உழவர் திருநாளாம் தைத்திருநாளைக் கொண்டாடுகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களை பரிமாறுவதில் ஆனந்தமடைகின்றேன். தைத்திருநாள் ஒரு உன்னதமான திருநாளாகும். இது உழவர்களின் மகிமையை உலகுக்கு எடுத்தியம்புவதாகவும் அமைகின்றது.
உழவர் திருநாளான தைப்பொங்கலானது உழவர்களுக்கு மாத்திரமின்றி சூரியனுக்கு நன்றி செலுத்தும் தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக இயங்கலுக்கும் உணவு உற்பத்தியிலும் சூரிய பகவானின் பங்களிப்பு அளப்பெரியது. வருடந்தோறும் எமக்கு உணவளிக்கின்ற உழவர்களையும் அதற்கு காரணமான சூரியனைனயும் நன்றியுடன் நினைவு கூர்வது இத்தினத்தின் சிறப்பாகும்.
கடந்த காலங்களை விட இம்முறை எமது மக்கள் தைப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத அளவு இயற்கை சீற்றம் எம்மை ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் வெள்ளப் பெருக்கினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். தங்களது அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்வது சிரமமான காரியமாகவே அவர்களுக்கு உள்ளது.
இவ்வாறான நிலையில் இத் தைத்திருநாளில் இயற்கை அனர்த்தித்தினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற நம் உறவுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதே இன்று இன்றியமையாததாகும். இன்றைய தைத்திருநாளில் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்ற ஒரு குடும்பத்திற்கு உணவளிக்க முடியுமானால் அதனை விட சிறந்ததொரு நற்காரியம் வேறொன்றும் இருக்கப்போவதில்லை.
எனவே இன்றைய தைத்திருநாள் கொண்டாடுகின்ற அனைவரும் இடம்பெயர்ந்து அல்லல்ப்படுகின்ற உறவுகளுக்கு உதவும் உயரிய இலட்சியத்தை இலக்காக கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.
எனவே இத்தைத்திருநாளில் மீண்டும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கிணங்க இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களின் வாழ்விலும் கடந்த கால யுத்த அனர்த்தத்திலிருந்து இன்றும் முழுமையாக மீளாத உறவுகளுக்கும் நல்வழி பிறக்க அனைவரும் கைகோர்த்து செயற்ப்படுமாறும் அழைப்பு விடுக்கின்றேன்.
சி.சந்திரகாந்தன்,
முதலமைச்சர்
முதலமைச்சர்
0 commentaires :
Post a Comment