1/31/2011

கிழக்கில் வாவி மீன்களுக்கு நோய்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு வாவியில் மீன்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு வகை நோய் காரணமாக மக்கள் மீன்களை மறுத்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வாவி மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது வாவி நீர் தன்மையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களால் பிடிக்கப்படும் மீன்களில் பொதுவாக பல இடங்களில் புண்கள் காணப்படுவதாகவும் இதுவே அந்நோய் என்றும் மீனவர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்களில் காணப்படும் இந்நோய் ஒரு வகை பூஞ்சை அல்லது பேக்ட்ரீயாவினால் ஏற்படுவதாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை தலைவர் கலாநிதி பெ.வினோபாபா கூறுகின்றார்.
நீரில் உவர் தன்மை குறைவடைதல் மற்றும் வெப்பநிலை குறைவடைதல் காரணமாக விலங்ககளுக்கு ஏற்படக் கூடிய நீர்பீடணத் தாக்கம் குறைவு இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
மீன்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நோய் காரணமாக வாவி மீன்பிடியை நம்பி வாழும் 12 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மீன் பிடித் துறை உதவிப் பணிப்பாளர் எஸ்.ரி.ஜார்ஜ் கூறுகின்றார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவிகளே
இந்த மீனவர்களுக்கும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்
 

0 commentaires :

Post a Comment