2010 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 195,112 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
இத் தொகையை சென்ற வருட பரீட்சார்த்திகளோடு ஒப்பிடும் போது 10.28 சத வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர்.
சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில பிரதேசங்களில் மாணவர்கள் அதிகாலையில் சென்று பாடசாலைகளில் ஆர்வத்துடன் கல்வி பயின்றதை காணக் கூடியதாக இருந்தது.
கஷ்டப் பிரதேசங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அதிகாலையில் அழைத்துச் சென்று மாலை 6 மணிக்கு பாடசாலையை விட்டு அழைத்து வந்த நிலைமையும் காணப்பட்டது. இதன் மூலமே இவ்வருடம் சிறந்த பெறுபேற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
வழமையாக நாங்கள் வெளியிடும் பரீட்சை பெறுபேறுகளை 3 வார காலத்திற்கு முன்னதாக வெளியிட்டுள்ளோம். இதற்கு உதவியாக பரீட்சை திணைக்களம் உட்பட பலரும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை பார்க்கின்றபோது இம்முறை 3059 மாணவர்கள் சகல பாடங்களிலும் “ஏ” தர சித்திகளை பெற்றுள்ளனர்.
கணித பாடத்தில் 61.61 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 59.80 சதவீதமானோரும், ஆங்கில பாடத்தில் 41.41 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே பெளத்த சமயத்தில் 81 வீதமானோரும், இந்து சமயத்தில் 90.2 சதவீத மானோரும் இஸ்லாம் பாடத்தில் 91.65 சதவீதமானோரும் இம்முறை சித்தியடைந்துள்ளனர்.
முதன் மொழிப் பாடங்களான சிங்களத்தில் 82.89 சதவீதமானோரும், தமிழ் மொழியில் 80.65 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர்.
இம்முறை நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தமாக 310,642 மாணவர்கள் தோற்றினர். இவர்களில் 14,961 மாணவர்கள் சகல பாடங்களிலும் சித்தியடையவில்லை.
பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான இறுதித் திகதி ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியாகும். விண்ணப்பதாரிகள் அதற்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி பரீட்சைகள் ஆணையாளர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு மாவட்டம் மற்றும் கொழும்பு ஜயவர்த்தனபுரயிலுள்ள பாடசாலைகள் இன்று நேரடியாக சென்று பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேவேளை, ஏனைய 8000 பாடசாலைகளுக்கும் பரீட்சை பெறுபேறுகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment