பாகிஸ்தானில் மத அடிப்படை வாதிகளுக்கு எதிராக புனிதப் போர் தொடங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாkர் பூட்டோ தம்பதியினரின் மகனுமான பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஆளுநர் சல்மான் தசீர் மதத் தீவிரவாதிகளால் அண்மையில் படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் மதத் துவேஷ எதிர்ப்புச் சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி கிறிஸ்தவப் பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை நீக்க வேண்டும் என்பதில் சல்மான் தசீர் உறுதியாக இருந்தார். மேலும் இந்தச் சட்டத்தையும் அடியோடு நீக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தி வந்தார்.
இந்தச் சட்டத்தை நீக்க பாகிஸ்தான் அரசு முன் வந்தது. எனினும் மதத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் அந்தச் சட்டத்தை திரும்பப் பெறும் முடிவை அரசு கைவிட்டது.
எனினும் சர்வதேச நாடுகளின் நெருக்குதலாலும் சம்மான் தசீரின் முயற்சியாலும் கிறிஸ்தவப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. இது மதத் தீவிரவாதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் மதத் தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவரும் தசீரின் பாதுகாவலருமான மும்தாஜி கத்ரி என்பவர் தசீரை படுகொலை செய்தார். பாதுகாவலராலேயே ஆளுநர் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இப் படுகொலையை செய்த கத்ரியை தியாகி என்றும் ஹீரோ என்றும் மதத் தீவிரவாதிகள் போற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தசீருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.
இப்போது லண்டனில் தங்கியுள்ள ஜனாதிபதி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியது: ‘பஞ்சாப் மாகாண ஆளுநரின் படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இதை மதத் தீவிரவாதிகள் கொண்டாடுகின்றனர். இந்த படுகொலையைச் செய்த நபரை மதத் தீவிரவாத அமைப்புகள் ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் தியாகி என்றும் போற்றுகின்றனர்.
இவர்கள் தான் உண்மையான மதத் தீவிரவாதிகள்.
இவர்களைப் போன்றவர்களால் தான் இஸ்லாமிய மதத்தை உலகம் தவறாக பார்க்கிறது. எனவே இது போன்ற மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக புனிதப் போர் தொடங்கப்பட வேண்டும்.
மதத்தின் கொள்கைகள் மீது தாக்குதல் நடத்தி அதன் உண்மையான கோட்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் பங்கம் ஏற்படுத்தி, உலகத்தினர் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் இது போன்ற மதத் துவேஷிகள் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும்” என்றார் பிலாவல் பூட்டோ.
22 வயதாகும் பிலாவல் பூட்டோ லண்டனில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணிச்சலாகப் பேசியுள்ளதை அடுத்து அவர் விரைவில் பாகிஸ்தான் திரும்பி கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்று தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தசீர் மகள் கருத்து:
இதனிடையே கொல்லப்பட்ட தசீரின் மகள் சாரா தசீர் கருத்து தெரிவிக்கையில் “பாகிஸ்தானில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களில் பெரும்பாலானோர் என் தந்தை படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
இதன் மூலம் மதத் தீவிரவாதிகளுக்கு அனைத்து தலைவர்களும் பயந்துபோய் உள்ளனர் என்பது தெளிவாகிறது” என்றார்.
0 commentaires :
Post a Comment