யாழ். குடா நாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
விஷேடமாக முப்படையினருடன் இணைந்து செயலாற்றவென விஷேட பொலிஸ் குழுக்கள் மூன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரசேகர தெரிவித்தார்.
இந்த விஷேட பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக புலனாய்வுத் துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், இவற்றை முற்றாக கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் வகையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது பயங்கரவாத செயல்கள் அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர் குடாநாட்டிலுள்ள மக்கள் பீதியடைய தேவையில்லை என்று சுட்டிக்காட்டினார்.
யாழ். குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விஷேட பொலிஸ் குழுக்கள் ஊடாக பல்வேறு கோணங்களில் சிறந்த முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் நிச்சயமாக சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றார்.
கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை உரிய முறையில் கட்டுப்படுத்தும் வகையில் இராணுவம், கடற்படை, விமானப் படையுடன் பொலிஸாரும் விஷேட கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அவர்களது நலனை கருத்திற்கொண்டும் தேவையேற்படும் பிரதேசங்களில் அவ்வப்போது வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், வீதி ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேரங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பில் அவதானிக்கவென தனியான குழுவொன்றும் சேவையில் ஈடுபடும்.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் ஆலோசனைக் கமைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன ரென்றார்.
அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், சில அரசியல்வாதிகள் பாரிய சம்பவங்களாக காண்பிப்பதற்கு முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அவர்களால் கூறப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றார்.
0 commentaires :
Post a Comment