3/17/2011

234 உள்@ராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல்

234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.
7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள் எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் கடமைகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புக் கடமைகளில் 50 ஆயிரம் பொலிஸாரும் 20 ஆயிரம் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களும் பொலிஸாரும் நேற்று காலை முதல் தமக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று கடமைகளை பொறுப்பேற்றனர்.
வாக்குப் பெட்டிகளும் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தலை முன்னிட்டு கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்கள் தவிர்ந்த சகல பாடசாலைகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.
தேர்தல் மோசடிகள், வன்முறைகள் என்பவற்றைத் தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல் செயலகம் கூறியது. வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வீதிகளில் சுமார் 500 வீதித் தடைகள் இடப்பட்டுள்ளதோடு மோசடி இடம்பெறலாமென சந்தேகிக்கும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். 33 கலக மடக்கும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏதும் வாக்களிப்பு நிலையங்களில் மோசடி இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலைய வாக்குகள் ரத்துச் செய்யப்பட்டு அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் எச்சரித்துள்ளார். வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் அவர் பொதுமக்களைக் கோரியுள்ளார்.
இதேவேளை, இடம்பெயர்ந்த சுமார் 9 ஆயிரம் வாக்காளர்களுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக விசேட இ. போ. ச. பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. புத்தளம் மற்றும் வவுனியா நலன்புரி முகாம்களில் உள்ள இவர்கள் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவுக்கு வாக்களிக்கச் செல்வதற்காக தேர்தல் ஆணையாளரின் பணிப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாக்குகள் எண்ணும் பணிகள் இன்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதோடு முதலாவது பெறுபேறு இரவு 11.00 மணியளவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கிண்ண போட்டிகள் காரணமாக 335 உள்ளூராட்சி சபைகளில் 301 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்த வேட்பு மனு கோரப்பட்டது. இதில் 452 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு எதிராக பல கட்சிகள் வழக்குத் தாக்கல் செய்ததையடுத்து 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அவற்றுக்கான தேர்தல் பின்னர் நடைபெறும்
ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக காலை வேளையிலேயே வாக் குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் வாக்காளர்களிடம் நேற்று வேண்டுகோள் விடுத்தனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணையாளரும் பொலிஸாரும் எடுத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனால், தங்களது பிர தேசத்திற்கான மக்கள் பிரதிநிதியைத் தெரிவு செய்வதற்காக காலையிலேயே வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறும் அவர்கள் குறிப்பிட்டனர். இத்தேர்தலில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர்கள் கூறினர்.
கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இச்செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த்; இன்று ஐ.தே.க. வுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை. அவர்கள் பிளவுபட்டுள்ளார்கள். தலைவர் இல்லாத ஒரு கட்சி பேதங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் உள்ளாகியுள்ளது. அதனால் அவர்களுக்கு எவரும் வாக்களிக்க மாட்டார்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் போன்ற ஒரு வலுவான தலைவருடன் போட்டி போட முடியாது என்பதை உணர்ந்த ரவி கருணாநாயக்கா ஐ.தே.க. வுக்கு தலைவர்கள் சபை அமைக்கப்பட வேண்டிய யோசனையை முன்வைத்துள்ளார். வரலாற்றில் இப்படியான தலைவர்கள் சபையில் இருந்தது கிடையாது.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன உரையாற்றுகையில், வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்களை சமர்ப்பித்து வாக்களிக்க முடியும். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தோல்வியுற்ற உள்ளூராட்சி மன்றங்களிலும் இம்முறை ஐ.ம.சு. முன்னணி வெற்றி பெறுவது உறுதியான விடயம்.
மக்கள் விடுதலை முன்னணி இன்று நள்ளிரவுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடவே நேரிடும். அப்படியான தோல்வியை அவர்கள் சந்திப்பார்கள். இப்படியான தோல்வியே ஐ.தே.க. வுக்கும் கிடைக்கும் என்றார்.
மேல் மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உரையாற்று கையில்; தலைமை இல்லாத நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ள ஐ.தே.கவுடன் இணைந்து தமது எதிர்காலத்தை சீரழித்துக் கொள்ள நாட்டு மக்கள் தயாரில்லை என்றார்..

0 commentaires :

Post a Comment