3/08/2011

சர்வதேசபெண்கள்தினம் மார்ச்8

   சர்வதேச பெண்கள் தினத்தினை ஒட்டி பெண்ணியம் தளத்தில்  பலமுக்கியமான கட்டுரைகள் பிரசுரமாகி உள்ளன அவற்றில் சில இங்கே நன்றியுடன் பிரசுரமாகின்றன 

வருடங்கள் வளர்கின்றன - தேவா-ஜெர்மனி

1911லிருந்து சர்வதேசபெண்கள்தினம் மார்ச்8 என பிரகடனப்படுத்தப்பட்டு ஒரு நூறு ஆண்டு காலம் ஆகிவிட்டது இந்த வருடத்தோடு
முதன்முதலாக 1857ல் தொழிலாளஉரிமைபோராட்டத்திலிருந்து உருவாகிய பெண்ணுரிமைபோராட்டம் பல்வேறுபரிணாமங்களை தொட்டாலும் அதன் அடிப்படையான நோக்கங்களைக்கூட அடைந்திருக்கிறதா என்றால் அங்கு இல்லை என்ற பதிலைத்தான் காணமுடியும். பெண்களுக்கு சில வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன! கடந்த காலங்களை ஒருதடவை திரும்பிபார்ப்பதற்கு இத்தினத்தை ஒருசந்தர்ப்பமாக்கிக் கொள்கையில் இப்படித்தான் கூறவேண்டியதாகிறது!

முதலாளித்துவ சமூகத்தில் பெண் சரிசமமாய் மதிக்கப்படுகிற பாவனையே காட்டப்படுகிறது. வேலைவாய்ப்புகளில்-கல்வியில்-சம்பளவிகிதத்தில்-சமூகத்தில்-குடும்பத்தில்-அரசியலிலேயும் இன்னும் பலதளங்களிலும் பெண்வகிப்பு செழுமையடையவில்லை. மேலோட்டமாக பார்க்கும்போது பெண்ணுடைய பங்கு மேற்சொன்ன தளங்களிலே நேர்மையாய் இயக்கப்படுவதாய் தோற்றம் கொண்டிருக்கிறது. உண்மையில் பெண்ணின் உழைப்பு தொடர்ந்தும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. தொழிலிலே சமஊதியம், சமூகத்தில்- குடும்பத்திலே சமச்சீர் போன்ற அடிப்படைஉரிமைகள்கூட ஆணுக்கு நிகராக இல்லை. இவைகள் முதலாம் உலகத்திலும் இல்லை. மூன்றாம் உலகத்திலும்; இல்லை. அது கடவுள் உலகத்திலும் இல்லை.

பெண்ணுரிமை போராட்டங்கள் பல தளங்களில் இன்னும் தொடர்ந்தாலும் அவைகள் ஒரு சிறியதிருப்தியை தருவனவாக அமைகின்றன. உலகசனத்தொகையில் சரிபாதியாய் இருக்கிற பெண்ணுடைய வாழ்வுரிமையும் சரிசமமாய் இருக்கிறதா? பெண்-அம்மாபெருமைகளும், புலம்பல்களும் பெண்ணை வலிமையற்றவளாக்குகின்றன. சர்வதேசபெண்கள்தினத்திலே புலத்துதமிழ்வானொலிகள் பல பெண்களுக்காக நடாத்தும் நிகழ்ச்சிகளை செவிமடுத்தால்:|- உலகத்திலேயே தமிழ்ப்பெண்கள்தான் எல்லாஉரிமைகளோடும்-சிறப்புகளோடும் வாழ்கிற ஒரு தமிழ்மசாலாதிரைப்படம் பார்க்கிற அனுபவம் கிடைக்கும். புலத்திலே ஒரு பெண்ணுக்கு-தமிழ்பெண்ணுக்கு அவளுடைய உரிமைகள் அவள் வாழும் நாட்டிலே எந்தளவுக்கு அவளுக்கே தெரியப்பட்டிருக்கிறது? கல்வி-தொழில்சார்புஉரிமை, சமஊதியம், பிள்ளைகள் இருப்பின் அவர்கள்விடயத்தில் தீர்மானம் எடுக்கும் உரிமை, தன்வாழ்வுசுதந்திரம் பற்றிய தெளிவுகள் இருக்கின்றனவா?

