லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், யெமன் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை கோரி மக்கள் போராட்டம் நடத்துவதால், அரபு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் இராணுவம் தாக்கியதில் 84 பேர் பலியாகி உள்ளனர்.
துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக நடந்து வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த இரண்டு நாடுகளிலும் ஜனாதிபதிகள் பதவி விலகி ஜனநாயக ஆட்சிக்கு வழி விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மற்ற அரபு நாடுகளிலும் இந்த கிளர்ச்சி பரவி உள்ளது.
அல்ஜீரியா, பஹ்ரைன், லிபியா, ஜோர்டான், யெமன் ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக லிபியாவில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது.
அங்கு ஜனாதிபதியாக இருக்கும் முவம்மர் கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். தற்போது 68 வயதாகும் அவர் கடந்த 1969ம் ஆண்டு முதல் லிபிய ஜனாதிபதியாக இருந்துவருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாகி உள்ள போராட்டம் மேற்கு பகுதிகளிலும் பரவி உள்ளன. லிபியா தலைநகர் திரிபொலியில் கடந்த சனிக்கிழமை இரவில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
ஆனால் போராட்டத்தை அடக்க இராணுவத்தை கடாபி ஏவி விட்டுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் அரசு ஆதரவு போராட்டத்தையும் ஊக்குவித்து வருகிறார். கடாபிக்கு உதவியாக அவருடைய மகனும் கால்பந்து வீரருமான அல்-சாதி களம் இறங்கியுள்ளார்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் பரவாமல் தடுப்பதற்காக நேற்று அதிகாலை 2 மணி முதல் இணையதள சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது.
தலைநகரில் போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள், நீதிபதிகள் ஆகியோர் தாக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் நடந்த போராட்டத்தில் இதுவரை 84 பேர் வரை பலியாகி இருப்பதாக அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுபோல பஹ்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தெருக்களில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மன்னர் ஹமாத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துமாறு மன்னரை ஒபாமா கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்க ளுடன் பேச்சு நடத்த ஹமாத் முன்வந்தார். அதற்காக தனது மகனும் இராணுவ துணை தலைமை தளபதியுமான சல்மான ஹமாத்தை அனுப்பினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர ஷியா பிரிவு எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
தெருக்களில் இராணுவத்தை குவித்து வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் பஹ்ரைனில் போராட்டம் தொடருகிறது.
ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தலைநகர் பனாமாவில் போராட்டம் தீவிரமாகி உள்ளது. சுன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் ஹமாத்தை பதவி விலகச் செய்வதில் உறுதியாக இருக்கின்றனர். இது போன்று மற்றொரு அரபு நாடான ஜோர்டானிலும் போராட்டம் நடைபெறுகிறது.
ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி தலைநகர் அம்மானில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடந்தது. அப்போது அரசு ஆதரவாளர் கும்பல் ஆயுதங்களுடன் வந்து பேரணியில் சென்றவர்களை சரமாரியாக தாக்கியது.
இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர். ஏற்கனவே ஜோர்டான் அமைச்சர் சபையை மன்னர் அப்துல்லா கலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யெமன் நாட்டிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. தலைநகர் சானாவில் நேற்று முன்தினம் நடந்த பேரணி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
துறைமுக நகரான ஏடன் நகரில் இரண்டு அரசு கட்டடங்கள், ஒரு பொலிஸ் நிலையம் ஆகியவற்றை 7 ஆயிரம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தீ வைத்தனர்.
அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி மக்கள் போராடுவதால், அரபு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment