வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்று கடந்த பெப்ரவரி மாதத்தில் முடிவடைந்துள்ளது. தற்பொழுது பருவப்பெயர்ச்சிக் காற்றின் தாக்கம் குறைந்திருப்பதுடன், பருவப்பெயர்ச்சிக்கு இடைப்பட்ட காலமே தற்பொழுது நிலவிவருகிறது.
இதனால் ஜப்பானில் ஏற்பட்ட கதிர்வீச்சு இலங்கையைத் தாக்காது. அதேநேரம், இலங்கையில் அமிலமழை பொழியும், அணுத் தாக்கம் ஏற்படும் என வெளியிடப்படும் தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
எனினும், முன்னேற்பாடாக இலங்கைக்கு மேலுள்ள வளிமண்டலத்தில் அணுக் கதிர்களின் தாக்கம் உண்டா என்பது பற்றிய ஆய்வுகள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கக் கூடிய வகையில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் வாயு மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.
அணுக் கசிவின் போது வெளியேறும் அயடீன் மற்றும் சீ.சீ.எம். போன்ற தூமங்கள் வளிமண்டலத்தில் கலந்துகொள்வதாலேயே மக்களுக்குப் பாதிப்புக்கள் ஏற்படும். அயடீன் வளிமண்டலத்தில் கலந்தால் அதனால் 8 நாட்களுக்குப் பாதிப்பு ஏற்படும். ஆனால் சீ.சீ.எம். வளிமண்டலத்தில் கலந்தால் அதனால் 30 வருடங்களுக்கு மேல் பாதிப்பு ஏற்படும் என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களிலும் அணு உலைகளில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. தற்பொழுது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் அணு உலை விபத்து அலகு 4 அளவிலேயே ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அலகு 7 அளவிலான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. இதுவரை ஜப்பானில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படவில்லை.
ஜப்பானின் அணு மின்உற்பத்தி நிலையங்களின் மூன்று உலைகளின் தடுப்புச் சுவர்களே வெடித்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் உலைகளைக் குளிரூட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்காத நிலையிலேயே அவை வெடித்ததுள்ளன.
அணு உலைகள் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 100 சதுர கிலோமீற்றருக்கு அப்பால் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அணுக் கதிர் கசிவைத் தடுப்பதற்கு ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா, தென்கொரியா, ஜேர்மனி போன்ற நாடுகள் கடும் முயற்சிகளை எடுத்துள்ளன என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
புகுஷிமா அணு மின் உற்பத்தி நிலையத்தில் நான்காவது வெடிப்பொன்றும் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அணு சக்தி அதிகாரசபை தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர், இறுதியாக ஏற்பட்ட வெடிப்பின் தாக்கம் குறித்து எதிர்வரும் 3 நாட்கள் அவதானிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சுனாமித் தாக்கத்தின் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டமையால் அணு உலைகளைக் குளிரூட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. பற்றரிகள் மூலம் குளிரூட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கடல் நீரைக் கொண்டு குளிரூட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதுவும் பலனளிக்காத நிலையிலேயே வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அணுக்கதிர்கள் உணவு மூலம் இலங்கைக்குப் பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஆனந்த ஜயலால் தெரிவித்தார்.
ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு விசேட குழுக்கள் துறைமுகங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் அவசர உதவி திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஏ.ஜயலத், காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் எச்.காரியவசம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் காமினி ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

0 commentaires :

Post a Comment