ஆயினும் தாயகத்துபெண்கள் குடும்பத்துக்காக உழைக்க போய் உடம்பில் ஆணிகள் ஏற்றப்படுகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம் தரப்படாமலும் அதேசமயம் உடல்ரீதியான வன்முறைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. பெண்கல்விமறுப்பு இன்னும் இருப்பதால் பெண்ணுக்கு திருட்டுபட்டம் கட்டி தற்கொலைக்கு தள்ளப்படுகிறாள். ஆசியநாடுகளிலே ஆடைத்தொழிற்சாலைகள், தேயிலைத்தோட்டங்கள், ரசாயன ஆலைகள் பெண்களின் இரத்தத்தை உறிஞ்சும் அதிகாரங்களாயிருக்கின்றன. சிறுமிகள் வீட்டுவேலை செய்கிற அடிமைகளாக இருக்கிறார்கள். வயதுவந்தவர்கள் செய்யும் வேலைகளை இவர்கள் செய்து மிக மிக குறைந்த அல்லது சம்பளமே பெறாதவர்களாக அல்லல்படுகிறார்கள்.

பாலியல்வன்முறையும், உடல்துன்புறுத்தல்களோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்யப்படுகிறார்கள். சட்டம் சிறுமிகளை வீட்டுவேலைக்கு அமர்த்தக்கூடாது- அது குற்றம் என்கிறது. நடைமுறையோ பெண்களை இன்னும் 2ம் தரபிரசையாகவே நடாத்துகிறது.

பெண் வேலைக்குபோகவில்லையா. ஆண் பாத்திரம் தேய்க்கவில்லையா என்கிற பட்டிமன்றவிவாதங்களும், விளம்பரங்களில் சித்தரிக்கப்படும் பெண்கவர்ச்சியும் பெண்ணுரிமையை ஒரு கேலியான விவகாரமாக முன்வைத்து,அதன் அவசியத்தை லாவகமாக மூடிவைத்துவிடுகின்றன.

உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, சமபாலுரிமைமறுப்பு, உடல்மீதான வன்முறை, சமூகஅழுத்தம், சாதியம், போருக்குபின் பெண்இருப்பு போன்றவைகள் மட்டுமல்லாமல் இன்னும் பல அநீதிகளுக்காக- பெண்விடுதலைக்காக இன்னும் 100வருடங்கள் உழைக்கவேண்டிய கட்டாயம் எம்முன்னே நீண்டிருக்கிறது என்பதே யதார்த்தம். இத்தினம் வருடத்துக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதோடு மட்டும் அல்லாது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.




இன்னும் கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. உமா - ஜேர்மனி

நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேசப் பெண்கள் தினம்
முதலாவது பெண்கள் தினத்தின் போது

சர்வதேச ரீதியாக பெண்கள் தினத்தை நூற்றாண்டுகளாக கொண்டாடுவதென்பது பெண்ணொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை நூற்றாண்டுகளாக நாடாத்திச் செல்வதென்பதே.

1908ம் ஆண்டு நியுயோர்க் நகரில் 15 000 ஆடைத்தொழிலாளப் பெண்கள் சம்பள உயர்விற்காகவும், வேலைநேரத்தை குறைக்கக் கோரியும், தொழிற்கூடத்தில் மேலதிகவசதிகளைக் கோரியும் ஊர்வலமொன்றை ஒழுங்குசெய்தார்கள். 1857ம் ஆண்டு தமது முன்னோடிகள் நிகழ்த்திய போராட்டங்களைக் கௌரவிக்கும் முகமாகவுமே அப்பெண்தொழிலாளர்கள் இந்த ஊர்வலத்தை ஒழுங்குசெய்திருந்தார்கள். இந்த ஊர்வலம் தந்த உத்வேகத்தால் , 1909 ம் ஆண்டு நியுயோர்கில் அமைந்திருந்த Triangle Shirt Waist பெண்தொழிலாளர்கள் வேலைநிறுத்தமொன்றை ஆரம்பித்தனர்.Local 25> International Ladies Garment Workers Union என்பவை Triangle Shirt Waist தொழிசாலையிலுள்ள பெண்தொழிலாளர்களிற்காகவும், அது போன்ற sweat shops (வியர்வைக்கடைகள்) வேலைசெய்யும் பெண்களின் உரிமைகளிற்காகவும், அவர்கள் மீதான மோசமானச் சுரண்டலை எதிர்த்தும் இவ்வேலை நிறுத்தத்தை மூன்று மாதக் காலமாக நடாத்தினார்கள். இத்தொழிற்சாலைகளில் 15, 16 வயதான ஆமெரிக்க மற்றும் யூதத் தொழிலாளப் பெண்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணிவரை வேலை செய்ய வேண்டியிருந்தது. மலசலகூடத்திற்குச் செல்வதானால் அவர்கள் கட்டிடத்திற்கு வெளியே செல்ல வேண்டியிருந்ததால் , முதலாளிகள் கதவைத் தாளிட்டு மூடியிருந்தார்கள். Local25 இற்கு Clara Lemlich தலைமை தாங்கினார். இப்பெண்தொழிலார்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக. 500 தொழிற்சாலைகளைச் சேர்ந்த 20 000 தொழிலாளரகள் வேலைறிறுத்தப் போராட்டத்தில் இறங்கினார்கள். 1910ம் ஆண்டு எந்தக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத நிலையிலும், தொடர்ந்தும் கதவு அடைக்கப்பட்ட நிலையில் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. ஒருவருடத்திற்குப் பின் இத்தொழிற்சாலை தீவிபத்திற்க்குள்ளானது. கதவுகள் மூடப்பட்டிருந்தமையாலும் , தீயணைக்குதம் படையினரின் ஏணிகள் 10ம் மாடியை எட்டமுடியாமல் போனாமையாலும் 146 தொழிலாளப் பெண்கள் இறக்க நேரிட்டது.

அதைத்தொடர்ந்து 1910ம் ஆண்டு நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் 60 பெண் தொழிலார்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடைபெற்ற இச் சோசலிச பெண்தொழிலாளர்களின் எழுச்சிகளை நன்கு கவனித்துக்கொண்டிருந்த ஐரோப்பிய சோசலிஸ்ட் அமைப்புகளைச் சேர்ந்த பெண்கள் உலகப் பெண்தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். 1910ம் ஆண்டு கோப்பன்காகனில் நடைபெற்ற சர்வதேவச சோசலிச காங்கிரசில் ஜேர்மனிய சோசலிஸவாதியான கிளாரா செர்க்கின் சர்வதே தொழிலாளப் பெண்கள் தினத்தைப் பிரகடனப்படுத்தினார். இந்த காங்கிரசில் கலந்து கொண்ட 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் இத்தீர்மானத்திற்கு தமது பேராதரவை வழங்கினர்.

இத்தீர்மானத்தைத் தொடர்ந்து 1911ம் ஆண்டு முதன்முதலாக மார்ச் 19ம் திகதி ஜேர்மனி, சுவிட்சலாந்து , ஆஸ்திரியா ஆகிய நகரங்களில் சர்வதேச தொழிலாளப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளப் பெண்களின் அடிப்படை உரிமைகளையும், பெண்களின் வாக்குரிமையையும் இவர்கள் கோரிக்கைகளாக வைத்தனர்.
முதலாவது பெண்கள் தினம்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பெண்கள் தின ஊர்வலங்களில் Triangle Shirt Waist தொழிற்சாலையில் தீவிபத்திற்குள்ளான பெண்தொழிலாளர்கள் நினைவு கோரப்பட்டனர். 1912 ஆம் ஆண்டு லோரன்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் தொழிலாளர்கள-; 'Bread and Roses' என்ற பெயரில் போராட்டங்களை நடத்தினர்.
நாம் ஊர்வலமாகப் போகும் இந்தப் அழகான பொழுதில் மில்லியன் கணக்கான இருண்ட சமையலறைகளும், ஆயிரம் சாம்பல் நிறமான ஆலை விறாந்தைகளும் சூரியன் தீடிரெனப் பாய்ச்சும்; வெளிச்சத்தை பரகிசிக்கின்றன.
பாணும் ரோசா மலர்களும் பாணும் ரோசா மலர்களும் என நாம் பாடுவதை மக்கள் கேட்கின்றனர் நாம் ஊர்வலமாகப் போகையில் ஆண்களிற்காகவும் போராடுகிறோம்.

