பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோவின் படுகொலை தொடர்பில் விசாரித்துவருகின்ற அந்நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது பிடியாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நாளன்று பேநசீர் புட்டோ நடத்திய இறுதிப் பொதுக்கூட்டம் |
டிசம்பர் 2007ல் பேநசீர் எதிராக நடந்த துப்பாக்கி மற்றும் குண்டுத் தாக்குதலுக்கு முஷாரஃப்பும் மறைமுகமாக பொறுப்புதாரி ஆவார் என்று சட்ட நடவடிக்கை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
பேநசீரின் கணவரான இந்நாள் அதிபர், எல்லா உண்மைகளையும் கண்டறிந்து தனது மனைவியின் கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேனென சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் முஷாரஃப்புக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயுததாரிகள் பேநசீர் உயிரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்கள் என்ற விபரம் தெரிந்திருந்தும், அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்தர முஷாரஃப் தவறிவிட்டார் என சட்டநடவடிக்கை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தவிர புட்டோ அம்மையாருக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர முஷாரஃப் தவறிவிட்டார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முஷாரஃப் மறுப்பு
நாட்டை விட்டு தானாக வெளியேறி பிரிட்டனில் வாழ்ந்து வரும் முஷாரஃப், பேநசீர் படுகொலையில் தனக்கு மறைமுகமாக சம்பந்தம் இருக்கிறது என்று கூறப்படுவதை தொடர்ந்தும் மறுத்துவருகிறார்.
பாகிஸ்தானில் நடந்துவரும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க இவர் மறுத்துவிட்டார்.
ஐ.நா. விசாரணை
ஆனால் பேநசீர் கொலை தொடர்பில் ஐ.நா. மன்றம் தன் பங்கில் ஒரு விசாரணையை நடத்தி சென்ற வருடம் அதன் முடிவுகளை வெளியிட்டிருந்தது.
முஷாரஃப் அரசாங்கத்தை இது தொடர்பில் ஐ.நா.வும் விமர்சித்திருந்தது.
ஆனால் இது எல்லாமே அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் என்று கூறி முஷாரஃப் இவற்றை நிராகரித்துவருகிறார்.
நாடு திரும்பி அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடக்கக்கூடிய தேர்தல்களில் போட்டியிடவேண்டும் என்பதில் அவர் மும்முரமாய் இருக்கிறார்.
அந்த விஷயத்தை தற்போதைய பிடியாணை மேலும் சிக்கலாக்கும் என்பதில் ஐயமில்லை.
0 commentaires :
Post a Comment