3/16/2011

பெங்காசியை நோக்கி முன்னகர்கிறது அரச படை

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசியை நோக்கி கடாபி ஆதரவு அரச படை முன்னகர்ந்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெகா நகரைக் கைப்பற்றிய கடாபி ஆதரவுப்படை பெங்காசிக்கு அண்மைய நகரமான அஜபியாவைக் கைப்பற்றப் போராடி வருகின்றது.
பெங்காஸிக்கு தெற்காக 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அஜபியாவில் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
அஜபியாவில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு வான் தாக்குதல் இடம்பெற்று வருவதாக அங்கு வசிக்கும் அலிபவுஹில்பாயா அல் ஜkரா செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடாபி அரசுக்கு எதரான போராட்டம் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளதாக கிளர்ச்சிப் படையின் முன்னணி கட்டளை தளபதியும்,முன்னாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான ஜெனரல் அப்துல் பதா யுனீஸ் தெரிவித்துள்ளார்.
பெங்காஸியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அஜபியாவில் இடம்பெற்றுவரும் மோதல் எமக்கு தீர்க்கமானதாக அமைந்துள்ளது. எனினும் எதிர்ப்படை தாம் கைப்பற்றிய பகுதிகளைப் பாதுகாப்பதில் சிக்கலை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே ருவாண்டா போன்று லிபியாவிலும் பேரவலம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மனித உரிமைகளுக்கான லிபிய லீக் அமைப்பின் தலைவர் சுலைமான் பெளச்சிகுர் கவலை தெரிவித்துள்ளார். லிபிய அரச படை அஜபியாவைக் கைப்பற்றி மேலும் முன்னகர்ந்து சென்றால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும் அவல நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கிளர்ச்சியாளர் தமது ஆயுதத்தை களைந்து சரணடைந்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று முஅம்மர் கடாபி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரெகாவின் ஒரு பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இந்த தகவலை அரசு முற்றாக மறுத்துள்ளது.
இதனிடையே லிபியாவின் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த ஒரே நகரான சுவாரா பகுதியையும் தமது கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்ததாக அரசு அறிவித்துள்ளது.
சுவராவின் முழு கட்டுப்படும் அரசு வசம் உள்ளது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் முழுமையாக பின்வாங்கினர் என்று அரசு பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதனை அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
சவாஹரா தலைநகர் திரிபோலியிலிருந்து 120 கிலோ மீற்றருக்கு அப்பால் டுனிஷிய எல்லைப் புறத்தில் அமைந்துள்ளது.
இதேவேளை, லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிப்பது தொடர்பில் சர்வதேச அளவில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவருகிறது. இந்தத் திட்டத்திற்கு அரபு லீக் ஆதரவு அளித்திருந்தாலும் அமெரிக்கா மற்றும் நேடோ அமைப்புகள் தொடர்ந்து இறுதி முடிவை எடுப்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
இது குறித்து ஐ. நா. பாதுகாப்புச் சபையிலும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தப்பட்டது. எனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அதேபோன்று பாரிசில் கூடிய ஜி 8 நாடுகளின் வெளியுறவு அமைச்சர் கூட்டத்திலும் லிபிய வான் தடை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் நாடுகளுக்கிடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இது குறித்து ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் கதரின் அஷ்டன் கூறியபோது:- லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை விதிப்பது சட்டப்படி ஒரு நாட்டின் மீது இராணுவ தலையீடாக அமையும். ஜெர்மனி யுத்தம் ஒன்றில் தலையிட விரும்பவில்லை என்றார்.

0 commentaires :

Post a Comment