அவர்கள் பெண்களின் குழந்தைகள், அவர்களிற்கு நாம் மீண்டும் தாயாகிறோம்
எமது வாழ்வு பிறப்பிலிருந்து இறப்புவரை வியர்வையாதல் ஆகாது எமது உடல்கள் போலவே இதயமும்; பட்டினியால் தவிக்கின்றன எமக்கு பாணைப் போலவே ரோசா மலர்களையும் தாருங்கள் எனத் தொடரும் பாடலைப் பாடினார்கள். தொடர்ந்த பெண் தொழிலார்களின் போராட்டங்களின் போதும், சர்வதேச பெண்கள் தின ஊர்வலங்களிலும் பெண்கள் இப்பாடல்களைப் பாடினார்கள்.

1913-14களில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் தினங்களில் முதலாம் உலக யுத்ததைக் கண்டித்து பெண்கள் கோசங்களை முன்வைத்தனர். 1917 ல் மார்ச் 8 ம் திகதி; ரஷ்யப் பெண்கள் பாணும் சமாதானமும் என்ற பெயரில் வேலைநிறுத்த எதிர்ப்பு போராட்டத்தையும், ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிரான போரட்டத்தையும் நிகழ்த்தினர்.

* * * * *
உலகெங்கிலும் பெண்கள் சமூக, மத, கலாசார, மற்றும் பால் ரீதியான ஒடுக்கமுறைகளிற்கு ள்ளாக்கப்படுவதோடு, உழைப்புச் சுரண்டலிற்கும் உள்ளாக்கபபடுகிறார்கள். நூற்றாண்டுகளிற்கு முன், தொழிற்கூடங்களில் பால்ரீதியாக ஒடுக்கப்பட்டு, குறைந்த கூலி, சம்பள உயர்வின்மை, தொழிற்கூடற்களில் அடிப்படை வசதியின்மை, பாதுகாப்பின்மை என்பவற்றை எதிர்த்து, தமது உரிமைகளைக் கோரி பெண் தொழிலாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டது போலவே, இன்னும் இதே சுரண்டல்களிற்கெதிரான போராட்டங்கள் பெண்களால் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

உலகமயமாதலின் விளைவாக பொருளாதரத்தில் வளர்ச்சியடைந்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியால் உலகெங்கும் குறைந்த கூலிக்காக அதிக இலாபத்தைக் தரக்கூடிய தளங்களைத் தேடிச்செல்கின்றனர்.

ஒரு நாட்டின் ஏற்றுமதியை முன்னிலைப்படுத்தி, அந்நாட்டின் அபிவிருத்தியைப் பெருக்கச் செய்யும் மூலோபாயமாக , உலக வங்கியாலும், சர்வதேச நாணய நிதியத்தாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் சுதந்திரவர்த்தக வலயங்களும், Export processing Zones ம்(ஏற்றுமதிக்காக தயார்படுத்தும் வலயங்கள்) அறிமுகப்படுத்தப்பட்டன. 1977 க்கு பின் இலங்கையில் திறந்த பொருளாதாரத்தின் நுழைவோடு சுதந்திர வர்த்தகவலையங்கள் கட்டுநாயக்கவிலும், பின்பு பியகமவிலும் கொக்கலவிலும் திறக்கப்பட்டன. ; வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை மையப்படுத்தியமைக்கப்பட்ட இத்தொழிற்சாலைகளில் அடிப்படைத் தொழிற்சட்டங்களிற்கு மதிப்பளிக்கப்படவில்லை. பிறைவட் செக்கடருக்குள் அடங்கக்கூடிய ஆடை, நெசவு ,பின்னல் மற்றும் உணவுபதப்படுத்தல் என்பவற்றை உற்பத்திசெய்யும் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டன. நாட்டின் 30 வீதமான ஏற்றுமதி இத்துறைகளிலிருந்தே பெறப்படுகின்றது. இத்தொழிற்சாலைகளில் கடமையாற்றுபவர்களில் 85 வீதமானவர்கள் பெண்கள். கட்டுநாயக்காவில் மாத்திரம் 60 000 பேர் வேலை செய்கிறார்கள். இதில் 52 000 பேர் பெண்கள். அவர்கள் அதிகமாக 18 க்கும் 25 வயதிற்கும் உட்பட்டவர்கள். இவர்கள் கூடிய வேலைநேரம், ஓய்வின்மை, அதிகநேரவேலை. குறைந்த ஊதியம், அடிப்படைச் சுகாதார வசதியின்மை போன்ற பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கிறார்கள். இவர்கள் 6 மணிக்கு வேலையை ஆரம்பிக்வேண்டியுள்ளது. ஆனால் 7 மணிக்குத் தான் பன்ச் கார்ட் பதிவுசெய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இவர்களது வேலை நேரம் 8 லிருந்து 10 மணித்தியாலங்களாகவுள்ளது.
வேலை நேரங்களில் இவர்களிற்கு ஓய்வு கிடைப்பதில்லை. மலசலகூடத்திற்குச் செல்வதானாலும் சுப்பவைசரிடம் சூ கார்ட்; எனப்படும (சிங்கள மொழியில் சிறுநீரை பேச்சு வழக்கில் choo என அழைப்பதுண்டு.) சிறுநீர் கழிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெறவேண்டும். அதில் இப்பெண் எத்தனைமுறை நாளிற்கு சிறுநீர் கழித்துள்ளார் என பதிவு செய்யப்படும். சில தொழிற்சாலைகளில் மலசலகூடத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் பதிவுசெய்யவேண்டும். புதிதாக வேலைக்கு வந்தவர்கள் மலசலக்கூடங்களை பாவிப்பதற்கு அனுமதியில்லை. மூன்று மாதங்களாக வேலை செய்யும் பெண்ணொருவர் மலசலம் போவதிற்காக .சூ கார்டைக் கேட்ட போது, அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து கேட்ட காரணத்தினால் அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஒரு நாளிற்கு ஒருமுறை மட்டுமே அதிகமான தொழிற்சாலைகளில் அனுமதி வழங்கப்படுகின்றது. அதன் காரணமாக இப்பெண்கள் வேலை செய்யும் நேரங்களில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்து வருகிறார்கள். இதனால் அவர்களிற்கு சிறுநீரக வியாதிகள் வருகின்றன . இங்கு வேலைசெய்யும் அதிகமான பெண்கள் போசாக்கின்மை உணவுப் பற்றாக்குறையென்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு கடமையாற்றுபவர்களில் அதிகமானவர்கள் தூரக் கிராமங்களிலிருந்து தமது வறுமையின் காரணமாக வேலைவாய்ப்புத் தேடி இப்பிரதேசங்களிற்கு வந்தவர்கள். இதன் காரணமாக இவர்கள் வேறு வீடுகளில் தங்கியிருக்கவேண்டியுள்ளது.பெருந்தொகையாகப் பெண்கள் இப்பிரதேசங்களிற்கு வரத் தொடங்கியவுடன் இவர்களிற்கு வாடகைக்குக் கொடுப்பதற்கெனச் சிறு அறைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த 10x8 அல்லது 10x9 அடி நீள அறைகளிற்குள் பல பெண்கள் அடைபட்டு வாழவேண்டியுள்ளது. 30 லிருந்து 40 பேர் ஒரு குசினியையும் மலசலகூடத்தையும் பயன்படுத்துகிறார்கள்.

அவர்களின் அடிப்படைச்சம்பளம் 6700 ரூபாய்களாக உள்ளன. நீண்ட நாட்கள் வேலை செய்பவர்களில் சிலர் மேலதிக நேரம் வேலை செய்வதால் 12 000 ரூபாய்க்களைப் பெறக்கூடியவர்களாகவிருக்கின்றனர். விலைவாசியின் அதிகரிப்பால் தமது அடிப்படைச் சம்பளத்திலிருந்து 2 500 ருபாய்க்களை அதிகரிக்கக் கோரி அதிகமான தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தங்களையும், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடாத்தி வருகின்றனர். இலங்கை வர்த்தக ஊழியர் சங்கத்தின் தலைமையில் பொலிடெக்ஸ் கார்மென்டில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. 2010 நவம்பர் மாதத்திலிருந்து சம்பள உயர்வைக் கோரி FTZ-GUSEU, Progressive Union of FTZ ஆகியோரின் தலைமையில் , தொழிலாளர்கள் „அதிக சம்பளம் BOI அதிக இலாபம் „ எனும் வாக்கியங்கள் ;எழுதப்பட்ட மஞ்சள்பட்டிகளை அணிந்த வண்ணம் வேலையில் ஈடுபடுகிறார்கள். BOI என்பது Board of Invesment ( முதலீட்டார்களின் சபை) ஆகும். சுதந்திர வர்த்தக வலையத்தில் முதலீடுகளை ஒழுங்கமைக்க ஆரசாங்கத்தால் நடாத்தப்படும் ஏஜென்சி. BOI க்கு அதிக இலாபத்தை ஈட்டித்தருவதால் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுக்கிறார்கள். 2010 தேர்தலின் போது 2500 ரூபாய்கள் அதிகரிப்பதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வாக்குறுதியளிக்கப்பட்டாலும் அது நிறைவேற்றப்படவில்லை. 500 ரூபாய்கள் மாத்திரமே சலுகைப்பணமாக வழங்கப்பட்டது. பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தொழிலாளர் சங்கங்களுடன் பேசுவதாக உறுதியளித்திருந்தாலும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கையிழந்த நிலையிலேயேயுள்ளனர்.

இத்தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி வாடகைக்கும், வீட்டுச்; செலவிற்கும் போக தமது உறவினர்களிற்கு அனுப்புவதற்காக சிறிய தொகையே கையில் மிஞ்சுகிறது. வேலைவாய்ப்பிற்காக தமது குழந்தைகளை ஊரில் தமது உறவினர்களுடன் விட்டு வந்தவர்களும் உள்ளனர். இவர்கள் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தான் தமது குழந்தைகளைப் பார்க்கச் செல்கிறார்கள்.

சுதந்திரவர்த்தக வலையத்தில் பணிபுரியும் பெண்களின் துயரையும் , பிரச்சினைகளையும் வெளியுலகிற்கு கொண்டு வருவதிலும் அவர்களிற்கான ஆலோசனைகளையும் வழங்குவதிலும்; கட்டுநாயக்கவில்அமைந்திருந்த பெண்கள் நிலையமும், ஏகலவில் இருந்து இயங்கும் டாபிந்து(வியர்வைத்துளி) கௌக்டிவ்வும் பெரும் பங்காற்றின. 90 களில் மனிக்N;க என்ற ஸ்டார் காமென்ட்டில் வேலை செய்த பெண் தொழிலாளியின் கவிதை டாபிந்து பத்திரிகையில்; வெளிவந்தமைக்காக அவள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். அந்தக்கவிதையில் அவள் தான் காலையில் 4.30 மணிக்கு எழுவதிலிருநது வேலை முடியும் வரையிலானத் தனது செயற்பாடுகளை வர்ணித்திருந்தாள். தான் சுகயீனமுற்ற வேளையில் வெளியில் செல்ல அனுமதி கேட்ட போது அதில் அக்கறை காட்டாத சுப்பவைசர், அவள் அன்றைய உற்பத்தியில் அடையவேண்டிய இலக்கை அடைந்துள்ளாரா என்பதில் குறியாகவிருந்ததாகவும், தான் பலமுறை கேட்டபின்பு, சிறிது நேரம் ஓய்வறைக்கு அனுப்பப்பட்டதாகவும், தனது இறப்பு ஸ்டார்காமென்டில் தான் ஒருநாள் நிகழுமெனவும் தெரிவித்திருந்தாள். பல தேசிய சர்வதேச அமைப்புகளின் பிரச்சார நடவடிக்கைகளின் விளைவாக, அவர் வேலையில்லாமல் இருந்த நாட்களிற்கான சம்பளத்துடன் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார். வேலை செய்யும் போது நிகழும் விபத்துகளிற்கான நஸ்டஈடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. இத்தகைய விபத்துகளால் மரணித்தப் பெண்களும் இருக்கின்றார்கள்.

அபிவிருத்தியடைந்து வரும் எல்லா நாடுகளிலும் திறந்த பொருளாதாரச் சந்தையால் பெண்கள் குறைந்த கூலிக்காக எந்தவித அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் அற்ற நிலையில் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். உலகின் அதிகூடிய கைத் தொலைபேசிகளை உற்பத்திச் செய்யும் நொக்கியா நிறுவனத்தினர் தென்னிந்தியாவில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் அசெமப்லியில் வேலைசெய்து கொண்டிருக்கும் போது கொன்வே பெல்ட்டில் கழுத்து அகப்பட்டு 22 வயதான அம்பிகா என்ற பெண்; மரணமடைந்தது அறிந்திருப்பீர்கள். இரவு வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது இயந்திரக் கோளாறால் அவர்களது convey belt ஸ்தம்பிதமடைந்து நின்ற நிலையில் அவள் தலையைவிட்டு திருத்தமுயற்சித்திருக்கிறார். தொழிநுட்பவியலாளார்கள் வந்து திருத்துவதானால் 10- 15 நிமிடங்கள் உற்பத்தி ஸ்தம்பிதம் அடைவதால், இத்தகைய கோளாறுகளை இவர்களாலேயே சரிபார்க்கும்படி பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.; இவர் கழுத்தை உள்விட்ட வேளையில் மீண்டும் convey belt வேலை செய்ய ஆரம்பித்ததில் இவரது கழுத்து அகப்பட்டுக் கொண்டது. சகதொழிலாளர்கள் எவ்வளவு கேட்டும், உயர்அதிகாரிகள் பிரதான அபாயப் பட்டனை அமர்த்தி உற்பத்தியை நிறுத்த விரும்பாததால் அந்த அப்பாவிப் பெண் மரணிக்க வேண்டியிருந்தது. சிறிபெரம்பத்தூரில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் 7000 தொழிலாளர்களில் 70 வீதமானவர்கள் பெண்கள். இவர்களின் மாதச் சம்பளம் 8 500 இந்திய ரூபாய்கள் ஆகும்.

இலங்கை, இந்தியா நாடுகளிலும் பார்க்க இன்னும் குறைந்த வரிச்சலுகைகளைச் செலுத்தி குறைகூலிக்காகப் பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக பல கம்பனிகளின் இலங்கையிலுள்ள தொழிற்சாலைகளை மூடிவிட்டு ஆபிரிக்காவிற்குப் படையெடுத்தனர். இவ்வாறு 40க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கிட்டத்தட்ட 50 000 பெண்கள் எந்தச் சலுகைகளும் வழங்கப்படாது, வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

மிகவும் பிரசித்தி பெற்ற வெளிநாட்டு விற்பனை நிறுவனங்களான Marx and Spencer, GERRGE, WAL-Markt, United colors of Beneton, GAP போன்ற இன்னும் பலவற்றிக்கு ஆடைகளைத் தயாரிக்கும் Tristar நிறுவனம்; தனது தொழிற்சாலைகளை ஆபிரிக்காவிற்குக் கொண்டுசென்றது. 2009 இலங்கையில் யுத்தம் நிறைவிற்கு வந்தபின்பு மீன்டும் இலங்கையில் தனது கிளைகளை விஸ்தரிக்கத் தொடங்கியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்பலகவவில் பெரியளவில் ஆடைத் தொழிற்சாலையொன்றைத் திறந்துள்ளது. இதில் 10 000 பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு, அமெரிக்க இங்கிலாந்து நாடுகளிலுள்ள கம்பனிகளிற்காக குழந்தைகளிற்கான ஆடைகளை உற்பத்திசெய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன. புனருத்தாரண முகாம்களிலிருந்து 400 முன்னாள் போராளிப் பெண்கள் சப்பிரகமுவவிலுள்ள த்ரிஸ்டாரின் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இன்னும் முன்னாள் பெண்போராளிகளை வேலைக்கு அமர்த்தத் தயார் என ட்ரிஸ்டார் நிறுவனம் தெரிவித்திருந்தது.
வவுனியாவிலிருந்தும் , மலையகத்திலிருந்தும் தமிழ்ப்பெண்களும் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்த சிறுமிகளும் (இதில் 13 வயதுச்சிறுமிகளும் அடங்குவர்), பெண்களும் கடத்தப்பட்டு கட்டுநாயக்கா நிட்டம்புவவிலுள்ள கிறிஸ்டல் மார்டின்பிறைவட் லிமிடட்டிலும், வத்தலவிலுள்ள டைமெக்சிலும் கட்டாய வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும், இவர்கள் கூடிய நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதோடு, குறைந்த சம்பளத்தையும் பெறுகின்றார்கள் என்றும் இவர்களிற்கு சிங்களத் தொழிலாளர்களிலிருந்து மாறுபட்ட யுனிபோர்ம்கள் கொடுக்கப்பட்டு அவர்கள் தனியாகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதிகளிலிருந்து வாகனங்களில் வேலை தொடங்கும் நேரத்திற்குக் கொண்டுவரப்பட்டு, வேலை முடிந்தபின்பு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், சிங்களச் சக தொழிலாளர்கள் இவர்களுடன் தொடர்பு கொள்வது ஒழுங்குவிதிமுறையாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டுள்ளதெனவும், இந்நடவடிக்கை தொழிற்சங்க ரீதியான வேலைகளிற்கு தடையாக உள்ளதெனவும் ரோகினி கென்ஸமன் Dissenting dialogues ல் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யுத்ததால் பாதிப்புக்குள்ளான இப்பெண்கள் இனரீதியானதும் , பால் ரீதியானதுமான ஒடுக்குமுறைகளைச் சந்திக்கும் அதேவேளை, இலங்கை அரசு இவர்களது உழைப்புச்சக்தியையும் சுரண்டலிற்கு உட்படுத்துகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். மகிந்த அரசு தனது இனவாதக் கொள்கையுடன் திறந்த பொருளாதாரக் கொள்கையையும் இணைத்து செயல்படுத்துகின்றது.
மலையகப் பெண்களைப் பொறுத்தவரையில் இவர்கள் வறுமைக் கோட்டிற்குள் கீழ் எந்தவித அடிப்படை உரிமைகளுமின்றி வாழ்கிறார்கள். ஒரு மலையகப் பெண்; காலையில் துயிலெழுவதிலிருந்து இரவு துயில் கொள்ளும்வரை இரட்டிப்பான சுமையை சுமக்க வேண்டியுள்ளது. வேலைக்குப் போகமுன் வீட்டில் கணவன் குழந்தைகளின் வேலைகளைப் பார்த்துவிட்டு வேலைக்குச் செல்லவேண்டியுள்ளது;. இவர்கள் அதிக தூரம் நடந்து மலையேற வேண்டியிருப்பதால் இவர்கள் முன்கூட்டியே தமது பயணத்தைத் தொடரவேண்டியவர்களாகவுள்ளனர். அங்கும் அவர்களுக்குரிய ஓய்வு, சுகாதாரம், போன்ற அடிப்படை உரிமைகள் கூட கிடைப்பதில்லை. இவர்கள் கொய்யும் கொழுந்துகளின் அடிப்படையில் தான் இவர்களிற்கு ஆண்களை விட குறைந்த ஊதியம் கிடைக்கின்றது.

ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில் வேலையில் ஈடுபடுத்தப்படும் போது , அவர்களது சுகாதாரம் கருத்தில் எடுக்கப்படுவதில்லை. சுகாதார ரீதியாக ஆபத்தான தொழில்களை விளிம்புநிலையில் உள்ள மக்களே பெரும்பாலும் செய்வதால் இதைப்பற்றி ஆதிக்கச்சக்திகள் அக்கறைபடுவதில்லை. தெருக்களையும் , மலசலக்கூடங்களையும் கையுறைகளோ, உபகரணங்களோ இன்றியே அவர்கள் துப்பரவு செய்யவேண்டியுள்ளது. இந்தியாவில் தமது கைகளால் மலம் அள்ள மாட்டோமெனத் தலித் பெண்கள் போராட்டங்களை நடாத்திவருகிறார்கள்.

இச்சமூகக் கட்டமைப்பால் விளிம்புநிலையில் இருக்கும் பெண்கள் மத, கலாசா, சம்பிரதய விழுமியங்களால் ஒடுக்கப்படுவதோடு, அவர்களின் பொருளாதார நிலைமைகளினால் ஏற்படக்கூடிய வறுமையால் பலமடங்கான சுரண்டலிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டு வாழ்வாதாரங்களைச் சீர் செய்து கொள்ளும் முனைப்பில் அவர்கள் மீண்டும் மீண்டும் முதலாளித்துவர்க்கத்தின் பொறியில் சிக்குண்டுத் தவிக்கின்றார்கள். வறுமையின் நிமித்தம் மத்திய கிழக்குநாடுகளிற்குச் செல்லும் பெண்களினதும், மலையகத்திலிருந்து உள்நாட்டிலேயே தனவந்தர்களின் வீடுகளில் பணிப்பெண்களும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவ்வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படும் பெண்களின் போராட்டங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நடாத்தபடவேண்டியிருக்கும். இவர்களின் கைகளில் தான் ஆதிக்கக் கதவுகளைத் திறக்கும் திறப்பு உள்ளதென்பதே உண்மை.

0 commentaires :

Post a Comment