3/21/2011

நூறுவீதம் தமிழ் மக்களை கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச சபையில் தமிழர் கட்சி தோல்வியடைந்துள்ளது




இதுவரை காலமும் வெறும் வீரப் பேச்சுக்களுள் முடங்கி ஏமாற்றப்பட்டு வந்த தமிழினம் இன்று அபிவிருத்தியின்பால் திசைதிரும்பத் தொடங்கியுள்ளதை இன்றைய தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. இது மக்களின் நியாயமான மாற்றமாகும்.
இவ்வாறு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன உள்ளூராட்சித்தேர்தல் முடிவுகள் குறித்துக் கூறுகையில் தெரிவித்தார்.
அவர் ஆதரவளிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கு தமது ஆலையடி வேம்புப் பிரதேசத்தில் முதற்தடவையாக இரு ஆசனங்களும், நாவிதன் வெளிப் பிரதேசத்தில் ஒரு ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நூறுவீதம் தமிழ் மக்களை கொண்ட ஆலையடி வேம்பு பிரதேச சபையில் தமிழர் கட்சி தோல்வியடைந்துள்ளது என்றே நான் கூறவேண்டும். இம்முறை 50% மக்களை அவர்கள் இழந்துள்ளனர்.
கடந்த தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இம்முறை போனஸ் ஆசனத்துடன் 05 ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்துள்ளமை அக்கட்சியின் செல்வாக்குச் சரிவை எடுத்துக்காட்டுகிறது.
மக்கள் புதியமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இன்னமும் ஏமாறாமல் அபிவிருத்தியைக் காண மக்கள் துடிக்கின்றனர்.
ஆலையடிவேம்பில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு முதற்தடவையாக 2 ஆசனம் பெறப்பட்டிருக்கிறது. உண்மையில் இத்தொகை இரட்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், இப்பட்டியலில் தரமான தகுதியான மக்கள் சேவையாளர்கள் உள்Zர்க்கப்படவில்லை.
தமிழரசுக்கட்சியின் ஏமாற்றுவித்தைகள் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது. இவர்கள் இங்கு ஆட்சியமைத்த பின்பே ஆலையடி வேம்பின் எல்லைகள் பரிபோனதுடன் மக்களின் உரிமைகளும் இழக்கப்பட்டன. கடந்த தேர்தலில் நான் தனியாக 6000துக்கும் அதிகமானவை பெற்றிருந்தேன். இன்று அத்தொகையை இக்கட்சிபெற வேண்டியிருக்கிறது.
சமூகத்தில் காலாகாலமாக சேவை செய்துவருபவனுக்கு வேட்பாளர் தெரிவு வழங்க வேண்டும். எந்தவொரு தமிழ் பிரதேசமும் அபிவிருத்தி காண வேண்டுமாயின் அது ஆளும்கட்சியை ஆதரித்துத்தான் ஆகவேண்டும். இம்முறை வாக்களிப்பும் அச்செய்தியைத்தான் சொல்கிறது.
தமிழ் மக்களுக்கு குரல்கொடுக்க பாராளுமன்றமோ, பிரதேசசபையோ தேவையில்லை, அதற்கு ஊடகங்கள் உள்ளன.
மாறாக தமிழ் மக்களுக்கு இன்று தொழில் வாய்ப்பும், அபிவிருத்தியுமே தேவை, அதனைப் பெறவே ஆளும் கட்சிக்குப் பின்னால் தமிழ் மக்கள் அணிதிரள்கின்றனர் என்றார்.

0 commentaires :

Post a Comment