2/10/2011

அகோர மழை தணிவு; வடிந்து வருகிறது வெள்ளம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் வீடு திரும்பினர் அகதி முகாம்களும் குறைந்தன


வெள்ள நீர் வடிந்து கொண்டிருப்பதைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கி இருந்த மக்களும் தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
கடந்த மூன்று தினங்களாக கனத்த மழை பெய்வது குறைந்திருப்பதையடுத்தே மக்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரு தினங்களுக்குள் சுமார் 160 முகாம்கள் மூடப்பட்டிருப்பதாகவும், அவற்றில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்குத் திரும்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை லானினா தாக்கம் பலவீனமடைந்துள்ளதால் மழை வீழ்ச்சியும் குறைந்துள்ளது என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர டி சில்வா கூறினார்.
என்றாலும் கிழக்கு, வடக்கு, ஊவா, வட மத்திய மாகாணங்களில் இடையிடையேயும், ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் இடி, மின்னலுடனும் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதையடுத்து 22 குளங்களின் நீர் மட்டம் உரிய அளவை அடைந்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகஸ் தென்ன கூறினார்.
நாட்டில் 59 பிரதான குளங்கள் உள்ளன. அவற்றில் 22 குளங்கள் மாத்திரமே தொடர்ந்தும் வழிவதாகவும், 15 குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாகவும் அவர் கூறினார்.
மட்டு மாவட்டம்



மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்திருந்தவர்கள் தற்போது மழை சற்று ஓய்ந்துள்ளதையடுத்து படிப்படியாக தத்தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
இதையடுத்து நலன்புரி முகாம்களின் எண்ணிக்கை 66 ஆகக் குறைவடைந்துள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 5446 குடும்பங்களைச் சேர்ந்த 19921 பேர் நலன்புரி முகாம்களிலும் 17361 குடும்பங்களைச் சேர்ந்த 70995 பேர் உறவினர், நண்பர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
எனினும் வாகரை, ஓட்டமாவடி, கிரான், வாழைச்சேனை, ஏறாவூர், பட்டிப்பளை மற்றும் வவுணதீவு போன்ற பிரதேசங்களில் குக்கிராமங்கள் மற்றும் உள்ளக வீதிகளில் தொடர்ந்தும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு பிரதான குளங்களான உறுகாமம், நவகிரி ஆகிய குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பிரதிப் பணிப்பாளர் சீனித்தம்பி மோகனராஜா தெரிவித்தார். 18 ஆயிரத்து 600 ஏக்கர் அடி நீரை சேமித்து வைத்திருக்கும் உறுகாமம் குளத்தின் வான் கதவு 8 அடிக்கும், 53 ஆயிரம் ஏக்கர் அடி நீரைச் சேமித்து வைத்திருக்கும் நவகிரி குளத்தின் வான் கதவு 4 அடிக்கும் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மூதூர்



மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களில் மூதூர்நகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில் ஸாபி நகர், ஹைரிய்யா நகர், இருதயபுரம், ஆலிம்நகர், பெரியபால கிராமத்தில் மூழ்கி காணப்பட்ட குடியிருப்புகளிலும் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது.
மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களிலும், உறவினர் இல்லங்களிலும் தங்கியிருக்கும் நிலையில் வெள்ள நீர் குறைந்த பகுதிகளிலுள்ள குடியிருப்புக்களை சுத்தம் செய்து கொடுக்கும் பணியில் பல தொண்டர் அமைப்புக்கள் ஈடுபட்டுள்ளன.

திருமலை



திருகோணமலை மாவட்டத்தில் வெள் ளம் தற்போது வடிந்து சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் இம் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளோரின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.
இம் மாவட்டத்தில் நேற்று காலை சீரான காலநிலை தோன்றி வெயிலாக காணப்பட்டது.
இம் மாவட்டத்தில் பெய்த அடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல வீதிகள் சேதமடைந்து குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றன.
இதனால் இம் மாவட்டத்தில் போக்குவரத்துக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் வெள்ள நீரினால் பாரிய குன்றும் குழிகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இதனால், நாக்காமுனை, குறிஞ்சாக்கேணி, நடுத்தீவு, மயில்தீவு போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்

கடந்த ஒரு வார காலமாக வவுனியாவில் நிலவிய சீரற்ற காலநிலை நீங்கியதினை அடுத்து நகரம் நேற்று (புதன்கிழமை) வழமைக்கு திரும்பியது.
தென்பகுதியிலிருந்து தரை வழி ஊடாக பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
கோதுமை மா, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், நெத்தலி கருவாடு, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொழும்பிலிருந்து லொறிகள் மூலம் வந்து சேர்ந்துள்ளன. உணவுப் பொருட்களுக்கு எந்த தட்டுப்பாடும் ரிதீனியாவில் கிடையாதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 commentaires :

Post a Comment