3/19/2011

234 சபைகளில் 205 அரசு வசம் தமிழரசுக்கட்சி 12 சபைகளை கைப்பற்றியது 4 சபைகளை மு.கா. பெற்றது ஐ.ம.சு.மு. அமோக வெற்றி கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி 9 சபைகளில் தப்பிப் பிழைப்பு

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு, அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு, முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்கு, கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் நான்கு சபைகளை மட்டுமே வெல்லமுடிந்தபோதும், வடக்கு, கிழக்குக்கு வெளியில் முதற்தடவையாக போட்டியிட்ட பல சபைகளில் உறுப்பினர்களை வென்றது.
தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த இரு சபைகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு, மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையையும், சுயேட்சைக் குழு-1 பல்லேபொல பிரதேச சபையையும் கைப்பற்றியது விசேட அம்சங்களாகும்.
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி 33 இலட்சத்தி 84 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 55.65வீதமாகும். ஐ.தே.க. 20 இலட்சத்து 32 ஆயிரம் வாக்குகளையும் தமிழரசுக் கட்சி 70 ஆயிரம் வாக்குகளையும் பெற்றன. அதிகமான உள்ளூராட்சி சபைகளை ஐ.ம.சு.மு. பாரிய வாக்குவித்தியாசத்தில் கைப்பற்றியிருந்தது.
ஆட்சி மாற்றத்திற்கு முதற்படியாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதாக வீரவசனம் பேசிய ஐ.தே.க.வினால் பண்டாரவளை மாநகரசபை, குளியாப்பிட்டிய, நகரசபை, கம்பொள நகரசபை, கடுகண்ணாவ நகரசபை, களுத்துறை நகரசபை அடங்கலான ஒன்பது உள்ளூராட்சி சபைகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. ஐ.ம.சு.மு.ஐ விட 725 வாக்கு வித்தியாசத்தில் ஐ. தே. க. கம்பொளை நகர சபையைக் கைநழுவியது. பண்டாரவளை மாநகரசபையும் 154 வாக்குகளினாலே ஐ.ம.சு.மு.க்கு கைமாறியது. 20 வருடங்களின் பின்னர் கதிர்காமம் பிரதேச சபையை ஐ.ம.சு.மு.யிடம் ஐ.தே.க. பறிகொடுத்தது முக்கிய விடயமாகும்.
வத்தளை மாபோல நகரசபை, வத்தளை பிரதேச சபை, பேலியாகொட நகர சபை, பாணந்துரை நகரசபை, ஹொரண பிரதேசசபை அடங்கலான 18 உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க. பரிதாபமாக இழந்தது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலிருந்த காத்தான்குடி நகரசபையும், ஏறாவூர் நகரசபையும் இம்முறை ஐ.ம.சு.மு. வின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையையும் ஐ.ம.சு.மு.யே வென்றது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடந்த 3 உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றியது. 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐ.ம.சு.மு. வென்றது.
அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த அக்கரைப்பற்று மாநகரசபையையும், பிரதேச சபையையும் இம்முறை தக்கவைத்துக்கொண்டன. தேசிய காங்கிரசுக்குப் போட்டியாக களமிறங்கிய முஸ்லிம் காங்கிரசினால் தலா ஒவ்வொரு ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்தது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 12 சபைகளைக் கைப்பற்றியது. வவுனியாவில் தேர்தல் நடைபெற்ற 5 உள்ளூராட்சி சபைகளில் நான்கையும் மன்னாரில் 5 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 4 சபைகளையும் தமிழரசுக் கட்சியே கைப்பற்றியது. திருகோணமலை மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளில் திருமலை நகரசபையையும், வெருகல் பிரதேச சபையையும் மட்டுமே தமிழரசுக் கட்சியால் வெல்ல முடிந்தது. ஏனைய ஏழு சபைகளும் ஐ.ம.சு.மு. வினால் வெற்றியீட்டப்பட்டன.
மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில் முசலி பிரதேச சபையை மட்டுமே ஐ.ம.சு.மு.யினால் கைப்பற்ற முடிந்ததோடு தமிழரசுக் கட்சி ஏனைய சபைகளை தனதாக்கிக் கொண்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை தெற்குப் பிரதேச சபைக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது. பிரஜைகள் முன்னணி இந்த பிரதேச சபையை கைப்பற்றும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டபோதும், அதனால் ஒரு ஆசனத்தைக்கூட அதிகரிக்க முடியவில்லை. பிரஜைகள் முன்னணி 56 வாக்குகளை மட்டுமே பெற்றதோடு ஐ.தே.க. மூன்று வாக்குகளைப் பெற்றது.
2006 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான சபைகளில் குறைந்த பட்சம் ஒரு ஆசனத்தையாவது பெற்ற ஜே.வி.பி.யினால் இம்முறை வெறும் கையுடனேயே திரும்ப நேரிட்டது. சில உள்ளூராட்சி சபைகளில் ஜே.வி.பி.யை ஓரம்கட்டிவிட்டு சுயேட்சைக் குழுக்கள் ஆசனம் ஒன்றைக் கைப்பற்றின. வெலிகம நகரசபை, கிரிந்த புகுல்வெல்ல பிரதேச சபை, நுவரெலியா நகரசபை, திருகோணமலை பிரதேசசபை, கம்பளை நகரசபை, கெப்பட்டிகொல்லாவ நகரசபை, கடுகண்ணாவ நகரசபை, மாத்தறை பிரதேசசபை, பிபில பிரதேசசபை, ஹொரண நகரசபை, களுத்துறை நகரசபை, ரம்பேவ பிரதேசசபை, சீதாவக நகரசபை, மீகஹகிவுல பிரதேசசபை, கொடபொல பிரதேசசபை, ரத்தோட்டை பிரதேசசபை, நாமல்ஓய பிரதேசசபை தும்பன பிரதேசசபை, வெலிகம பிரதேசசபை, பண்ணால பிரதேசசபை, என §ஐ.வி.பி.யின் ஒரு ஆசனமும் பறிபோன உள்ளூராட்சி சபைகள் ஏராளம். சில இடங்களில் இரு உறுப்பினர் தொகை ஒன்றாகக் குறைந்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், லிபரல் கட்சி போன்ற சிறு கட்சிகளும் சில சபைகளில் ஒரு ஆசனம் வீதம் கைப்பற்றியிருந்தன.
இறுதி முடிவின்படி ஐ.ம.சு.மு. 1813 உறுப்பினர்களையும். ஐ.தே.க. 884 உறுப்பினர்களையும், ஜே.வி.பி. 57 உறுப்பினர்களையும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment