2/07/2011

எகிப்தின் அரசியல் நெருக்கடி முடிவடையும் அறிகுறி இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் பேசுவதற்கு தயார்

எகிப்தின் சுமார் இரண்டு வார காலம் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் பெரும் மக்கள் எதிர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு விலகுவது குறித்து ஆர்வம் காட்டாமல் இருப்பதாக அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
நான் பதவியில் இருந்து விலகுவேன் என்று ஹொஸ்னி முபாரக் அறிவித்திருந்த போதிலும் அதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகரில் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பதின் மூன்றாவது நாளாக காகிர் சதுக்கத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கெய்ரோவில் உள்ள அல்ஜkரா தொலைக்காட்சியின் நிருபர் கருத்துத் தெரிவிக்கையில், நேற்று ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அவை ஓரளவு அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், அங்கு ஜனாதிபதியை ஆதரிக்கும் குழுவினருக்கும் ஜனாதிபதிக்கு எதிரான குழுவினருக்கும் இடையே மோதல்கள் எற்படாத வகையில் இராணுவம் இரு சாராரையும் பிரித்து நடுவில் மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதேவேளையில் எகிப்தில் எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வொன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள எதிர்க் கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தாங்கள் அரசாங்கத்துடன் சமரச பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இவ்வியக்கம் முபாரக் பதவியில் இருந்து இறங்கும் வரையில் தாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக இல்லை என்று அறிவித்திருந்தது. நேற்று இவ்வியக்கத்தின் கொள்கையில் சிறு மாற்றம் ஏற்பட்டிருப்பது எகிப்தில் மீண்டும் சகஜ நிலை ஏற்படுவதற்கான ஒரு நல்ல நிலையாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தின் உதவி ஜனாதிபதி உமர் சுலைமானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வை ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருக்கின்றது.
ஆனால் தாம் சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் ஹொஸ்னி முபாரக் பதவியை விட்டு விலக வேண்டுமென்ற கொள்கையில் அவ்வியக்கம் பிடிவாதமாக இருப்பதாக வும் அறிவிக்கப்படுகிறது.
ஒருவாரத்துக்கும் மேலாக மூடப்பட்டி ருந்த வங்கிகள் நேற்று மீண்டும் இயங்க ஆரம்பித்தன. தமது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்து வதற்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி டிக்செனி, எகிப்திய ஜனாதிபதிக்குத் தனது பூரண ஆதரவை வழங்கியுள்ளார்.
முபாரக் ஒரு நல்ல மனிதர் மட்டுமல்ல. அவர் அமெரிக்காவின் நண்பரும் கூட என்று கூறியுள்ள டிக்செனி, முபாரக் நாட்டின், தலைவராக இருக்கும் விதியை மக்களே தீர்மானிப்பர் என்றார்.
அதிகளவிலான இஸ்லாமியரை எதிராளிகளாகக் கொண்டிருக்கும் மிகப்பெரிய அரபு தேசமாகிய எகிப்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும் என அமெரிக்கா அஞ்சுகிறது. ஆதலால் மெதுவான மாற்றமொன்றை வலியுறுத்தி வருகிறது

0 commentaires :

Post a Comment