2/18/2011

சுயஸ் கால்வாயில் ஈரானிய போர்க் கப்பல்கள்; ; பயணத்தை தடை செய்தது எகிப்து


  சுயஸ் கால்வாயை கடக்கவிருந்த இரு ஈரானிய கப்பல்களையும் எகிப்து நேற்று தடுத்தது. செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் நீர்ப்பரப்பே சுயஸ் கால்வாயாகும். ஏலவே, இரு ஈரானியப் போர்க் கப்பல்கள் சுயஸ் கால்வாயைக் கடக்கவிருக்கின்றனவென இஸ்ரேல் தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த இரு பக்கல்களின் பயணமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுயஸ்கால்வாய் அதிகாரசபை தெரிவித்திருந்தது.
அல்வான்ட், கார்க் என்ற அவ்விரு கப்பல்களும் சவூதியின் ஜெட்டா துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் போதே அடையாளங்காணப்பட்டன.
சுயஸ் கால்வாயினூடாக பயணிக்கும் கப்பல்களின் பட்டியலில் தற்போதைக்கு எந்த ஒரு ஈரானியக் கப்பலும் இல்லை என தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை சுயஸ்கால்வாயினூடான கப்பல்களின் போக்குவரத்தை தாமும் கண்காணித்து வருவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
1979ம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக 2 ஈரானியப் போர்க் கப்பல்கள் சுயஸ் கால்வாயை அண்மித்துள்ளதாக இஸ்ரேல் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டது. இது எகிப்தின் புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்கு இராஜதந்திர ரீதியான ஒரு சவாலாகும்.
சுயஸ் கால்வாய் மிகவும் பிரதானமான நீர்ப்போக்குவரத்துப் பாதை என்பதுடன் எகிப்திற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கியமான மூலமுமாகும்.
இஸ்ரேலுடன் சமாதானமாகச் சென்ற முதலாவது அரபு நாடு எகிப்துவாகும். சிரியாவுடன் நல்லுறவை பேணும் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலின் ஆலோசனையின் கீழ் செயற்பட்டு வருகிறது. போர்க்கப்பல்கள் சுயஸ்கால்வாயைக் கடந்து செல்லவேண்டுமாயின் எகிப்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமும் பாதுகாப்பு அமைச்சிடமும் அனுமதி பெறவேண்டும். இந்த நடைமுறை எந்த நாட்டுப் போர்க்கப்பல்களுக்கும் பொருந்தும். ஆனால் அத்தகைய அனுமதிகளை ஈரான் இதுவரை பெறவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
சுயஸ்கால்வாயினூடு மக்கள் சுதந்திரமாகப் பயணிக்கவும் பொருட்களைக் கொண்டு செல்லவும் ஏதுவான வழியை உறுதி செய்யும் நிலைப்பாடு தற்போது எகிப்துக்கு உள்ளது.
அதேசமயம் சுயஸ்கால்வாயில் சுதந்திரமாகப் பயணிக்கும் உரிமை நமக்கும் இருக்கிறது என ஈரானியர்கள் நினைக்கக்கூடும். இத்தகையதோர் நிலைப்பாடானது எகிப்தின் புதிய இராணுவ ஆட்சியாளர்களுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதேவேளை தேசிய ஐக்கியத்துக்காகவும் பொருளாதார மீள் எழுச்சிக்காகவும் மக்கள் தம் ஆர்ப்பாட்ட மனநிலையை விடுத்து வழமைக்குக் திரும்ப வேண்டுமென எகிப்தின் உயர் இராணுவ கவுன்சில் மக்களிடம் கோரியுள்ளது.

0 commentaires :

Post a Comment