இந்திய முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்று சிபிஐயினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் காரணமாக அவர் கடந்த நவம்பரில் தனது பதவியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார். அந்த அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கை ஆணையர் தெரிவித்திருந்தார். இந்த ஊழல் குற்றச்சாட்டு காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி அரசாங்கத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் பொது வாழ்க்கையில் ஊழல் குறித்து கடுமையான நடவடிக்கைகள் தேவை என்ற கோரிக்கைகளுக்கும் அது வழி வகுத்துள்ளது. எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ராசா மறுத்துவருகிறார். "அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை"- மஹேஷ் ரங்கராஜன் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கைதானது முன்பே நடந்திருக்க வேண்டியது என்கிறார் அரசியல் ஆய்வாளர் மஹேஷ் ரங்கராஜன். ஆனால் இந்த கைது நடவடிக்கையால் மட்டும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கோரி வரும், கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையைக் கைவிடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார். தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட மஹேஷ் ரங்கராஜன், இந்த விடயத்தில் செவ்வாய்க்கிழமை, தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபலிடம் நீதிபதி சிவராஜ் பாட்டில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது; இந்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட மூவரின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தன என்றார். இதே சமயத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், ராசா விவகாரம் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு பிரச்சினையாக இருந்திருக்கும், அதைக் குறைப்பதற்கு இந்தக் கைது உதவக்கூடும் என்றும் இது ஒரு அரசியல் ரீதியான சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை போலத் தெரிகிறது என்றும் மஹேஷ் ரங்கராஜன் கருத்து வெளியிடுகிறார். ஆனால் சிபிஐ நடத்திய இது போன்ற அரசியல் வழக்குகளில் பெரிய தீர்வு ஒன்றும் கிடைத்துவிடவில்லை எனவே இதிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார். மேலும் வரும் பிப்ரவரி 10ந்தேதி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகக் காட்டுவதற்கும் இந்தக் கைது நடவடிக்கை உதவும் என்ற கருத்துடனும் மஹேஷ் உடன்பட்டார். ஆனால் இது போன்ற ஒரு பெரிய முடிவு எடுக்கும் போது, அது வெறும் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர்களால் மட்டும் எடுக்கப்பட்டிருக்க முடியாது. அரசின் மற்ற மூத்த அமைச்சர்களும் இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, ராசா மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று கூறுவது நம்புவதற்குக் கடினம் என்றும் தமிழோசையிடம் கூறினார் மஹேஷ் ரங்கராஜன் |
2/03/2011
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment