1/09/2011

முதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு' தம்பிபிரபா, அண்ணனுக்கு சாட்டை இணைந்து செயற்படவும் அழைப்பு

பொதுத் தேர்தலில் நம்பிக்கைத் துரோகம் இழைத்து முதுகில் குத்திய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மனோ கணேசன் மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது வெட்கித் தலைகுனியும் செயலாகுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நலன் கருதி அவர் அரசாங்கத்துடன் இணை ந்து செயற்படுவதே புத்திசாதுரிய மான அரசியலாகுமென்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், ஐ.தே.கவுடன் இணைந்தோ, தனித்தோ மனோ கணேசன் கொழும்பு மாநகர முதல்வராகுவது வெறும் பகற்கனவாகுமென்று குறிப்பிட்ட அவர், அதற்கு ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டாரென்றும் கூறினார்.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஐ.தே. கவுடன் எந்த ஒட்டுறவும் கிடையாதென்று உறுதியாகத் தெரிவித்திருந்த மனோ கணேசன், மீண்டும் ஐ. தே. கவுடன் தேர்தல் கூட்டுச் சேர்ந்து இன்னொரு முறை மூக்குடைபட்ட பின்னரா பாடம்படிக்கப் போகிறாரென்று பிரபா கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார். அரசாங்கத்துடன் இணைந்து மனோ கணேசன் போட்டி யிடுவாராக இருந்தால், அவருக்கான உரிய இடத்தை அரசாங்கம் வழங்குமென்றும் பிரபா கணேசன் சுட்டிக்காட்டினார்.
கடந்த பொதுத் தேர்தலின்போது மனோவுக்குத் தேசியப்பட்டியல் தருவதாகப் பொய் கூறி ஏமாற்றிய ஐக்கிய தேசிய கட்சியுடன் அல்லாமல் பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படுமாறு எனக்குக் கூறினார். அவரே தயாரித்து வழங்கிய கடிதமொன்றை நானே சபாநாயகருக்குக் கையளித்திருக்கிறேன். இவ்வளவும் செய்துவிட்டு அவர் மீண்டும் ரணிலிடம் சரணடையச் சென்றிருப்பது நகைப்புக் கிடமானது” என்று தெரிவித்த பிரபா கணேசன் எம்பி.,
கொழும்பு மாநகர சபைக்குத் தனித்துப் போட்டியிடவும் ஏனைய மாவட்டங்களில் ஐ.தே.க. வின் யானைச் சின்னத்தில் களமிறங்கவும் மனோ கணேசன் முயற்சிக்கிறாரென்று குறிப்பிட்டதுடன், அவருக்கு ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சூடுவைப்பாரென்றும் கூறினார்.

0 commentaires :

Post a Comment