3/04/2011

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள்

லிபியாவை நோக்கி விரைகின்றன அமெரிக்க போர்க்கப்பல்கள். இவை கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளன.

லிபியா நாட்டில் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுவடைந்துள்ளது. பெங்காசி, மிஷ்ரதா, ஷாவியா உள்பட பல நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றி உள்ளனர். போராட்டத்தை அடக்கவும், அவர்கள் வசம் உள்ள நகரங்களை மீட்டு தங்கள் வசம் கொண்டு வரவும் கடாபி ராணுவத்தை முடுக்கி விட்டுள்ளார்.

கிழக்கு பகுதியில் உள்ள 2 முக்கிய நகரங்களை மீட்கும் நடவடிக்கையாக கடும் தாக்குதலை தொடுத்து உள்ளதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

அவரது அடக்குமுறைக்கு ஐ.நா. சபை உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. பல நாடுகள் லிபியா மீது பொருளாதாரத்தடை விதித்து உள்ளன.

இதற்கிடையே, அந்த நாடு மனித உரிமைகளை மீறிவிட்டதாக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்து லிபியாவை விலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் விரைகின்றன

மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் ஏற்கனவே கேட்டுக்கொண்டும் கடாபி கேட்கவில்லை. ஆகவே மக்கள் மீது குண்டு வீசும் லிபியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

கடாபிக்கு எதிராக தாக்குதல் நடத்த அமெரிக்கா 2 போர்க்கப்பல்களையும், போர் விமானங்களையும் லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. கேர்சர்ஜ், போன்ஸ் என்ற அந்த 2 போர்க் கப்பல்களும் நேற்று சூயஸ் கால்வாயை சென்று அடைந்துள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர். __

0 commentaires :

Post a Comment