3/02/2011

திருமலை - விசாகப்பட்டினம் கப்பல் சேவை விரைவில்

திருமலை - விசாகப்பட்டினம் கப்பல் சேவை விரைவில்



இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும், இலங்கைக்கும் இடையில் நேரடி விமான, பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கான ஒழுங்குகள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கொழும்பிலிருந்து நேரடியாக விசாகப்பட்டினத்திற்கு விமான சேவையும், திருகோணமலை துறைமுகத்திலிருந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டின துறைமுகத்திற்கு நேரடி பயணிகள் கப்பல் சேவையும் ஆரம்பிக்கப்படுமென்று இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் கிட்டான் பல்கலைக்கழகம் ஒழுங்கு செய்த வணிகர்கள் சங்க கூட்டத்தில் உரையாற் றியபோதே இலங்கைத் தூதுவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில், விமானம் மற்றும் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கிடை யில் இருந்து வரும் வர்த்தகத் தொடர்புகள் மேலும் அதிகரிக்கும். தெற்காசிய நாடுக ளிடையே விமான, கப்பல் போக்குவரத்தின் அவசியம் சமீபத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இலங்கை கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடற்ற பொருளாதார கொள்கையில் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இன்று, இலங்கையில் பூரண சமாதானம் திரும்பியிருக்கின்ற வேளையில் இலங்கை, இந்திய முதலீட்டாளர்கள் பரஸ்பரம் இரு நாடுகளிலும் முதலீடுகளை செய்து கட்டுப்பாடற்ற பொருளாதார கொள்கையின் மூலம் நன்மையடைவது அவசியம்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அதாவது கொழும்புத் துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை வெற்றிகரமாக திங்களன்று ஆரம்பமாகியது. அதற்கு அடுத்தபடியாக தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆசிய நாட்களில் இந்தியா இன்று பொருளாதார ரீதியில் முன்னணி நாடாக திகழ்ந்து கொண்டிருப்பதனால் இலங்கை, இந்தியாவில் இருந்து கூடுதலான முதலீடுகளை எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது.
1978ம் ஆண்டிலிருந்து 1995ம் ஆண்டு வரையில் இலங்கைக்கு வந்த மொத்த வெளிநாட்டு முதலீட்டில் 1.2 சதவீதத்தையே இந்தியா முதலீடாக கொடுத்திருந்தது. 1998ம் ஆண்டில் இந்தியா, இலங்கையில் 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்தது. 2008ம் ஆண்டில் இந்தியா 125.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையில் முதலீடு செய்தது. இது இலங்கைக்கு கிடைத்த மொத்த வெளிநாட்டு முதலீட்டில் இது 14 சதவீதமாகும்.
இந்தியா 2007இல் செய்த முதலீடுகள் மூலம் இந்திய நிறுவனங்கள் 70க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. இன்று இந்தியா, இலங்கையில் ஆகக் கூடுதலான வெளிநாட்டு முதலீட்டை செய்யும் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

0 commentaires :

Post a Comment