இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஆளும் தரப்பினரின் பங்காளிக் கட்சிகளிலொன்றான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.
இதை அக்கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் பிபிசியிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் மட்டும் தமது கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் தமது கட்சி எடுத்துள்ள தீர்மானம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களிலும் இரு கட்சிகளுக்குமிடையிலான நல்லிணக்கம் தொடரும் என்றும் அவர் கூறுகின்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு ஆசனத்தையும் தனது கட்சி அன்றைய சூழ்நிலை காரணமாக பெற முடியாமல் போனதாக குறிப்பிட்ட அவர், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கனிசமான இடங்களை தமது கட்சி பெறும் என நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அங்கம் வகித்தாலும் எந்தவொரு தமிழ் கட்சியும் தேர்தல் கூட்டு பற்றி தமது கட்சியுடன் பேச்சுவார்தை நடத்தவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment