3/13/2011

எண்ணெய் நகரான ராஸ் லனூபா அரசு வசம் கிளர்ச்சி அரசுக்கு பிரான்ஸ் அங்கீகாரம்

லிபியாவின் எண்ணெய் நகரமான ராஸ் லனூபாவை கடாபி ஆதரவுப் படை கைப்பற்றியது. தொடர்ச்சியான மோதலைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு அரச படை நேற்று உள்நுழைந்தது.
விமானம் மற்றும் தரை வழியாக இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதலைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். இந்த தாக்குதலின்போது அதிக அளவிலான கடாபி இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தவிர தலைநகர் திரிபோலிக்கு கிழக்கு பகுதி மற்றும் பிரெகா, பின் ஜவாத், அஸ் ஸாவியா பகுதிகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் கடாபி ஆதரவுப் படை யுத்த விமானம், ரொக்கெட் லோன்சர், இயந்திர துப்பாக்கிகள் மூலம் எதிர்ப்பாளர்களுக்கு கடுமையான தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே முஅம்மர் கடாபியின் மகன் சயில் அல் இஸ்லாம் நேற்று ராய்ட்டர் செய்திச் சேவைக்கு பேட்டி அளித்தார். இதில் அவர் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக முழு அளவிலான யுத்தம் முடுக்கி விடப்பட் டுள்ளதாக தெரிவித்தார். எதிர்ப்பாளர்களுடன் எந்த பேச்சுவார்த்தைக் கும் டைமில்லை என வும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று முன்தினம் நடத்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற லிபிய பிரதி வெளியுறவு அமைச்சர், அரசுக்கு எதிராக மோதுபவர்கள் அல் கைதா தீவிரவாதிகள் என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், லிபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து மேற்கத்திய நாடுகள் தொடர்ந்தும் ஆலோசித்து வருகின்றன. லிபியாவின் வான் பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிப்பது குறித்தே நேட்டோ நேற்றைய தினத்திலும் ஆலோசனை நடத்தியது. எனினும் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தொடர்ந்து ஆராய வேண்டும் என நேட்டோ தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில் லிபியாவில் பெங்காசியை தலைமையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ள கிளர்ச்சிக் குழுவின் இடைக்கால அரசை பிரான்ஸ் அங்கீகரித்துள்ளது. இந்த அரசுக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடாக பிரான்ஸ் பதிவானது.
த்துடன், ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு நாடுகள் லிபியா மீது நிதி தடையை அமுல்படுத்த முடிவு செய்துள்ளன. இதன் ஒரு கட்டமாக ஜெர்மனியில் உள்ள லிபிய வங்கிகளின் கணக்குகள் முடக்கப்படுவதாக ஜெர்மன் நிதித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லிபியாவில் ஏற்றுமதியாகும் எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாய் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. லிபிய ஜனாதிபதி கடாபியின் பணமும் ஏராளமான அளவில் ஜெர்மன் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மன் அரசின் நடவடிக்கையால் 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான பணம் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லிபியாவுக்கு ஆயுதங்களை விற்கப் போவதும் இல்லை, ஆயுதங்களை விநியோகம் செய்யப் போவதும் இல்லை என ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வடேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆவணத்திலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகமாக ஆயுதங்களை விநியோகம் செய்யும் இரண்டாவது நாடு ரஷ்யா, லிபியாவுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்ட இராணுவ சாதனங்களை ரஷ்யா விநியோகம் செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. தற்போது லிபியாவில் காணப்படும் பிரச்சினை காரணமாக இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment