3/30/2011

கடாபியில்லாத லிபியாவை கட்டியெழுப்ப லண்டனில் மாநாடு * 07 அரபு நாடுகள் உட்பட 35 நாடுகள் பங்கேற்பு; * அகதிகளைத் தடுக்க இத்தாலியில் மனிதச் சங்கிலி

லிபியாவுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ பொறுப்பேற்றதையடுத்து ஆகாயம், தரைமார்க்கமான தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. முஅம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர் எவ்வகையான வேலைகளை முன்னெடுப்பது என்பதை ஆராயும் கூட்டம் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
இதில் 35 நாடுகள் பங்கேற்றன. கடாபியில்லாத லிபியாவை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்புவது அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, பொதுமக்கள் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் போன்ற விடயங்களே இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. இதில் ஏழு அரபு நாடுகளும் பங்கேற்றன.
லண்டன் மாநாடு லிபியாவில் அரசியல் அதிகாரங்களை பரவலாக்க உதவும் என நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோஸி குறிப்பிட்டார். முஅம்மர் கடாபிக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் தீவிரமாக்கும் போது ஈராக்கில் இடம்பெற்றவை போன்ற பாரிய அழிவுகள் இடம்பெறலாம். குறிப்பாக அமெரிக்க விமானங்களின் குண்டுத் தாக்குதல்களால் பெருமளவான உயிரிழப்புகள் ஏற்படலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.
இவ்வாறு உள்ள நிலையில் முஅம்மர் கடாபியின் மகன் கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் இணைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை இதுவரை ஊர்ஜிதம் செய்ய முடியாதுள்ளது. ஜனநாயகத்தை நோக்கி வீறு நடை போடுமாறு கிளர்ச்சியாளர்களை லண்டனில் கூடிய மாநாடு கேட்டுக்கொண்டது. லிபியாவிலிருந்து தப்பி ஓடி வரும் அதிகமானோர் இத்தாலிக்குள் நுழைவதால் அந்நாட்டு அரசாங்கம் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. லிபிய அகதிகள் இத்தாலிக்குள் நுழைவதை தடுக்க இத்தாலியர்கள் எல்லையில் மனிதச் சங்கிலிகளாக ஒன்றிணைந்து நின்றனர்.

0 commentaires :

Post a Comment