1/31/2011

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து
பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்

வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமால் பெரேரா

30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் எதிர்நோக்கியிருந்த 30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தலை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது நேர்மையான, பாரபட்சமற்ற ஆளுமையின் மூலம் நீக்கி, இன்று நாட்டில் பூரண சமாதானத்தையும் அமைதியையும் மக்களிடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் இந்நாட்டு மக்கள் அனைவரும் சாதி, மத, இன பேதமற்ற முறையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சி செய்யும் இன்னுமொரு பாரிய யுத்தத்தில் இறங்கியிருக்கும் ஜனாதிபதி அவர்களுக்குத் தங்களின் பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்றைய அரசாங்கம், பெரும்பான்மை மக்களின் சமயமாகிய பெளத்தத்திற்கு அளித்துள்ள அதே மதிப்பையும், கெளரவத்தையும் முக்கியத்துவத்தையும் மற்ற மதங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அதுபோன்றே, சிங்கள மொழிக்கு அளிக்கப்படும் மதிப்பும், அந்தஸ்தும் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.
அரசாங்க சேவையில் தமிழ் கற்றறிந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், சிறுபான்மை மக்களுக்கு தமிழ் மொழி மூலம் அரசாங்கத்தின் நிர்வாக சேவையை பெற்றுக் கொடுப்பதில் சில சந்தர்ப்பங்களில் ஆளணி பற்றாக்குறை காரணமாக அசெளகரியமாக இருந்தாலும், வெகுவிரைவில் நாம் தமிழ் மொழியையும் கற்றறிந்தவர்களையே அரசாங்க சேவையில் சேர்த்துக் கொள்ளும் புதிய கொள்கையை நிறைவேற்ற இருக்கிறோம் என்றும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
கடந்த காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்று வாழும் எங்கள் நாட்டின் புலம்பெயர்ந்த தமிழ் மற்றும் சிங்கள, முஸ்லிம் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்பி, இங்கு தங்கள் அமைதியான வாழ்க்கையை தொடர்ந்தும் மேற்கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்காகவும் உழைக்கும் ஜனாதிபதி அவர்களின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதியமைச்சர், இந்த கோரிக் கையை புலம்பெயர்ந்த மக்கள் நிறை வேற்றினால் இந்நாடு சுதந்திரம் பெறு வதற்கு முன்னர் இருந்த யுகத்திற்கு மீண்டும் மாறி, அனைத்து மக்களும் எவ்வித பேதமும் இன்றி, ஒருதாய் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழும் ஒரு யுகம் நிச்சயம் உருவாகும் என்று கூறினார்.
அரசாங்கம் சிங்கள மக்களுக்கு முன் னுரிமை வழங்கி சிறுபான்மை மக்களை ஓரங்கட்டும் கொள்கையை என்றுமே கடைப் பிடிக்கப் போவதில்லை. இன்று நாட்டில் தோன்றியுள்ள அமைதியும், சமாதானமும், ஐக்கியமும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார்.
இந்நாட்டு மக்கள் அனைவரும் எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக் காக தங்கள் முழுமையான பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கட்டியெழுப்பலாம் என்றும் நியோமல் பெரேரா சுட்டிக் காட்டினார்.
வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த மக்கள் இங்கு வந்து, நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீடு செய்து, கைத்தொழில் மற்றும் பசுமைப் புரட்சி ஒன்றை ஏற்படுத்தினால், நாடு தெற்காசியாவின் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் பிரகாசிப்பதை எந்தவொரு சக்தியினாலும் தடுத்துவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், சில தேசத்துரோக சக்திகள் இலங்கைக்கு எதிராக மேற்கொண்டு வந்த பொய்ப் பிரசாரங்களை நம்பி, பல வல்லரசுகள் எமது நாட்டை சந்தேகக் கண்ணோடு பார்த்து மறைமுகமாக பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் கொண்டுவந்த போதிலும், ஜனாதிபதி அவர்கள் அவற்றை பொருட்படுத்தாமல், நாட்டை பயங்கரவாத பிடியிலிருந்து மீட்டெடுத்து அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தியதனால், வெளிநாட்டு வல்லர சுகள் இலங்கைக்கு எதிராக தாங்கள் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கைகளை கைவிட்டு, இன்று எமது அரசாங்கத்துடன் நல்லுறவை வளர்த்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி, ஐரோப்பிய யூனியன் நாடுகள் இன்று நீட்டிவரும் நேசக்கரத்தை எமது அரசாங்கம் வலுவாக பற்றி, உலக அரங்கில் இலங் கைக்கு கடந்த காலத்தில் இருந்து வந்த அபகீர்த்தியை இல்லாமல் செய்வதில் வெற்றி கண்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த நியோமல் பெரேரா, எமது நாட்டிற்கு அச்சுறுத்தல் தோன்றியிருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எங்களுக்கு முழுமனதுடன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி வந்த, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் நாம் என்றென்றும் நன்றியுணர் வுடன் உறவுகளை வளர்த்துக் கொள்வோம் என்றும் கூறினார்.
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, நாட்டை சகல துறைகளிலும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் இந்த அரசா ங்கத்தின் கரங்களை இலங்கையிலும், வெளிநாடுகளிலுமுள்ள எமது நாட்டு பிரஜைகள் அனைவரும் வலுப்படுத்தி, பூரண ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

0 commentaires :

Post a Comment